sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மகாபாரத மாந்தர்கள் - 32

/

மகாபாரத மாந்தர்கள் - 32

மகாபாரத மாந்தர்கள் - 32

மகாபாரத மாந்தர்கள் - 32


ADDED : மார் 24, 2022 04:58 PM

Google News

ADDED : மார் 24, 2022 04:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுபத்திரை ஆகிய நான்..

பலராமர், கண்ணன் ஆகிய இருவரையும் சகோதரர்களாகப் பெற்ற பாக்கியவதி நான். வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்தவர் கண்ணன். வசுதேவருக்கும் ரோகிணி தேவி என்ற அவரது மற்றொரு மனைவிக்கும் பிறந்தவர்கள் பலராமரும் நானும்.

கண்ணன் தன் மாமன் கம்சனைக் கொன்ற பிறகு சிறையில் இருந்து என் தந்தையை மீட்டார். அதற்குப் பிறகு பிறந்தவள் நான். எனவே என் சகோதரர்களை விட நான் மிக இளையவள். எனவே அவர்களுக்கு மிகவும் செல்லம்.

ஓர் இளவரசியாக நான் செல்வாக்குடன் வளர்ந்தேன். அர்ஜுனரின் பராக்கிரமங்களைப் பற்றி கேள்விப்பட்டு வியந்தேன். ஒருமுறை அர்ஜுனர் குறித்து நான் யோசித்த போது அங்கு வந்த கண்ணன் 'அவன் உனக்கு ஏற்றவன்தான்' என்று புன்னகையுடன் கூறிவிட்டுச் சென்றார். அர்ஜுனர் எனக்கு உறவினர்தான். பாண்டவர்களின் அன்னை குந்திதேவி எனது தந்தையான வசுதேவருக்கு தங்கை முறை.

ஒருமுறை தன் சகோதரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் தனக்குத்தானே ஒரு தண்டனையை விதித்துக் கொண்டார் அர்ஜுனர். அது அவர்களை விட்டு ஒரு வருடம் பிரிந்து இருப்பது என்பதுதான். அப்படிப் பிரிந்து இருந்தபோது பல இடங்களுக்குச் சென்றார்.

துவாரகையில் என்னைக் கண்ட அர்ஜுனர் என் மீது மையல் கொண்டார். ஒரு துறவியின் வேடமிட்டு அரண்மனைக்கு அருகே உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்ததைப் போல இருந்தார். அவர் மனதில் அப்போது இருந்தது என் உருவம்தான் என்பது எனக்கு அப்போது தெரியாது.

அரண்மனையில் சயனம் செய்து கொண்டிருந்த கண்ணன் முகத்தில் இதுகுறித்து அறிந்ததும் ஒரு புன்னகை தோன்றியது. அதற்கான காரணத்தை சத்யபாமா அவரிடம் வினவினாள். என் மனம் அர்ஜுனர் பால் சென்றதையும், அர்ஜுனர் என்னை அடைய வேண்டும் என்று துரத்திக்கொண்டு வந்திருப்பதையும் குறிப்பிட்டார் கண்ணன்.

அர்ஜுனர் இருக்கும் இடத்தை அடைந்தார் கண்ணன். 'துறவி வேடத்தில் இருந்துகொண்டு என் தங்கையை நினைத்துக் கொண்டிருக்கிறாயே' என்று கண்ணன் கேலி செய்ய, அர்ஜுனர் வெட்கப்பட்டார். என்னை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்தார் கண்ணன்.

ஆனால் இதனால் புதிய சிக்கல்கள் முளைத்தன. என்னை துரியோதனனுக்கு திருமணம் செய்து வைப்பதாக என் அண்ணன் பலராமன் வாக்குக் கொடுத்து விட்டார். இதில் என் சம்மதத்தை அவர் கேட்கவில்லை.

திருமண நாள் நெருங்கி விட்டது. க்ஷத்ரிய முறைப்படி என்னை அர்ஜுனர் கவர்ந்து செல்லலாம் என்று கூறினார் கண்ணன்.ஏனென்றால் தன் அண்ணன் பலராமனின் மனதை மாற்றுவது இயலாத காரியம் என்று அவருக்குப் பட்டது.

கண்ணனின் ஆலோசனையின்படி அர்ஜுனரும் நானும் ஒரு தேரில் அங்கிருந்து கிளம்பினோம். பின்னால் வந்த யாதவ சேனையை கண்ணன் தடுத்து நிறுத்தினார். எங்களுக்கு இன்னொரு ஆலோசனையையும் கண்ணன் கூறியிருந்தார். தேரை நான் ஓட்ட, அர்ஜுனர் பின்னால் அமர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் அது. அவர் இப்படிக் கூற காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. அதன்படியே தேரை ஓட்டிச் சென்றேன்.

