sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 51

/

பச்சைப்புடவைக்காரி - 51

பச்சைப்புடவைக்காரி - 51

பச்சைப்புடவைக்காரி - 51


ADDED : மே 02, 2023 02:19 PM

Google News

ADDED : மே 02, 2023 02:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோதனை மேல் சோதனை

“திடீர்னு நட்ட நடுக்கடல்ல தனியா மாட்டிக்கிட்ட மாதிரி இருக்குண்ணா”

என்முன் இருந்த 45 வயது சங்கருக்கு நிறையச் சொத்து இருக்கிறது. வேலை பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.

“ஏன் என்னாச்சு?”

“நிறைய நிலம் இருக்கு. முன்பு நிறைய வருமானம் வந்துச்சி. 5 வருஷமா விவசாயம் நடக்கல. நிலத்த வித்துரலாம்னு நெனச்சேன். விலை போக மாட்டேங்குது. காசெல்லாம் கரைஞ்சிருச்சி. இருக்கற காச வச்சி இன்னும் பதினஞ்சு நாள்தான் ஓட்ட முடியும்.

“இதுக்கு நடுவுல பேங்க்ல கடன வாங்கி வீட்டப் புதுப்பிச்சோம். மூணு மாசம் தவணை கட்டல. வீட்ட ஏலம் விட்ருவாங்களாம்..

பையன் இன்ஜினியரிங் படிக்கறான். அவனுக்கு இப்பவே பீஸ் கட்டணும்.

“நிலத்த வித்தா முப்பது லட்சமாவது கெடைக்கும். அத வச்சி என் பிள்ளையப் படிக்க வச்சிரலாம். என் காலத்த ஓட்டிரலாம். ஆனா அதுவும் நடக்கமாட்டேங்குதே!”

சங்கர் நல்லவன். உத்தமமான பக்தன். அவனுக்கே இந்த நிலையென்றால்...

சங்கரைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.

“உனக்கு பச்சைப்புடவைக்காரிதானே எல்லாம்”

“ஆமாண்ணா”

“உன் மனசுல அவளத் திட்டணும்னு தோணுதா?”

“சத்தியமா இல்லண்ணா. அவளே எனக்கு இப்படி ஒரு கஷ்டத்தக் கொடுத்திருக்கான்னா நான் எவ்வளவு பாவம் செஞ்சிருக்கணும்? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்கண்ணா''

“இக்கட்டான சமயத்துலயும் அவள நெனச்சி அழறதுக்கு ஒரு மனசக் கொடுத்திருக்காளே. அது போதுமே”

“அதெல்லாம் சரி, சங்கர். ஒரு மாசத்துக்குள்ள நிலத்த விக்க முடியலேன்னா என்னாகும்? நான் ஏதாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணட்டுமா?”

“திருப்பித் தர வழி இருக்கான்னு தெரியாம கடன்

வங்கறது தப்பு”

“பணம் கெடைக்கலன்னா என்னாகும்?”

“ வீடு போயிரும். குடும்பத்தோட மானம் போகும். பீஸ் கட்ட முடியலேன்னா பையனோட படிப்பு போகும், போகட்டுமே. எல்லாமே போனாலும் எனக்கு பச்சைப்புடவைக்காரி இருக்காண்ணா. என் மூணு வயசில எங்கம்மா செத்துட்டாங்க. அதுலருந்து பச்சைப்புடவைக்காரியத்தான் அம்மாவா நெனச்சிக்கிட்டிருக்கேன்''

சிறிது நேரம் கனத்த மவுனம் நிலவியது. பின் சங்கர் சைகையாலேயே விடைபெற்றான்.

அன்று மாலை சங்கருக்காக பிரார்த்தனை செய்தபடி கோயிலுக்கு நடந்தே சென்றேன். பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்துகொண்டேன்.

சற்றுத் தள்ளி ஒரு நடுத்தர வயதுப் பெண் அமர்ந்திருந்தாள். ஒருவேளை பச்சைப்புடவைக்காரியாக இருக்குமோ?

