sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 34

/

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 34

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 34

கதை கேளு.. ராமாயண கதை கேளு... - 34


ADDED : பிப் 16, 2022 10:39 AM

Google News

ADDED : பிப் 16, 2022 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்னைப் பின் தொடராதீர்கள்

தேரைப் பின் தொடர்ந்து வரும் மக்களைச் சற்றே கவலையுடன் நோக்கினான் ராமன். ஒட்டு மொத்த மக்களின் இத்தகையப் பேரன்புக்கு தான் பாத்திரமானதில் அவனுக்கு சந்தோஷம்தான். ஆனால் அவர்கள் தன்னைத் தொடருவதால் அவர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை நினைத்து வருத்தமும் கொண்டான்.

சற்று தொலைவுக்கு தேர் சென்ற பின் மக்களைப் பார்த்து, ''என்னைப் பின் தொடர்ந்து வரவேண்டாம். எனக்கு இடப்பட்ட கட்டளைப்படி நான் பதினான்கு ஆண்டுகள் கழிந்தபின் உடனே அயோத்தி திரும்புவேன். பரதனின் ஆட்சியில் நீங்கள் மகோன்னதம் பெறுவீர்கள். ஆகவே இப்போது திரும்பிச் செல்லுங்கள்'' என கேட்டுக் கொண்டான்.

ஆனால் அவர்கள் திரும்புவதாக இல்லை. இப்படி விடாப்பிடியாக முரண்டு பிடித்தால், ராமன் மனம் மாறி அயோத்திக்குத் திரும்பிவிட மாட்டானா என ஏங்கினார்கள்.

அதனாலேயே வனத்தில் ஒருசில குடில்களில் தங்கியிருந்த சில முனிவர்களை ராமன் தரிசித்து அவர்களிடம் ஆசி பெற்ற போது, தாமும் அவ்வாறே செய்தார்கள். அதோடு அன்றிரவு புல்வெளிகளிலும், ஆற்றங்கரை ஓரத்திலும், மரத்தடியிலும் அமர்ந்தும், படுத்தும் நேரத்தைக் கழிக்க ஆரம்பித்தார்கள். யாரும் ஒரு வாய் தண்ணீர்கூட குடிக்கவில்லை. 'ராமனே எதுவும் உண்ணாத போது நமக்கு எதற்கு உணவும், நீரும்' என்று வைராக்கியமாக 'விரதம்' இருந்தார்கள். ஆமாம், அது பட்டினி அல்ல, தாம் தெய்வம் போலக் கருதும் ராமன் மனம் மாற வேண்டுமே என்ற வேண்டுதலுடன் கூடிய விரதம்தான் அது.

ஆனால் நேரம் செல்லச் செல்ல அவர்கள் தம் இயல்புப்படி மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த ராமனுக்கு நெஞ்சு விம்மியது. கண்களில் நீர் கோர்த்தது. ராமன் ஒரு முடிவுக்கு வந்தான். அறியாத வகையில் இவர்களை விட்டுத் தான் பிரிந்து விடுவதுதான் சரி என்று சிந்தித்தான். உடனே சுமந்திரரை அழைத்தான்.

''சுமந்திரரே, இந்த மக்கள் பொருட்டு தாங்கள் ஒரு பணி மேற்கொள்ளுங்கள்'' என்று ஆரம்பித்தான்.

''நீங்கள் தேரைக் கையாளுவதில் அற்புதத் திறன் கொண்டவர். ஆகவே உறக்கத்தில் இருக்கும் இம்மக்கள் அறியா வண்ணம் ஓசையின்றி, தேரில் அயோத்தி நோக்கிச் சென்று விடுங்கள். நாங்கள் மூவரும் கானகத்திற்குள் எங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துப் புறப்பட்டு விடுகிறோம். விழித்தெழும் மக்கள், தேரின் தடத்தைப் பார்த்து, நான் தேரில் அயோத்திக்குதான் சென்று விட்டேன் என்று கருதி, நாடு திரும்பி விடுவார்கள்'' என்றான் ராமன்.

