ADDED : மே 02, 2023 02:28 PM

திருச்சியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். சிறுவயதில் தந்தையை இழந்ததால் சகோதரிகளை கரை சேர்க்கும் பொறுப்புக்கு ஆளானார். படிப்பை முடித்ததும் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பெற்றோர் இருக்கும் போது காஞ்சி மஹாபெரியவரை ஒருமுறை தரிசனம் செய்ததோடு சரி, பிறகு அவரை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்காதை எண்ணி வருத்தப்பட்டார். ஒருநாள் இரவில் மஹாபெரியவரின் மகிமை என்னும் கட்டுரையை படித்து விட்டு, ''பெரியவா... எல்லோருக்கும் அருள்புரியும் உங்களுக்கு என் மீது மட்டும் கோபம் ஏன்? நான் செய்த பிழைதான் என்ன'' என கண்ணீர் விட்டபடியே துாங்கினார்.
மறுநாள் அலுவலகத்தில் சோர்வுடன் இருப்பதைக் கண்ட ஆடிட்டர், காரணத்தைக் கேட்க அமைதியுடன் நின்றார் பாலச்சந்திரன். அப்போது ஆடிட்டர், ''கர்நாடகாவில் ஷகாபாத் என்னும் ஊரில் மஹாபெரியவர் முகாமிட்டிருக்கிறார். அவரை தரிசிப்பதற்காக இன்றிரவு ரயிலுக்கு முன்பதிவு செய்தேன். ஆனால் செல்ல முடியவில்லை. நீ அதை பயன்படுத்திக் கொள்'' என்றார். பாலச்சந்திரனும் சம்மதித்தார். ஆனாலும் ஷகாபாத்தில் இருந்து ஊருக்கு திரும்பி வர பணமில்லையே எனத் தயங்கினார். இதை உணர்ந்த சகஊழியர் ஒருவர், ''கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதே. செலவுக்கு நான் பணம் தருகிறேன்'' என முந்நுாறு ரூபாய் கொடுத்தார். மாதந்தோறும் பத்து ரூபாய் கொடுத்து கடன் அடைப்பதாகச் சொல்லி விட்டு புறப்பட்டார்.
ரயிலில் பயணித்த போது மஹாபெரியவரின் பக்தரான பிரதோஷம் மாமாவைச் சந்தித்தார். அவருடன் சேர்ந்து முகாமிற்குச் சென்றார். அதுவும் மஹாசிவராத்திரியன்று சுவாமிகளை தரிசனம் செய்து மனநிறைவு பெற்றார். அங்கு ராமன் என்னும் பக்தர் அறிமுகமானார். சென்னைக்குச் செல்வதற்காக தனக்கும், தன் நண்பருக்கும் சேர்த்து ரயிலுக்கு முன்பதிவு செய்ததாகவும், ஆனால் வேறு வேலையாகி விட்டதால் நண்பர் வரவில்லை என்றார். அதையும் ஏற்றுக் கொண்டு பாலச்சந்திரன் செலவின்றி ஊர் திரும்பினார். கடனாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்தார். சிரமமோ, செலவோ சிறிதும் இல்லாமல் தரிசனம் அளித்த காஞ்சி மஹாபெரியவரை எண்ணி நெகிழ்ந்தார் பாலச்சந்திரன்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற...காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
'ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்' என தினமும் 108 முறை சொல்லுங்கள்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com