ADDED : மார் 14, 2022 02:14 PM

'கற்றவர் சிறந்த காஞ்சி', 'கல்வியில் கரையிலாக் காஞ்சி' என காஞ்சியின் சிறப்பை போற்றுவர். இங்கு தான் அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபட்ட ஆதிசங்கரர் வெற்றி பெற்று காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவினார். இதன் அறுபத்து எட்டாவது பீடாதிபதியாக ஆட்சி செய்தவர் காஞ்சி மஹாபெரியவர். ஆதிசங்கரரின் அவதாரமாகவே உலகம் இவரைக் கொண்டாடுகிறது. அதற்கேற்ப ஞானம், அன்பு, கருணை, மதிநுட்பம் நிறைந்தவராக அவர் திகழ்ந்தார். இதற்கு உதாரணமான சம்பவங்களை இங்கு காண்போம்.
1957 இறுதி முதல் 1959 ஆரம்பம் வரை சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லுாரியில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அப்போது மஹாபெரியவரின் அன்றாடப்பணிகளை படம் பிடித்து பத்திரிகையில் வெளியிட எழுத்தாளர் பரணீதரன் விரும்பினார். புகைப்படம் எடுப்பதை பெரியவர் விரும்பாவிட்டாலும் பக்தர் என்ற முறையில் அனுமதி அளித்தார். புகைப்படக்காரர் மூலம் குளத்தில் மஹாபெரியவர் நீராடுவதை படம் பிடித்தார். அன்றிரவில், 'இன்று அதிகாலையில் படம் பிடித்தாயே... எப்படி வந்திருக்கு?'' என்று பெரியவர் கேட்க சந்தேகம் உண்டானது. படத்தை எடுத்து பார்த்தார். அருமையாக பதிவாகியிருந்தது. சந்தேகப்படுகிறாரே என படத்தை பெரியவரிடம் காட்ட, 'இதற்கு என்ன விளக்கம் எழுதுவாய்' எனக் கேட்டார். 'காலையில் நீராடும் காட்சி' என்றார். புன்னகைத்த பெரியவர், 'சரி... இந்த படத்தை பார்த்தால் காலை நேரம் போல தெரியவில்லையே... அர்த்த ராத்திரி போல் அல்லவா தோன்றுகிறது'' என்றார். மேலும், ''காலையில் பிளாஷ் போட்டு எடுக்கும் போதே நினைச்சேன். இருட்டு போலத்தான் இருக்கும்னு, போனால் போகட்டும். நாளை சூரியன் உதயமாகி வெளிச்சம் வந்தபின் நீராடுகிறேன். அப்போது படம் பிடித்தால் பகல் மாதிரி இருக்கும்'' என்றார். பெரியவரின் மதிநுட்பம் கண்டு ஆச்சரியப்பட்டார்.
மஹாபெரியவரிடம் அனுமதி கேட்காமல் படம் படித்தால் என்னாகும் என்பதை 1972ல் நடந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. தொழிலதிபரான வி.ஜி.பன்னீர்தாஸ் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த மஹாபெரியவரை தரிசிக்க குடும்பத்துடன் ஒருமுறை வந்தார். காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலர் பாண்டுரங்கன், புகைப்படக்காரர் ஒருவரும் அவர்களுடன் வந்திருந்தனர். ''சுவாமிகளிடம் அனுமதி கேட்ட பின்னர் புகைப்படம் எடுக்கலாம்'' என பாண்டுரங்கன் தெரிவித்தார். 'பெரியவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்க மாட்டார். நாமாகத் தான் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்'' என மறுத்து விட்டார் பன்னீர்தாஸ்.
வேலுாரில் 10,000 வீடுகள் கட்டி, அவற்றை வீடு இல்லாதவர்களுக்கு தவணை முறையில் கொடுக்க விரும்புவதாகவும் அதற்காக மஹாபெரியவரின் ஆசியை வேண்டுவதாகவும் பன்னீர்தாஸ் தெரிவித்தார். ஆசியளித்து பிரசாதம் அளித்த பெரியவர், ''வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடு அளிப்பது நல்ல விஷயம் தான். சேவை மனப்பான்மையுடன் இதில் ஈடுபட்டால் நல்லதே நடக்கும்'' என வாழ்த்தினார். அதற்குள் மஹாபெரியவரை முன்னிறுத்தி இருபது படங்கள் வரைக்கும் புகைப்படக்காரர் எடுத்தார். ஆனால் ஒன்றும் பதிவாகவில்லை. அதையறிந்த பன்னீர்தாஸ் அதிர்ச்சியடைந்தார். ''கண் கண்ட தெய்வம் என்றால் அது காஞ்சி மஹாபெரியவர் தான்; தரமான கேமராவை பயன்படுத்தியும் கூட சுவாமிகளை படம் பிடிக்க முடியாமல் போனதே... இருந்தாலும் அவரது ஆசியே போதும்'' என்று சொல்லி விடைபெற்றார்.
'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்
எஸ்.கணேச சர்மா