sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சரணம் ஐயப்பா - 19

/

சரணம் ஐயப்பா - 19

சரணம் ஐயப்பா - 19

சரணம் ஐயப்பா - 19


ADDED : ஏப் 21, 2022 01:44 PM

Google News

ADDED : ஏப் 21, 2022 01:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாபரின் நட்பு

அவர்கள் பந்தள நாட்டுப் படையின் உபதளபதிகளாக பணிபுரிபவர்கள். கடுத்த சுவாமி, வில்லன், மல்லன் என்பது அவர்களின் பெயர்கள். மணிகண்டனுக்கு சிறந்த ஆலோசனைகளை அவர்கள் வழங்கினர்.

கடுத்தசுவாமி மணிகண்டனிடம்,“தலைவரே! தண்ணீர் முக்கம் என்ற ஊரில் சிறமூப்பன் என்ற ஆசான் இருக்கிறார். அவர் பதினெட்டு அடி என்னும் வர்மக்கலையில் வல்லவர். அவரது துணை மட்டும் இருந்து விட்டால் உதயணனின் அழிவு உறுதியாகி விடும். ஆனால் அவர் அவ்வளவு எளிதில் நமக்கு துணை வரமாட்டார். அவரிடம் ஏதாவது உபாயம் செய்து நட்பு கொண்டால் போதும். நம் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது” என்றனர்.

இன்றைய கொச்சி அருகில் தண்ணீர் முக்கம் கிராமம் இருக்கிறது. அங்கு மணிகண்டன் சென்றான். சிறமூப்பனை சிரமப்பட்டு சந்தித்தான். அவரிடம் வர்மக்கலை படிக்க வந்துள்ளதாக கூறினான். தன்னை நாடி வந்துள்ள மாணவன் என்ற முறையில் தனது பள்ளியில் அவனை சேர்த்துக் கொண்டார். மணிகண்டனும் ஆர்வமாக வர்மக்கலையைப் படித்தான். இது சிறமூப்பனை கவர்ந்து விட்டது. இதைப் பயன்படுத்தி அவருடன் தனது நட்பை உறுதியாக்கிக் கொண்டான் மணிகண்டன்.

யாரிடமும் சிரித்துக் கூட பேசாத சிறமூப்பனை அந்த இளைஞன் கவர்ந்தது அங்கிருந்த ஒரு உள்ளத்தை ஈர்த்தது. அது வேறு யாருமல்ல. அவள் சிறமூப்பனின் மகள். அவளுக்கு மணிகண்டனை மிகவும் பிடித்து விட்டது. அதற்கு காரணம் உண்டு.

வர்மக்கலை என்பது சாதாரணமானதல்ல. ஒரே அடியில் உயிர் போய் விடும். அதனால் மனத்துணிச்சல் உள்ள மாபெரும் வீரர்கள் மட்டும் தான் அதை கருத்துடன் படிக்க முடியும். பல வீரர்கள் வர்மக்கலை போட்டிகளில் உயிரை இழந்தனர். ஆனால் மணிகண்டனோ எப்பேர்ப்பட்ட வீரனையும் வெற்றி கொண்டான். அப்படியானால் இவன் இவ்வளவு பெரிய தீரனாக இருக்க வேண்டும்! தன் வாழ்க்கைத் துணைவனாக இவன் வந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும் என அவள் நினைத்தாள். அந்த எண்ணம் காதலாக மாறியது. அதை அவனிடம் வெளிப்படுத்தினாள்.

மணிகண்டன் அவளிடம்,“நான் பிரம்மச்சாரியாக வாழ நினைக்கிறேன். திருமணம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. நீ இந்த ஆசையை முளையிலேயே கிள்ளி விடு” என்று மறுத்து விட்டான். அத்துடன் சமயம் பார்த்து சிறமூப்பனிடம் பேசி அவரையும், அவரிடம் பயிற்சி பெற்ற வீரம் மிக்க மாணவர்களையும், உதயணன் விஷயத்தில் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு சிறமூப்பனும் ஒப்புக்கொண்டார்.

மணிகண்டனும் மற்ற தளபதிகளும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அது மட்டுமல்ல, சிறமூப்பனின் ஆலோசனைப் படி நாட்டிலுள்ள மற்ற வர்மக்கலை ஆசான்களையும் சந்தித்தான். அவர்களையும் அவரது மாணவர்களையும் தன் படையில் சேர கேட்டுக் கொண்டான். சொந்த தேசத்துக்கே துரோகம் செய்த அந்த கொள்ளைக்காரனை ஒழிக்க அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

இப்படி எல்லாம் கூடி வரும் வேளையில் மணிகண்டனை தேடி சோதனை ஒன்று வந்தது.

வாபரன் என்ற வீரன் துருக்கியிலிருந்து வந்த கப்பலில் சேர நாட்டுக்கு வந்தான். அவனது நோக்கம் சேர நாட்டு செல்வத்தை கொள்ளை அடிப்பது. வந்தவன் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல. உதயணனைப் பிடிக்கும் முன் வாபரனை ஒடுக்கியாக வேண்டிய கட்டாய சூழல் மணிகண்டனுக்கு ஏற்பட்டது. வாபரன் மாவீரன். ஒரு இளைஞன் தன்னுடன் மோத வந்துள்ளதை எண்ணி பெருமைப்பட்டான். எல்லா வகை மோதலிலும் இருவரும் சமநிலையிலேயே இருந்தனர். வெற்றி தோல்வி என்பதே இல்லை.

