sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 29

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 29

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 29

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 29


ADDED : ஜன 07, 2022 07:22 PM

Google News

ADDED : ஜன 07, 2022 07:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாயோ, தாரமோ ஒரே நீதிதான்!

தாயார் கோசலையை சமாதானப்படுத்தி விட்டதோடு கானகம் செல்ல அவரது அனுமதி பெற்ற நிம்மதியில் மாளிகை நோக்கி வந்தான் ராமன்.

அடுத்து சீதையிடமிருந்தும் விடை பெற்றுச் செல்ல வேண்டும். தந்தையார் இட்ட உத்தரவை நிறைவேற்ற வேண்டிய அவசரத்தில் இருந்தான் ராமன்.

பேரழகு பதுமையாக இருக்கையில் அமர்ந்திருந்தாள் சீதை. கவலை அறிந்திராத நிர்மலமான மனதை, அவளது முகம் பிரதிபலித்தது.

ராமன் உள்ளே வந்த வேகத்தைச் சற்று விநோதமாகப் பார்த்தாள் சீதை. இந்த வேகம் அவனது வழக்கமான நிதானத்திலிருந்து மாறுபட்டது; பரபரப்பைச் சார்ந்தது. அவனுடைய மனதுதான் இப்போது அவனை வழிநடத்துகிறது என்பதை உணர்ந்தாள். புரியாத புதிராக பார்த்தாள்.

''சீதா...'' என்று அவன் அழைத்த தோரணையே வழக்கத்துக்கு மாறாக இருந்தது. அதில் பாசத்தைவிட ஏதோ தீர்மானம் இருந்தது. ''இப்போது அன்னை கைகேயியின் மாளிகையிலிருந்து வருகிறேன். தந்தையாரும் அங்கிருக்கிறார். அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது''

''இதை சந்தோஷமாக சொல்ல வேண்டியதுதானே! தாங்கள் அரியணையில் அமர வேண்டியதை கட்டளையாக ஏன் தெரிவிக்க வேண்டும். உளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ஆசியாக சொல்லியிருக்கலாமே'' சீதை புரியாமல் கேட்டாள்.

''தந்தையார் கட்டளை அதுவல்ல, அது அவருடைய விருப்பம் என்ற அளவிலேயே நின்றுவிட்டது. இப்போது நான் வனம் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது கட்டளை''

''வனம் செல்ல வேண்டுமா. ஏன். சரி, எது முதலில் பட்டாபிஷேகமா அல்லது வனவாசமா''

''இரண்டும்தான். பட்டாபிஷேகம் பரதனுக்கு, வனவாசம் எனக்கு'' என்று ஆரம்பித்த ராமன் நடந்தவற்றை விளக்கமாகச் சொன்னான்.

அவன் சொன்னவற்றைக் கேட்டு சீதையின் முகம் கூம்பியது. ''தந்தை சொல் தட்டாத தனயர் நீங்கள். மறு பேச்சு பேசாமல் அவர் சொன்னதை அப்படியே ஏற்றிருப்பீர்கள், எனக்குத் தெரியும். ஆனால் நாங்களெல்லாம் அதை எப்படி ஏற்க முடியும்''

''துரதிஷ்டவசமாக நீ என்னைச் சார்ந்திருப்பதால், இதை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை''

''உங்களுடைய திட்டம், அடுத்த நடவடிக்கை எதுவானாலும் அதற்குக் கட்டுப்படுவதுதான் என் வழக்கம். இப்போதும் அப்படியே ஏற்கிறேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே நானும் இருப்பதில் ஏன் தயங்க வேண்டும். சரி... நாம் எப்போது கானகத்துக்குப் புறப்படுகிறோம்'' என இயல்பாகக் கேட்டாள் சீதை.

சற்றே திடுக்கிட்டான் ராமன். ''நாம் போகவில்லை சீதா, நான் போகிறேன்...'' என்று அவளைத் திருத்தினான்.

அவனை ஒரு புதிர் போலப் பார்த்தாள் சீதை. பிறகு கேட்டாள் ''என் மாமியார், அதாவது உங்கள் தாயார் கோசலைக்கு விஷயம் தெரியுமா''

''தெரியும்... இப்போது அவர்களை சந்தித்துவிட்டே வருகிறேன். விவரம் சொன்னேன். முதலில் தயங்கினாலும், விளக்கிச் சொன்ன பிறகு ஏற்றுக் கொண்டார்''

''சரிதான், முதலில் தாய் பிறகுதானே தாரம். நீங்கள் வகைப்படுத்தியிருக்கும் வரிசை சரிதான். ஆனால் உங்களை விஸ்வாமித்திரருடன் அனுப்பிய போது இருந்த அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறார்களா''

''இல்லை. வருத்தம் கொண்டிருக்கிறார்கள்''

''இருக்காதா பின்னே. தாய்க்கு தானே மகனின் சுக துக்கம் பற்றிய சிந்தனை அதிகமிருக்கும். நீங்கள் வனத்தில் தனித்து வாழ முழுமனதுடன் சம்மதித்தார்களா''

தாயின் பாசத்தை சீதையிடம் இந்த தருணத்தில் சொல்வது பொருத்தமாக இருக்கும் எனக் கருதினான் ராமன்.

