ADDED : ஜன 07, 2022 07:21 PM

அர்ஜுனனாகிய நான்... (தொடர்ச்சி)
அர்ஜுனன் என்பதைத் தவிரவும் எனக்கு பல பெயர்கள் உண்டு. மகாபாரதத்தில் ஓரிடத்தில் நான் இப்படிக் கூறுகிறேன். 'ராஜசூய யாகத்தில் எல்லா மன்னர்களையும் வெற்றி கண்டு அவர்களிடமிருந்து செல்வத்தை வசூலித்தேன். இதனால் எனக்கு தனஞ்ஜெயன் என்று பெயர். நான் ஈடுபட்ட எந்தப் போரிலும் வெற்றி பெறுவேன். இதனால் என்னை விஜயன் என்பார்கள். அக்னி தேவன் எனக்கு அளித்த குதிரைகள் வெண்ணிறம் கொண்டவை. இதனால் என்னை ஸ்வேத வாகனன் என்பார்கள். இந்திர லோகத்துக்கு சென்றபோது இந்திரன் எனக்கு அழகிய ஒரு கிரீடத்தைக் கொடுத்தார். அதனால் கிரீடி என்றும் பெயர் பெற்றேன். போர்க்களத்தில் நியாயமான வழிகளையே பின்பற்றுவேன். இதனால் என்னை ஜிஷ்ணு என்றும் கூறுவார்கள். என்னால் ஒரே சமயத்தில் இரு கைகளாலும் அம்புகளை எய்ய முடியும். இதன் காரணமாக என்னை ஸவ்யஷாசி என்பதுண்டு. நான் பிறந்த நட்சத்திரம் உத்தர பல்குனி. எனவே என்னை பல்குனன் என்பார்கள். கோபம் வரும்போது நான் மிகவும் உக்கிரமானவன் என்பதால் என்னை விபாத்சு என்பர். என் அன்னையின் இயற்பெயர் ப்ரீதா என்பதால் அது மருவி என்னை பார்த்தன் என்ற பெயரில் அழைப்பார்கள். எனக்கு காண்டீபன் என்ற ஒரு பெயரும் உண்டு. சக்தி மிகுந்த என் வில்லின் பெயர் காண்டீபம். இதை எனக்கு அக்னிபகவான் அளித்தார்.
மனதை ஒருநிலைப்படுத்துவது எனக்குக் கைவந்த கலை. ஒரு முறை குருகுலப் பயிற்சியின்போது கவுரவர்கள் மற்றும் எனது சகோதரர்களை ஒவ்வொருவராக ஆசாரியர் துரோணர் அழைத்து தொலைவில் உள்ளமரத்தின் மீது உட்கார்ந்திருந்த ஒரு பறவையைக் குறி பார்க்கச் சொன்னார். மரம் தெரிகிறதா, அதன் கிளை தெரிகிறதா, அதன்மீது உட்கார்ந்து இருக்கும் பறவை தெரிகிறதா என்ற கேள்விகளை ஒவ்வொன்றாக கேட்க அவர்கள் ஒவ்வொருவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் தெரிகிறது என்று பதிலளித்தார்கள். நான் மட்டும் பறவையின் கழுத்து மட்டும்தான் தெரிகிறது என்றேன். மற்றவர்கள் தங்கள் குறியிலிருந்து தவற, நான் மட்டும் குறி தப்பவில்லை. தனது தலைசிறந்த மாணவன் என்று என்னைக் கூறி மகிழ்ந்தார் துரோணர்.
ஆனால் நான் தெளிவின்றிக் குழம்பிய நேரமும் உண்டு. எனினும் அந்தக் குழப்பம் உலகத்துக்கே நன்மை புரிந்தது. பகவத் கீதையைத் தான் குறிப்பிடுகிறேன்.
எனக்கும், எனக்கு தேரோட்டியாக வந்த கண்ணனுக்கும் நடைபெறும் உரையாடல் தான் பகவத் கீதை. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடைபெற்றதுதான் மகாபாரதப் போர்.
போர் தொடங்குவதற்கு முன் எதிரிகளின் சேனை முழுவதையும் காண வேண்டும் என்பதற்காக கண்ணனை போர்க்களத்தின் மையப்பகுதிக்கு தேரை விடச் சொன்னேன். போர் தொடங்குவதற்காகக் காத்திருந்த அனைவரின் முகங்களையும் கண்டேன். என் பாட்டனார் பீஷ்மர். அருகில் குருகுல ஆசிரியராக இருந்து எனக்கு ஆயுதப் பயிற்சிகளை கற்றுக்கொடுத்த துரோணர். தவிர எண்ணற்ற உறவினர்கள். என் மனம் கனத்தது. வில்லைக் கீழே வைத்துவிட்டேன். அவர்களைக் கொல்வது தர்மம் அல்ல என்றுபட்டது. அவர்களுக்கு எதிராக போர் புரிய முடியாது என்றும் நான் போர்க் களத்திலிருந்து வெளியேறப் போவதாகவும் கண்ணனிடம் கூறினேன். வாழ்க்கையின் சாராம்சத்தைப் கேள்விக்கு உட்படுத்தினேன்.