மணிகண்டனை வாபரன் பாராட்டினான். “இளைஞனே! இன்று முதல் நான் உன் எதிரியல்ல. நண்பன். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள், செய்கிறேன்” என்றான்.

மணிகண்டன் அந்த துருக்கிய வீரனுடன் நட்பு கொள்ள விரும்பினான். இருவரும் இணைபிரியா நண்பர்களாயினர். மணிகண்டனை யாராவது அணுக வேண்டுமானால், வாபரனின் அனுமதி முதலில் தேவை என்ற அளவுக்கு நட்பு வளர்ந்தது. இந்த வாபரன் தான் 'வாபர்' என்ற பெயரில் எருமேலியில் தங்கினார். சபரிமலை பயணத்தில் எருமேலி மறக்க முடியாத இடத்தை இன்று வரை பெற்றுள்ளது.

இப்போது மணிகண்டனின் கை ஓங்கி விட்டது. வாபரின் படை, வர்மக்கலை வீரர்கள், பந்தள நாட்டின் சிறப்பான தளபதிகள் என பெரும் படை அமைந்தது. மணிகண்டன் போர் திட்டத்தை வகுத்தான். அப்போது மலைவாழ் மக்களின் தலைவர் கருப்பசுவாமி மணிகண்டனுக்கு அறிமுகமானார். காட்டில் எந்த இடமாக இருந்தாலும் அவருக்கு அத்துப்படி. உதயணன் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதில், தனக்கு சிறப்பாக உதவுவார் என மணிகண்டன் கருதினான். அவருக்கு தளபதி பதவி அளித்தான் மணிகண்டன்.

இதையடுத்து மணிகண்டனின் படை மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டது.ஒரு பிரிவுக்கு மணிகண்டன் தலைமை வகித்தான், மற்றொன்றுக்கு வாபரும், இன்னொன்றுக்கு கருப்பசுவாமியும் தலைவராக்கப்பட்டனர். வாபரின் படை உதயணன் தங்கியிருந்த இஞ்சிப்பாறை கோட்டையை முற்றுகையிட முடிவானது. ஒருவேளை இங்கிருந்து உதயணன் தப்பினால், அவன் எழுப்பியிருந்த தலைப்பாறை கோட்டைக்கு செல்லக்கூடும். எனவே அந்த இடத்திற்கு கருப்பசுவாமி தலைமையிலான படை செல்ல வேண்டும். இதையும் மீறி காட்டுக்குள் வேறு இடத்துக்கு தப்ப முயன்றால், மணிகண்டன் தலைமையிலான படை அவனை தாக்க முடிவெடுத்தது. அப்போது மணிகண்டன் தன் படையினருக்கு சில நிபந்தனை விதித்தான்.

“படை வீரர்களே! சபரிமலையில் பொன்னம்பல மேடு என்னும் பகுதி இருக்கிறது. அங்கே தர்மசாஸ்தா, பிரம்மச்சாரியாக அருள்புரிகிறார். அவரிடம் நமது வெற்றிக்காக பிரார்த்திக்க வேண்டும். அங்கே மக்கள் ஆண்டிற்கு ஒருமுறை சென்று வழிபாடு நடத்தி வந்தனர். உதயணன் அதைத் தடுப்பதற்காக விலங்குகள் நடமாடுவதாக வதந்தியை கிளப்பி விட்டுள்ளான். மேலும் அங்கு மக்கள் கட்டிய கோயிலை இடித்து விட்டான். இப்போது சாஸ்தாவின் விக்ரகம் மட்டுமே அங்கு உள்ளது. எனவே மக்கள் அங்கு செல்வதை நிறுத்தி விட்டனர். நமது நோக்கம் போர் மட்டுமல்ல. தர்ம சாஸ்தாவுக்கு மீண்டும் ஒரு கோயிலும் எழுப்ப வேண்டும்” என்றவனை படை வீரர்கள் வாழ்த்தினர்.

மணிகண்டனிடம்,“பிரபுவே! போர் என்ற குறுகிய நோக்கம் மட்டுமில்லாமல், ஆன்மிகத்தை வளர்ப்பது என்ற உயரிய நோக்கமும் இதில் இருக்கிறது. நாம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகிறோம். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றார் கருப்பசுவாமி .

“கருப்பசுவாமியே! பொன்னம்பல மேட்டில் சுவாமி தரிசனம் செய்ய சில நிபந்தனைகள் இருக்கிறது. அதையும் கேளுங்கள்” என்றான். அனைவரும் அதைக் கேட்க ஆர்வமான போது மணிகண்டனைக் காதலித்த சிறமூப்பனின் மகள் அங்கு வந்தாள். வந்தவள் ஒரு குண்டைத் துாக்கிப் போட்டாள்.

- தொடரும்

தி.செல்லப்பா

thichellappa@yahoo.com






      Dinamalar
      Follow us