''சம்மதிக்கவில்லைதான். நான் பெறும் வசதிகளைப் பொறுத்தவரை அரண்மனைக்கும் ஆரண்யத்துக்கும் நிறைய வேறுபாடு இருக்கும் என்றார். போஜனம், நித்திரை சுகப் பற்றாக்குறையையும், பிற இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்குமே என துக்கப்பட்டார்கள். இந்த குறைபாட்டால் என் உடல் நலம் குன்றும் என்று அஞ்சுகிறார்கள்...''

''நியாயமான ஆதங்கம்தானே! இதுதானே தாயின் இயல்பான பாசம், பரிவு...''

''சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் சீதா'' என்று அவளைப் பாராட்டினான் ராமன்.

''ஒரு பெண்ணின் மனம், இன்னொரு பெண்ணிற்குத் தெரியாதா. எனக்கு ஒரு தாயின் ஆதங்கம் புரியாதா என்ன''

ராமன் அவளை நெகிழ்ச்சியுடன் பார்த்தான். இவள்தான் எவ்வளவு உத்தமமாகப் பேசுகிறாள்! இவளை நான் மனைவியாக அடைந்ததற்கு பெரும் பேறு செய்திருக்க வேண்டும். ஆனால் என் பிரிவால் இவள் வாடக் கூடும். அந்த ஏக்கத்தைப் போக்க, என் தாயாருடனும், பிற மருமகள்களுடனும் பொழுது போக்கித் தன் மனதை தேற்றிக் கொண்டு விடுவாள். அந்தளவுக்கு அனுசரணையானவள்தான் சீதை...

''உங்களுடன் கூடவே வந்து உங்களுக்கு வாய்க்கு ருசியாக உணவு தயாரித்துக் கொடுத்து உங்களைப் பார்த்துக் கொள்வேன் என தங்களின் தாயார் தெரிவித்திருப்பார்களே''

''ஆமாம், சீதா, அவர்கள் அப்படித்தான் சொன்னார்கள். அது சாத்தியமாகுமா. அவர்களால் இந்த வயதில் அத்தனை சிரமங்களைத் தாங்க முடியுமா''

''முடியாதுதான். நீங்கள் என்ன சொன்னீர்கள்''

''என்னுடன் வர வேண்டாம் என சொல்லிவிட்டேன். அதைவிட அவர்கள் அயோத்தியிலேயே தங்கினால்தான், என் தந்தையாரையும் கவனிக்க முடியும். என் பிரிவால் தந்தையார் மனக் கலக்கம் கொள்ளக் கூடும், அதைப் போக்க மனைவியால்தானே இயலும். அதைத்தான் சொன்னேன்...''

'உண்மைதான். அதுதான் ஒரு மனைவிக்கு அழகு. அதாவது தன் கணவரின் சுக துக்கங்களில் பங்கு ஏற்க வேண்டிய பொறுப்பு மனைவிக்குதான் உண்டு. பெற்ற தந்தையை விட, உடன் வளர்ந்த சகோதரனை விட, கணவனுடன்தான் அவள் நீண்ட நாள் வாழும் வாய்ப்பு பெற்றிருக்கிறாள். பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமையை தந்தையும், சகோதரனும் நிறைவேற்றி விட்ட பிறகு தன் கணவன் பராமரிப்பில் அந்தப் பெண் இல்வாழ்க்கை நடத்துவாள் என்று அவர்கள் இருவரும் நிம்மதி கொள்கிறார்கள். ஆனால் அவளைப் பாதுகாப்பதாகிய கணவனின் பொறுப்பு, அவளுடைய இறுதி காலம்வரை நீடிக்கிறது. அதாவது, இந்த பொறுப்பு பரஸ்பரமானது. கணவனுக்கு மனைவி எப்படியோ அப்படியே மனைவிக்கும் கணவன்...''

ராமன் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

''இந்த வகையில் நீங்கள் உங்கள் தாயாருக்குச் சொன்ன யோசனை சரியானதுதான். அவர்களைவிட தன் கணவரை மிகுந்த பாசத்துடனும், காதலுடனும் பார்த்துக் கொள்ள வேறு யார் இருக்கிறார்கள். அதேசமயம், இந்த யோசனை எனக்கும் பொருந்தும். ஆமாம்... நானும் உங்களுடன் பயணிப்பதுதான் உண்மையான, தர்மமான, அத்தியாவசியமான இல்லறம். ஆகவே உங்களுடன் வருகிறேன்''

''சீதா...'' ராமன் ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

''தாய்க்கு ஒரு நீதி, தாரத்துக்கு ஒரு நீதி என்ற முரணான சிந்தனை உங்களுக்கு வரக்கூடாது. ஏனெனில் நீங்கள் ஒரு தர்மவான். இந்த தர்மத்திலிருந்தும் நீங்கள் பிறழக்கூடாது. ஆகவே நானும் வருகிறேன்''

ராமனால் மறுக்க முடியவில்லை. சம்மதம் சொல்லும் விதமாக மவுனம் காத்தான்.

-தொடரும்

பிரபு சங்கர்

prabhuaanmigam@gmail.com






      Dinamalar
      Follow us