ADDED : ஏப் 21, 2022 01:44 PM

பாண்டுவாகிய நான் ...
என் தாய் காசி நாட்டு இளவரசியாக விளங்கிய அம்பாலிகை. பின்னர் அவர் ஹஸ்தினாபுர மன்னனாகவும் பீஷ்மரின் தம்பியாகவும் விளங்கிய விசித்திரவீரியனின் மனைவியானார். இளவயதிலேயே நோய்வாய்ப்பட்டு விசித்திரவீரியன் இறந்து விட்டார். எனவே ஹஸ்தினாபுரத்துக்கு வாரிசு இல்லாமல் போனது. பெரியப்பா பீஷ்மரோ திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று சத்தியம் செய்தவர். இந்த நிலையில் என் தந்தை வழிப்பாட்டி சத்யவதி, மகரிஷி வியாசரை ஹஸ்தினாபுரத்து வாரிசு உருவாக உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
இதில் வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்தவர் திருதராஷ்டிரன். வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்தவன் நான். வியாசருக்கும் பரிஸ்ராமி என்ற பணிப்பெண்ணுக்கும் பிறந்தவன் விதுரன். எனினும் நாங்கள் மூவரும் மன்னர் விசித்ரவீரியனின் வாரிசுகளாகவே கருதப்பட்டு வளர்ந்தோம்.
திருதராஷ்டிரன் மிகவும் பலசாலி. பல யானைகளுக்கு ஒப்பான பலம் படைத்தவன். விதுரன் மிகவும் அறிவாளி. ஞானவான். நீதி பரிபாலனத்தில் கைதேர்ந்தவன். நான் இளம்வயதிலேயே இறந்து விட்டதாலோ என்னவோ என்னைப்பற்றிய தகவல்களைப் பலரும் அறிந்து கொள்ளவில்லை. ஒரு காலகட்டத்தில் பாரதத்தின் தலைசிறந்த மன்னன் என்று அறியப்பட்டவன் நான்.
சூரசேனன் என்ற மன்னனின் வளர்ப்பு மகள் குந்தி. அவள் சுயம்வரத்தில் எனக்கு மாலையிட்டு மனைவியானாள். அதற்கு முன்பாகவே காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை அண்ணன் திருதராஷ்டிரன் மணமுடித்திருந்தார்.
குந்தியை அடுத்து மாத்ர நாட்டு இளவரசி மாத்ரியை எனக்கு மணமுடித்து வைத்தார் பெரியப்பா பீஷ்மர்.
குந்தியையும் மாத்ரியையும் மணந்த பிறகு நான் பல நாடுகளுக்குப் படையெடுத்தேன். ஹஸ்தினாபுரத்தின் மன்னனாக விளங்கிய விசித்திரவீரியன் பலவீனமானவர். அவரது ஆட்சி குறிப்பிடத்தக்கதாக இல்லை. எனவே இழந்த குரு வம்சத்தின் பொலிவை மீண்டும் பெற்றுத் தர முடிவெடுத்தேன். அதனால்தான் அந்த திக்விஜயம். பெரும்படையுடன் கிளம்பிய நான் பல பகுதிகளை வென்று அவற்றை ஹஸ்தினாபுரத்துடன் இணைத்தேன். வேறு சில பகுதிகளின் மன்னர்களை எங்கள் தலைமையை ஏற்கச் செய்தேன். சிந்து, அங்கம், கலிங்கம், மகதம், விதேகம், புண்டரம் போன்ற நாடுகள் எங்கள் வசமாயின. பாரதத்தின் தலை சிறந்த மன்னனாக நான் கருதப்பட்டேன். நாட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டவன் நான். அதுவே ஒரு நாள் என் விதியை மாற்றி அமைத்தது. ஒருநாள் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது இரண்டு மான்கள் உல்லாசமாக இருப்பதைப் பார்த்தேன். அவற்றின்மீது அம்பை செலுத்திவிட்டேன். அம்புகள் தைத்தவுடன் அவை மனித உருவை எடுத்தன. அதாவது கிண்டமர் என்ற பெயர் கொண்ட ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவை எடுத்து இணைந்திருந்த போது என் அம்புகள் அவர்கள் மீது பாய்ந்து விட்டன.