அப்படியே உற்சாகமிழந்து போனார் சுமந்திரன். ''ராமா, என்ன சொல்கிறாய். அயோத்தியில் உன் தந்தையாரும், தாயார்களும், வசிட்டரும், பிற பிரமுகர்களும், ஏன் எஞ்சியிருக்கும் மக்களும் ஆக அனைவரும் நான் உன்னைத் திரும்ப அழைத்து வந்துவிட மாட்டேனா என்ற ஆதங்கத்தில் காத்திருப்பார்கள். அவர்களை ஏமாற்றமடைய வைக்க என் மனம் கல்லாக இல்லையே ராமா. இந்த பாவத்தை நான் செய்யத்தான் வேண்டுமா...'' என்று கண்களில் நீர் பெருகக் கேட்டார் சுமந்திரர்.

''அமைச்சர் பெருமானே, என் தந்தையார் மீது பழி வந்துவிடக் கூடாதே என்றுதான் நான் பதைபதைக்கிறேன். 'காட்டிற்குப் போ' என்று உத்தரவிடப்பட்ட மகன் மீண்டும் திரும்பி வந்து விடுவானானால், அந்த உத்தரவைப் பிறப்பித்த என் தந்தையார் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடாதா. சொந்த மகன் என்பதால் ஆணையிடுவதாக நடித்து விட்டு, பிறகு சேர்த்துக் கொண்டு விட்டார் என்று அவரைப் பற்றி பிறர் கீழ்மையாகப் பேச ஆரம்பித்து விடுவார்களே! அதற்கு உடந்தையாக இருந்தேன் என்று என் மீதும் பழி வரலாம் அல்லவா. அதுமட்டுமா, இனி தந்தையார் ஏதேனும் வழக்கிற்காக தீர்ப்பு சொல்ல வேண்டி வந்தால், 'இதுவும் போலியான தீர்ப்புதானோ' என்று என்னை உதாரணமாக வைத்து அவரை கேலிக்குரியவராக மக்கள் ஆக்கி விடுவார்களே! நான் அதற்கெல்லாம் இடம் கொடுக்கலாமா. என் இயல்பு மாறாமல், என் அடிப்படை பண்பு மாறாமல் இருக்க வேண்டுமானால் என்னை தயவுசெய்து வற்புறுத்தாதீர்கள்''

சுமந்திரன் மிகுந்த மதிப்புடன் ராமனைப் பார்த்தார். நற்குணங்களின் ஒட்டுமொத்த உருவமாக அவன் நெடிதுயர்ந்து நிற்பது கண்டு நெஞ்சம் பூரித்தார். ''அப்படியே செய்கிறேன், ராமா. நான் அயோத்தி திரும்புகிறேன்'' என்று மனவேதனையை மறைத்துக் கொண்டு சொன்னார்.

''என் தந்தையாரிடம் இனியும் மனக்கலக்கம் கொள்ள வேண்டாம் என நான் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டதாகத் தெரிவியுங்கள். பட்டாபிஷேகம் காணும் பரதனுக்கு தந்தைக்கும் மேலாக, ஓர் ஆசானாக அவர் விளங்க வேண்டும். குலகுரு வசிட்டரிடம் என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்களைத் தெரிவியுங்கள். இவர்தான் என் பிரிவால் என் தந்தையாருக்கு ஏற்பட்டுள்ள வேதனையைத் தீர்க்க முடியும். தம்பி பரதனுக்கு என் ஆசிகளைத் தெரிவியுங்கள். மகா குரு வசிட்டரின் அறிவுரைப்படியும், வழிகாட்டலிலும், தந்தையாரின் அனுசரணையுடன் நாட்டைத் திறம்பட நடத்திச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புவதாகச் சொல்லுங்கள்''

ராமன் தொடர்ந்து சொல்லச் சொல்ல சுமந்திரன் கண்களிலிருந்து நீர் பெருகியது. மெல்ல லட்சுமணனை நோக்கினார்.

