sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 31

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 31

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 31

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 31


ADDED : ஜன 26, 2022 05:01 PM

Google News

ADDED : ஜன 26, 2022 05:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லட்சுமணன் என்ற வழிகாட்டி!

தாயின் அனுமதி கிடைத்து விட்ட சந்தோஷத்தில் தன் மனைவி ஊர்மிளையையும் சமாதானப்படுத்தித் தான் ராமனுடன் கானகம் செல்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் லட்சுமணன்.

உணர்ச்சிவசப்படுதல் என்பது இலக்குவனுடைய இயற்கை குணம். சட்டென உணர்வுகளை வெளிப்படுத்திவிடும் அவசர குணம் அவனுக்கு. அதனால்தான், 'சரி, அண்ணனுடன் புறப்பட வேண்டியதுதான்' என்ற கட்டம் வந்த பிறகுதான், அவனுக்குப் புறவுலகம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுக்கு வந்தது. ஆமாம், தன்னுடைய தாயார் சுமத்திரை, தன்னுடைய இந்த முடிவை எப்படி எதிர்நோக்குவாள். ராமனைக் காட்டுக்கு விரட்டிய பிறகு கைகேயியின் கை ஓங்கும்; குற்ற உணர்வால் பரிதவிக்கும் தசரதனால் முறையாக ராஜ பரிபாலனம் செய்ய முடியாது; அப்படியே செய்தாலும் பரதனுக்கு மகுடாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதால், பட்டமேற்கக்கூடிய பரதனுடைய அதிகாரத்தில் கைகேயியும் பங்கு கொண்டு தன் தாய் உட்பட அனைவரையும் மிரட்டலாம், அடிமையாகக்கூட நினைக்கலாம். கணவனை அடுத்து, தன் மகன் அரியணை ஏறிய பிறகு செல்வாக்கைப் பல மடங்கு பெருக்கிக் கொள்ள அவளால் முடியும்.

சுமித்திரையின் மகனான தான் ராமனுடன் போய்விட்ட பிறகு, தன்னுடைய தம்பி சத்ருக்னன் தன் தாய்க்கு ஆதரவாக இருப்பானா... அல்லது பரதனின் அதிகார போக்கிற்கு பலியாகி விடுவானா. கைகேயியும் பரதனும் சேர்ந்துகொண்டு சத்ருக்னனை தன் தாய்க்கு எதிராக திசை திருப்பமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

தான் ராமனுடன் எங்கும், எதிலும் உடன்பட்டு ஒன்றியிருப்பதுபோலவே, சத்ருக்னன் பரதனுடன் ஒன்றுபட்டிருக்கிறான். இதில் எந்தத் தவறைக் கண்டுபிடிக்க முடியும்.

புத்திர காமேஷ்டி யாக நிகழ்ச்சியின்போதே தசரதன் தன் மூன்றாவது மனைவி சுமத்திரையைப் புறக்கணித்திருக்கிறார் என்றால், அப்போதே கோசலை, கைகேயியின் ஆதரவையும், உதவியையும் சுமத்திரை எதிர்பார்த்து நின்றாள் என்றால், இனி ஒவ்வொரு விஷயத்துக்கும் அவள் அவர்களிடம், குறிப்பாக கைகேயியிடம் கையேந்தி நிற்பதைத் தவிர்க்க முடியாது. அடடா! அதுதான் எவ்வளவு கேவலமான சூழ்நிலை! ஒரு மகாராணி பிச்சைக்காரியாக மாறும் அவலம்! அதுவும் சக்களத்தியரின் தயவுக்காக ஏங்கிக் காத்திருக்க வேண்டிய அகவுரவம்!

'நானும் தாயை தெரிந்தோ தெரியாமலோ புறக்கணித்திருக்கிறேனோ! ராமனையே முழுமையாக மனதில் இருத்திக் கொண்டதால் ஒரு மகன் என்ற உறவில் தாயைக் கொண்டாடாமல், ஒதுக்கி வைத்து விட்டேனோ! நான்தான் இப்படி என்றால் தம்பி சத்ருக்னனும் அம்மாவை அனுசரணையாக நடத்தவில்லையே! அவனும் பரதன் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கிறானே!

'ஆக... தசரதன் முதல் தான்வரை, தன் தாய் ஒரு பொருட்டாக மதிக்கப்படாதவளாக இருந்திருக்கிறாள். இனி...

குழப்பமடைந்தான் லட்சுமணன். தாயா, ராமனா என பார்க்கும்போது அவனுக்கென்னவோ ராமன்தான் முதலில் நிற்கிறான். அதற்காக தாயாரை புறக்கணித்துவிட்டதாகவா அர்த்தம். இல்லை, கோசலை, கைகேயி ஆதரவில் தன் தாயாருக்கு துன்பம் வர வாய்ப்பில்லை என்ற ஆழ்ந்த நம்பிக்கைதான் அதற்குக் காரணம். ஆனால் இனி...

அன்னை சுமித்திரை எளிதாக என்னை ராமனுடன் போவதற்கு அனுமதி அளித்துவிட்டாள் என்றாலும், வரும் பதினான்கு ஆண்டுகளில் அவளுக்கு ஏதேனும் பிரச்னை என்று வருமானால் அப்போது ஆதரவாகவும், அவளுடைய மனம் கோணாதபடியும் பார்த்துக் கொள்பவர் யார்.