'வேட்டையாடுவது மன்னர்களின் வழக்கமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் நாட்டிலுள்ள உயிர்களின் மீது கருணையும் காட்ட வேண்டும். என்னதான் மான் வடிவில் இருந்தாலும் நானும் என் மனைவியும் மிக நெருக்கமாக இருந்தபோது நீ எங்கள் மீது அம்பு எய்திருக்கக் கூடாது. எனவே உனக்கு சாபம் அளிக்கிறேன். உன் மனைவியை மோகவயப்பட்டு நெருங்கும்போது நீ இறந்து விடுவாய்'. இப்படிக் கூறிவிட்டு அவரும் மனைவியும் இறந்தனர்.
நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். ஹஸ்தினாபுர அரசுக்கு வாரிசுகள் தோன்றுவதில் மீண்டும் சிக்கலா.
அரியணையைத் தற்காலிகமாகத் துறந்து வனத்துக்குச் சென்று தவம் மேற்கொள்ள தீர்மானித்தேன். மறுத்தும் கேட்காமல் குந்தியும் மாத்ரியும் என்னுடன் வனத்துக்கு கிளம்பினர். சைத்ரரத மலையை அடைந்தோம். பின் இமய மலையை நோக்கி பயணமானோம். இறுதியாக ஷடஸ்ருங்க மலையை அடைந்தோம். அந்தப் பகுதியில் தவம் செய்யத் தொடங்கினேன். அது பல ரிஷிகளும் சித்தர்களும் வாழ்ந்த இடம். என் புலன்களை வெற்றிகொண்டு வாழ்ந்தேன். குந்தியும் மாத்ரியும் இதற்கு ஒத்துழைத்தனர்.
அதேசமயம் என் அண்ணி காந்தாரி கருவுற்றிருந்த செய்தி எங்களை எட்டியது. என் மனைவிகளுக்கும் குழந்தை பெறும் ஆசை வந்தது. முக்கியமாக குந்தி இதுகுறித்து பலமுறை என்னிடம் பேச தொடங்கினாள். வேறுவழியின்றி ரிஷியால் நான் பெற்ற சாபத்தை அவளிடம் பகிர்ந்து கொண்டேன். அவள் திடுக்கிட்டாள்.
'குந்தி, ராஜ்ய வாரிசுக்காக சில மாற்று வழிகளைப் பயன்படுத்தி குழந்தைகளைப் பெற ராஜநீதி அனுமதிக்கிறது. நானே அப்படிப் பிறந்தவன்தான். எனவே நீ வேறு ஒருவரின் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்' என்று நான் கூற, குந்தி அதற்கு மறுத்தாள். பிறகு அதுவரை தான் கட்டிக்காத்த ஒரு ரகசியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். சிறுமியாக இருந்த போது துர்வாச முனிவருக்கு அவள் மிகச்சிறந்த பணிவிடைகளைச் செய்ய, அவர் அவளுக்கு சில மந்திரங்களை அருளியிருக்கிறார். இதன் மூலம் எந்த தெய்வத்தை வணங்கியபடி அவள் அந்த மந்திரத்தைக் கூறுகிறாளோ
அந்த தெய்வ அம்சமாக அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும்.
'எமதர்மனை வணங்கி மந்திரத்தை கூறு. நாட்டை தர்மம் தவறாமல் ஆட்சி செய்ய நமக்கு ஒரு மகன் கிடைக்கட்டும்' என்றேன். இதன் விளைவாக யுதிஷ்டிரன் பிறந்தான்.
அடுத்து பலமான ஒரு மகன் வேண்டும் என விரும்பினோம். வாயு தேவனை குந்திதேவி வேண்டி துர்வாசர் அருளிய மந்திரத்தைக் கூற, பீமன் பிறந்தான். தொடர்ந்த காலகட்டத்தில் காந்தாரி அண்ணி துரியோதனனைப் பெற்றெடுத்த தகவல் எங்களை எட்டியது.