அவனோ கோபம் தணியாதவனாகவே இருந்தான். ''அண்ணல் ராமனை அநியாயமாக ஆரண்யத்துக்கு அனுப்பிவிட்டவர் தந்தையே ஆனாலும் பாசம் காட்டத் தகுதியானவரா. இல்லை. அவரிடம் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. அதே போல பரதனுடன் நான் பிறக்கவில்லை, அதோடு, ராமனைக் காட்டிற்கு அனுப்ப ஒரு காரணமாக இருந்தான் என்பதாலேயே அவனை என் அண்ணன் என்று மதிக்கவும் எனக்குத் தோன்றவில்லை. அவர்களை என் நினைவிலிருந்து நான் முற்றிலும் அகற்றிவிட்டேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்'' என்றான் கடுமையாக.

மேலும் அவன் கோபத்தை வெளிப்படுத்திவிடக் கூடாதே என்பதற்காக ராமன் அவனைத் தொட்டு ஆறுதல்படுத்தினான்.

சுமந்திரர் மிகுந்த வேதனையுடன் சீதையைப் பார்த்தார்.

தயக்கத்துடன் ராமனைப் பார்த்தபடியே பேசினாள் சீதை. ''சக்கரவர்த்திக்கும், மாமியார்க்கும் என் பணிவான வணக்கங்களைத் தெரிவியுங்கள் மந்திரியாரே. நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது'' என்று கேட்ட அவள், மிகவும் வெகுளியாக, ''என் தங்கையரிடம், நான் வளர்த்த நாகணவாய் பறவையையும், கிளியையும் அன்போடு பாதுகாக்குமாறு சொல்கிறீர்களா'' என்று கேட்டாள்.

அந்தச் சூழ்நிலையிலும் அவளுடைய அப்பாவித்தனமான பேச்சு மெலிதான சிரிப்பை வரவழைத்தது சுமந்திரருக்கு.

''சுமந்திரரே, ஒரு விண்ணப்பம்'' என்று ஆரம்பித்தான் ராமன். ''பொதுவாக தேரில் ஓரிடத்திற்குப் பயணம் சென்றால், திரும்பும் நாளில் அதன் சக்கரங்கள் மற்றும் பிற பாகங்களை சுத்தமாகத் துடைத்து துாய்மைப்படுத்துவது வழக்கம். ஆனால் நீங்கள் அப்படி எதுவும் செய்து விடாதீர்கள். சக்கரத்தில் படிந்திருக்கும் சேறு, செடி,கொடிகளின் அறுபட்ட இலைகள், சிறு கிளைகளை ஆகியவற்றை நீக்காமல் அப்படியே அயோத்தி செல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் எங்களைக் காட்டில்தான் விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள் என்று தாயார் கைகேயி நம்புவார்கள்''

விசும்பல் பீறிட்டது சுமந்தரரிடமிருந்து. பிறகு மூவரிடமிருந்தும் மிகுந்த மனத்தாங்கலுடன் விடை பெற்றார். அவரை இருகரம் கூப்பி வணங்கிய ராமன், சீதை லட்சுமணனை அழைத்துக் கொண்டு அந்த நள்ளிருளில் மெல்ல நடை பயின்றான்.

காலையில் துயிலெழுந்த மக்கள் தேரைக் காணாமல் திடுக்கிட்டார்கள். ஆனால் அதன் சக்கரத் தடம் அயோத்தி நோக்கி செல்வது கண்டு மகிழ்ச்சி கொண்டார்கள். ஆமாம், ராமன் ஊருக்குத் திரும்பிவிட்டான் என்று சந்தோஷப்பட்டார்கள். உடனே ஆரவாரத்துடன் அயோத்தி நோக்கிச் சென்றார்கள்.

- தொடரும்

பிரபு சங்கர்

prabhuaanmigam@gmail.com






      Dinamalar
      Follow us