துவாரகையில் அண்ணன் பலராமன் மிகவும் கொதித்துப் போயிருந்தார். தன் தங்கையைக் கவர்ந்து சென்ற அர்ஜுனரைப் பழி வாங்காமல் விடமாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் கண்ணனோ, 'அர்ஜுனன் நம் தங்கையைக் கவர்ந்து செல்லவில்லை. அவளாகவே விரும்பித்தான் சென்றாள். இது நமது வழக்கப்படி ஏற்கத்தக்கது தானே' என்றார். ஏதுமறியாத தங்கள் தங்கையை அர்ஜுனன்தான் கவர்ந்து சென்றான் என்று பலராமன் மீண்டும் கூற, ரதத்தை ஓட்டியது நான்தான் என்பதைக் கூறினார். எனவே என் முழு சம்மதத்துடன் தான் அர்ஜுனர் அழைத்துச் சென்றார் என்று அழுத்தமாக தெரிவித்தார் கண்ணன். யாதவப் படையினரும் ரதத்தை ஓட்டியது நான்தான் என்பதற்கு சாட்சி கூறினர். பிறகு பலராமர் சமாதானம் அடைந்தார்.

இந்திரப்பிரஸ்தத்தை அடையும்வரை தைரியமாக இருந்த எனக்கு அந்த நகரம் நெருங்க நெருங்க பயம் ஏற்பட்டது. அர்ஜுனர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதும் திரவுபதி இந்திரப்பிரஸ்த அரண்மனையில்தான் வசிக்கிறார் என்பதும் எனக்குத் தெரிந்ததுதான்.

அரண்மனையில் குந்தி தேவியும் பிற பாண்டவர்களும் காத்திருந்தனர். அவர்கள் அன்புடன் வரவேற்றனர். ஆனால் திரவுபதி வாசலுக்கு வரவில்லை. அவரது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பணியாளைப் போல வேடமிட்டு நான் திரவுபதியை அடைந்து நமஸ்கரித்தேன். 'அக்கா, நான் உங்கள் பணிப்பெண்ணாக சேவை செய்கிறேன். உங்கள் இடத்தைக் கவர வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை' என்றேன். திரவுபதியின் மனம் குளிர்ந்தது. தவிர நான் கண்ணனின் தங்கை என்பதும் எனக்கு சாதகமாக அமைந்தது. அதற்குப் பின் என்னைத் தன் சகோதரியாகவே நடத்தினார்.

அர்ஜுனருக்கும் எனக்கும் பிறந்தவன்தான் அபிமன்யு. பாரதப் போரில் வீர மரணம் அடைந்தவன். என் மகன் வழிப் பேரனான பரீட்சித்துதான் பாரதத்தை ஆட்சி செய்தான்.

-தொடரும்

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது புரி ஜெகநாதர் கோயில். பத்தாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. ராமானுஜர், ராமானந்தர், மத்வாச்சாரியார், வல்லபாச்சாரியார் போன்ற மகான்கள் இதனோடு சம்பந்தப்பட்டுள்ளனர். கோயிலுக்கு அருகில் ஆதிசங்கரர் நிறுவிய மடம் உள்ளது.

முக்கிய தெய்வங்களான ஜெகன்னாதர், பலராமர், சுபத்திரை ஆகியோரின் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணப்படும் வகையில் உள்ளனர். மூன்று திருமேனிகளும் மரத்தால் ஆனவை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிய சடங்குகளுடன் புதிய மரத்தில் சிலைகள் நிறுவப்படுகின்றன.

அதிகாலை முதல் நள்ளிரவு வரை தரிசனத்துக்கு திறந்திருக்கும். நான்கு லட்சம் சதுரடி பரப்பு கொண்ட இக்கோயிலை 20 அடி உயரச் சுவர்கள் பாதுகாக்கின்றன. இதனுள் 120 தெய்வங்கள் உள்ளன. ஒடிசா கோயில்களில் மிக உயரமான கோபுரம் இங்குதான் உள்ளது. உயரம் 214 அடி.

முக்கிய நுழைவாயிலை சிங்க நுழைவாயில் என்பர். இதன் இருபுறமும் சிங்கங்களின் சிலைகள் உள்ளன.புரி ஜெகன்னாதரின் ரத யாத்திரை பிரபலமானது. அதில் மூன்று ரதங்கள் உலா வரும். தேரோடும் ரத்ன வீதியை புரி நகர மன்னர் தங்கத் துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்வார். முதலில் பலராமரின் தேரும் அதற்குப் பிறகு சுபத்திரையின் தேரும் மூன்றாவதாக ஜெகன்னாதர் தேரும் புறப்படும்.

ஜி.எஸ்.எஸ்.

aruncharanya@gmail.com






      Dinamalar
      Follow us