ஏன், மனைவி ஊர்மிளை இருக்கிறாளே! ராம அயனத்தில் நான் பங்கேற்று உடன் சென்றால், இங்கே தன் தாயை அன்புடனும் பாசத்துடனும் பார்த்துக் கொள்ள வேண்டியது மகளாகவே ஆகிவிட்ட ஒரு மருமகளின் கடமை இல்லையா. ஆகவே நான் ராமனுடன் காட்டுக்குச் செல்ல ஊர்மிளையின் சம்மதத்தைக் கேட்பது என்பது அவள் இங்கிருந்து தன் மாமியாரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும்தானே!

தன் கணவன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட ஊர்மிளை, அவனுடைய முகத்தில் கலக்கத்தையும், நடையில் தளர்வையும் கண்டாள். சாதாரணமாக, சின்ன விஷயத்துக்கெல்லாம் உடனே எதிர்வினையாற்றக் கூடியவன் அவன் என்பது தெரிந்ததுதான். இப்போது என்ன குழப்பமோ.

''ஊர்மிளை…'' என்று அவன் அழைத்ததில் மிகுந்த பாசமும், கூடவே ஏதோ எதிர்பார்த்தலும் இருந்ததைப் புரிந்து கொண்டாள் அவள். ஏறிட்டு பார்த்தாள்.

''வந்து… நாளைக்கு ராமன் அண்ணாவுக்கு பட்டாபிஷேகம் இல்லை என்றும், அந்த அரியணை பரதனுக்குதான் உரியது என்றும் தந்தை சொல்லிவிட்டார்...'' என்றான்.

ஊர்மிளைக்கு இந்த விஷயம் சற்று முன்தான் தெரிந்திருந்தது. ஆகவே, ''ஆமாம். உங்கள் மூத்த அண்ணனுக்கு இல்லை என்பதால் வருத்தப்படுவதா அல்லது இளைய அண்ணனுக்கு வாய்த்திருக்கிறது என்பதால் சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை..'' என்று சங்கடத்துடன் பதிலளித்தாள் அவள்.

''சிம்மாசனம் இல்லை என்பதோடு, அண்ணா பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது...'' என வருத்தத்துடன் சொன்னான் லட்சுமணன்.

''அடடா, இதென்ன விபரீதம்!''

''ஆமாம். அதனால்... அதனால்...நானும் ஸ்ரீராமனுடன் காட்டிற்குச் செல்ல உத்தேசித்திருக்கிறேன்...''

அதைக் கேட்டு திடுக்கிட்டாலும் உடனே தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் ஊர்மிளை. ''எப்போதுமே அண்ணனைப் பிரியாதவர் நீங்கள். ஆகவே இவ்வாறு முடிவெடுத்திருப்பதில் வியப்பில்லை. சரி, என்னிடம் சொல்கிறீர்களே, இந்த விவரம் உங்கள் தாயாருக்குத் தெரியுமா...''

''தெரியும். அவர்களைப் பார்த்துவிட்டுதான் வருகிறேன். அவர்களிடம் நிலைமையை விவரித்தேன். அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள்...'' என்று சொல்லும்போதே சீதையைப் போல தானும் உடன் வருகிறேன் என்று ஊர்மிளை கேட்டுவிடுவாளோ என்ற அச்சம் அவன் மனதில் எழுந்தது.

ஆகவே அவள் ஏதும் சொல்லுமுன், ''அண்ணியாரும் அண்ணனுடன் வனம் செல்லத் தயாராகி விட்டார்கள். ஆக நாங்கள் மூன்று பேரும் இங்கே இருக்க முடியாதநிலை. பதினான்கு வருடங்களுக்கு என் தாயாருக்கு உற்ற துணையாக நீ விளங்க வேண்டும். கைகேயியாலோ, பரதனாலோ அல்லது வேறு யாராலோ அவருக்கு எந்த அவமரியாதையும், தீங்கும் ஏற்பட்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். உன் சகோதரியும், சத்ருக்னனின் மனைவியுமான சுருதகீர்த்தியை துணை சேர்த்துக் கொள்...''

மெல்லச் சிரித்தாள் ஊர்மிளை. ''நீங்கள் அனாவசியமாக கற்பனை செய்கிறீர்கள். அப்படி ஒரு நிலைமை தாயாருக்கு வரவே வராது. கைகேயி அன்னையாரும், பரதன் அண்ணனும் உங்கள் தாயார் மீது காட்டும் பிரியம், அரவணைத்துக் கொள்ளும் நேர்த்தியை நீங்கள் கவனிக்கத் தவறியிருக்கலாம். ஆனால் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். தனக்குச் சமமாகவே இவரை கைகேயி அன்னையார் நடத்துவதும், பரதன் பாசத்தைப் பொழிவதும் நடந்திருக்கின்றன. ஆகவே எங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

''இதுவரை இந்த அயோத்தியில் உங்களுக்கு ஸ்ரீராமன் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இனி ஆரண்யத்தில் நீங்கள் அவருக்கு வழிகாட்டியாக விளங்குங்கள். ஆமாம், காட்டில் அவருக்கு முன்னே நீங்கள் சென்று பாதையில் இருக்கக்கூடிய கற்கள், முட்செடிகள், அவரது பொற்பாதத்தைத் தீண்டும் ஆவலில் ஓடி வரும் விஷஜந்துக்களை நீக்கியபடி வழிகாட்டிச் செல்லுங்கள். இந்த வகையில் உங்களுடைய ராம சேவையை நீங்கள் தொடருங்கள். சென்று வாருங்கள்'' கண்களில் நீர் பனித்தது லட்சுமணனுக்கு.

-தொடரும்

பிரபு சங்கர்

prabhuaanmigam@gmail.com






      Dinamalar
      Follow us