ஆயுதப் பயிற்சியில் நிகரற்ற மகன் ஒருவன் வேண்டுமென்று நானும் குந்தியும் முடிவெடுத்தோம். அந்த மந்திரத்தை குந்தி இந்திரனை எண்ணிக் கூற, அர்ஜுனன் பிறந்தான்.
மேலும் சில வாரிசுகள் எனக்கு வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். குந்திக்கு மூன்று மகன்கள் பிறந்ததில் மாத்ரிக்கு மகிழ்ச்சிதான். ஆனால் தான் இன்னும் தாயாகாததில் வருத்தமும் கொண்டிருந்தாள்.
இதைக்கண்ட குந்தி தானறிந்த மந்திரத்தை மாத்ரியிடம் பகிர்ந்து கொண்டாள். மாத்ரி அஸ்வினி தேவர்களை எண்ணியபடி அந்த மந்திரத்தைக் கூற அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களுக்கு நகுலன், சகாதேவன் என்று பெயரிட்டோம்.
இரண்டு மனைவிகள் மற்றும் ஐந்து மகன்களோடு என் வாழ்க்கை அந்த வனத்தில் இனிமையாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் மேடு பள்ளங்கள் இருந்தால்தானே அது வாழ்க்கை. ஒரு நாள் மாத்ரியுடன் வனத்தில் வலம் வந்தபோது அங்கு காணப்பட்ட அற்புதமான இயற்கை அழகு என் மனதை அலைக்கழித்தது. உட்கார்ந்திருந்த மாத்ரியின் உடைகள் இயல்பாகச் சற்று விலகி இருக்க, என் மனம் காமத்தில் ஆழ்ந்தது. எனக்கு இடப்பட்ட சாபத்தை மறந்து மாத்ரியுடன் நெருக்கம் கொண்டேன். முனிவரின் சாபப்படி இறந்துவிட்டேன்.
ஆக ஒரு கணவனுக்கு இருக்கக்கூடிய இயல்பான ஆசையே எனக்கு முடிவை தேடித் தந்து விட்டது. ஆனால் தெய்வ சக்திகளால் பிறந்தாலும் என் மகன்கள் என்பதால் (பாண்டுவின் மகன்கள் என்ற பொருளில்) பாண்டவர்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டதும் அந்த ஐவரும் எனக்கு முடிவில்லாத புகழைத் தேடித் தந்து விட்டதும் எனக்குப் பெருமைதான்.
-தொடரும்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் பகுதிக்கருகே உள்ளது யோகத்யான் பத்ரி. இங்கு உள்ளது பாண்டுகேஷ்வர் கோயில். பாண்டு இங்கு அமர்ந்து தவம் செய்தான். இதே பகுதியில்தான் மான்வடிவில் உலவிய முனிவரையும் அவர் மனைவியையும் கொன்று சாபத்தை வாங்கிக் கொண்டான். இங்குள்ள திருமால் சிலையை நிறுவியது மன்னன் பாண்டு என்கின்றனர்.
ஜோஷி மடத்திலிருந்து 18 கி.மீ., துாரத்திலும், பத்ரிநாத்திலிருந்து 23 கி.மீ., தூரத்திலும் உள்ளது இக்கோயில். ஒன்பதாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட அழகான கற்கோயில் இது. திருமால் தியானம் செய்யும் நிலையில் கருவறையில் காட்சி தருகிறார். கண்ணனின் தந்தை வசுதேவருக்கும் இங்கு சிலை உள்ளது. உத்தவர், குபேரன் ஆகியோர் உற்ஸவர்களாக உள்ளனர்.
அசாம் மாநிலத்தில் உள்ளது பாண்டு என்னும் சிறு நகரம். மன்னன் பாண்டுவின் பெயர்தான் இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வடக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா பாய்கிறது. நதிவழிப் போக்குவரத்து இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. குன்றுகளும் நதியுமாகக் காட்சிதரும் இந்த இடம் இயற்கை விரும்பிகளுக்கு ஒரு பெரும் வரம்.
ஜி.எஸ்.எஸ்.