அப்போது கண்ணன் என்னை வழிநடத்தினார். அவர் கூறியதுதான் கீதையின் சாராம்சமாக இருந்தது. உலகில் எப்போது தர்ம நெறிகள் குறைந்து அநீதி பெருக ஆரம்பிக்கிறதோ அப்போது தான் தோன்றி அந்த அநீதியை வேரறுப்பேன் என்றார் கண்ணன். அவரது தெய்வத்தன்மையை ஒருவாறு உணர்ந்து கொண்டேன். என் மனச்சோர்வை போக்கி ஞானத்தை பெறச் செய்வதற்காக அந்தப் போர்க்களத்தில் தனது விஸ்வரூப வடிவத்தை எடுத்து அதை என் கண்களுக்கு மட்டும் தெரியச் செய்தார். போர் செய்வது என் கடமை என்று உணர்ந்தேன். கீழே வைத்த வில்லை மீண்டும் எடுத்தேன்.
அந்தப் போரில் வலிமை மிக்க மன்னர்களான பகதத்தன், சுசர்மன், கர்ணன், ஜராசந்தன், சுதட்சணன் போன்ற பலரையும் கொன்றேன். போருக்குப் பிறகு அண்ணன் யுதிஷ்டிரன் மன்னரானார். அவருடைய பிரதான மந்திரியாக நான் நியமிக்கப்பட்டேன்.
கலியுகம் பிறந்தது. வியாசரின் ஆணைப்படி நாங்கள் ஐந்து சகோதரர்களும் திரவுபதியுடன் சம்சார வாழ்வைத் துறந்து தவம் புரிந்து முக்தி பெற காட்டுக்குச் சென்றோம். அப்போது பரீட்சித்துக்கு முடி சூட்டினோம். என் மகன் அபிமன்யுவின் மகன்தான் அவன். அவனுக்கு முடிசூட்டப்பட்ட நாளில்தான் கலியுகம் பிறந்தது.
-தொடரும்
சீர்காழியில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் உள்ளது புதன் ஸ்தலமான திருவெண்காடு. இதற்கு அருகே திருநாங்கூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள பார்த்தன்பள்ளி.
ஒரு புனித யாத்திரையின் போது அர்ஜுனன் இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். மிகுந்த களைப்பினால் தாகம் ஏற்பட்டது. அருகிலிருந்த அகஸ்திய முனிவர் தன் ஆசிரமத்துக்கு வந்து தாகத்தைத் தணித்துக் கொள்ள சொன்னார். ஆனால் துரதிஷ்டவசமாக ஆசிரமத்தில் வைத்திருந்த அவரது கமண்டத்திலும் நீரில்லை. இது கண்ணபெருமானின் லீலை என்பதை உணர்ந்தார் அகத்தியர். கண்ணனை நோக்கி பிரார்த்திக்கச் சொன்னார். அவனும் அப்படியே செய்ய அங்கு கண்ணன் தோன்றி அர்ஜுனனுக்கு ஒரு வாளைக் கொடுத்தார். அந்த வாளைக் கொண்டு அர்ஜுனன் தரையில் ஒரு கோடு கிழிக்க நீரூற்று தோன்றி அர்ஜுனனின் தாகத்தைத் தணித்தது. கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள இதை கட்க புஷ்கரணி என்கிறார்கள். வைணவர்களின் திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இக்கோயிலில் அர்ஜுனன் கையில் வாளோடு காட்சி தருகிறான். அவனை நினைவுபடுத்தும் வகையில் இக்கோயில் 'பார்த்தன்பள்ளி' எனப்படுகிறது.
ஜெய்ப்பூரில் டோங்க் சாலையில் எஸ்எம்எஸ் மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு அருகே உள்ளது அர்ஜுனனின் பிரம்மாண்ட சிலை. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி சிறப்பிக்கிறது. இதையொட்டியே இச்சிலை எழுப்பப்பட்டுள்ளது. 55 அடி சிலை இது. ராஜ்குமார் சர்மா என்ற சிற்பியின் கைவண்ணம் இது.
வியாசரின் மகாபாரதத்தில் நாக இளவரசியான உலுாபியைத் திருமணம் செய்து கொண்டபின் அர்ஜுனன் தென்னிந்தியாவில் உள்ள புனிதத் தலங்களுக்கு விஜயம் செய்தான். மகாபாரதத்தை தமிழில் எழுதிய வில்லிபுத்துாரார் அர்ஜுனன் திருப்பதிக்கு சென்று விட்டு ஸ்ரீரங்கத்துக்கு வந்ததாக எழுதுகிறார். இதன் விளைவாக ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள மண்டபம் அர்ஜுனன் மண்டபம் எனப்படுகிறது.
ஜி.எஸ்.எஸ்.
aruncharanya@gmail.com