sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

வியக்க வைக்கும் நினைவாற்றல்

/

வியக்க வைக்கும் நினைவாற்றல்

வியக்க வைக்கும் நினைவாற்றல்

வியக்க வைக்கும் நினைவாற்றல்


ADDED : மார் 24, 2022 04:55 PM

Google News

ADDED : மார் 24, 2022 04:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜாதி, மதம், மொழி, இனம் என வேற்றுமை பாராட்டாமல் சமரசத்தின் வடிவமாக வாழ்ந்தவர் காஞ்சி மஹாபெரியவர். அவர் மீது அன்பும், பக்தியும் கொண்டவர்களில் ஒருவர் நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில். மஹா பெரியவரைச் சந்தித்து தான் உரையாடிய அனுபவங்களை விவரித்தால் அதுவே ஒரு புத்தகமாகி விடும் என்கிறார் அவர்.

1985ம் ஆண்டில் ஒருமுறை காஞ்சிபுரம் மடத்திற்கு இஸ்மாயில் வந்தார். புன்னகையுடன் வரவேற்ற பெரியவரிடம் தான் எழுதிய 'கம்பன் கண்ட சமரசம்' 'மூன்று வினாக்கள்' என்னும் புத்தகங்களைக் கொடுத்தார்.

அதில் 'சமரசம்' என்பதை சுட்டிக்காட்டி, 'இதில் சமய ஒருமைப்பாடு பற்றி எழுதியிருக்கிறீர்களா...' எனக் கேட்டார் மஹாபெரியவர். சைவ, வைணவ ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் கம்பராமாயணப் பாடல்களை விவரித்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு உதாரணமாக,

'அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்

என்று

உரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று

அடைவு அரிய பரிசே போல்...' என்னும் பாடலை நிறுத்தி விட்டு, கம்பராமாயண புத்தகம் இருந்தால் பார்த்து சொல்வேன் என்றார் இஸ்மாயில்.

மஹாபெரியவர் அருகில் இருந்தவரிடம் கம்பராமாயணம், 'பொன்விழா மாலை' என்ற புத்தகங்களை எடுத்து வரச் சொன்னார். கும்பகோணம் அத்வைத சபையினரால் 1945ல் வெளியிடப்பட்ட புத்தகம்தான் 'பொன்விழா மாலை'. அதில் 'கம்பராமாயணத்தில் அத்வைதம்' என்னும் தலைப்பில் சீனிவாசன் என்பவர் எழுதிய கட்டுரை இருந்தது. அதை எடுத்து இஸ்மாயிலை படிக்கச் சொன்னார்.

'அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு' எனத் தொடங்கும் ராமாயணப் பாடல் பற்றியதாக அக்கட்டுரை இருந்தது. அதன் சுருக்கம் இதுதான். 'சரியான வெளிச்சம் இல்லாத இடத்தில் ஒரு மாலை விழுந்து கிடக்க அதைப் பாம்பு என கருதியவனுக்கு நிஜப் பாம்பைக் கண்ட பயம் ஏற்படுவது போல பஞ்சபூதங்களின் விகாரத்தால் தோன்றும் இந்த உலகத்தை உண்மை என்று எண்ணி அஞ்ஞானிகள் மயங்குவர். ஆனால் ஞானிகளோ தான் காண்பதெல்லாம் மாயத்தோற்றம் என்றும், உண்மையில் இருப்பது பரம்பொருள் ஒன்றே என்ற தெளிவுடன் இருப்பர். அத்தகைய பரம்பொருளே தன் கையில் வில்லை ஏந்தியபடி இலங்கையில் அரக்கர்களுடன் போரிட வந்தது என கம்பர் விளக்குவதாக மஹாபெரியவர் குறிப்பிட்டார்.

கம்பர் வைணவராக இருந்தாலும் தன் இஷ்ட தெய்வமான ராமரை பற்றி விளக்கும் போது அத்வைத தத்துவமாகச் சொல்கிறார். இது சைவம், வைணவம் என்ற பாகுபாடு இல்லாமல் சமரச நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இப்படி புதிய கோணத்தில் கம்பராமாயணத்தை சிந்திக்க வேண்டும் என்பதை மஹாபெரியவர் மூலமாக அறிந்த இஸ்மாயில் மகிழ்ந்தார். பெரியவரின் தெளிந்த ஞானம், 1945ல் வெளியான புத்தகத்தில் ஒருமுறை படித்த விஷயத்தை குறிப்பிடும் நினைவாற்றல் ஆகியவற்றைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தார் இஸ்மாயில்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* எல்லோருக்கும் நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இருமுறையும் இஷ்ட தெய்வத்தை வாய்ப்பு கிடைக்கும் போதும் தரிசியுங்கள்.

* மனதை கெடுக்கும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.

* இன்று செய்த நன்மை, தீமைகளை உறங்கும் முன் சிந்தியுங்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.

'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்

எஸ்.கணேச சர்மா

ganesasarma57@gmail.com






      Dinamalar
      Follow us