சட்டென திரும்பிப்பார்த்தாள். என்னை நோக்கி வேகமாக வந்தாள். நான் எழுந்தேன்.

“கோயில்ல, ஒரு கல்யாணமான பொண்ணை இப்படி வெறிச்சிப் பாக்கறியே? ஒரு குரல் கொடுத்தா உன்னை அப்படியே கொத்தா அள்ளிக்கிட்டுப் போயிருவாங்க”

“உங்களை பச்சைப்புடவைக்காரியாகத்தான் பார்த்தேன். என்னைக் கொத்தடிமையாகக் கொண்டவள் மீது சத்தியம்”

சிரிப்பு துணுக்கு கேட்டதுபோல்

சிரித்தாள். “நானே தான். சீண்டி

பார்த்தேன்” விழுந்து வணங்கினேன்.

அவளுக்கு கீழே அமர்ந்தேன்.

என் முகத்தையே பார்த்தாள். “இது என்னப்பா விபரீதம்?

நீ இப்போது என் கோயிலில் இருக்கிறாய். உன் அருகே நான் இருக்கிறேன்.

பின் ஏன் உன் முகம் இப்படி வெளிறியிருக்கிறது? என்னையும் மீறி யாராவது காயப்படுத்திவிடுவார்களோ என பயப்படுகிறாயோ?”

“என் பயத்துக்கு வேறு காரணம் தாயே!”

“சொல்”

“சங்கர் மனதில் எந்த அழுக்கும் இல்லாதவன். உத்தம பக்தன். அவனுக்கே இந்தக் கதியென்றால்... வீட்டை இழக்கப்போகிறான், மானத்தை இழக்கப்போகிறான். குலை நடுங்குகிறது, தாயே! துாயவனே திண்டாடுகிறான் என்றால் மனதில் அழுக்குகளை வைத்திருக்கும் என் போன்றவர் நிலையை யோசித்துப் பார்த்தேன். பயமாகத்தான் இருக்கிறது, தாயே!”

“சங்கரிடம் விளையாடினேன்”

“உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விளையாட்டு உங்கள் அடியவர்களுக்கு வேதனையைத் தரலாமா?””

“சிலசமயம் தாய்க்குத் தன் குழந்தை மீது அளவு கடந்த அன்பு வந்துவிடும். அப்போது அவள் குழந்தையை முரட்டுத்தனமாகக் கொஞ்சுவாள். மேலே துாக்கிப்போட்டுப் பிடிப்பாள். இதனால் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது. அறியாத குழந்தைகள் சில சமயம் பயந்துவிடும். அந்த பயத்தையும் தாய் உடனே போக்கிவிடுவாள். சங்கர் என் மடியில் இருக்கும் என் குழந்தை.”

“என்றாலும்...''

“சங்கருக்கு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாயா?”

கைகூப்பினேன்.

“அங்கே பார்.”

காட்சி விரிந்தது.

பத்து நாட்கள் கழித்து ஒரு வெள்ளிக்கிழமை. விளக்கு வைக்கும் நேரம். சங்கர் பூஜையறையில் பச்சைப்புடவைக்காரியின் படத்தின்முன் அமர்ந்து கண்ணீரைப் பெருக்கிக்கொண்டிருந்தான்.

மனைவி அவனை அழைத்தாள்

“உங்களத் தேடிக்கிட்டு யாரோ வந்திருக்காங்க.”

ஜப்தி செய்ய வந்திருக்கும் வங்கி அதிகாரியா? இரண்டு மாதம் பாக்கி வைத்திருக்கும் பலசரக்குக் கடைக்காரனா?

பயந்தபடியே வாசலுக்கு வந்தான் சங்கர்.

வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்த நான்கு மனிதர்கள் வந்திருந்தனர்.

“நீங்கள்…”

“பூங்குடி கிராமத்துல இருக்கற உங்க நிலத்த விக்கப்போறதாக் கேள்விப்பட்டோம். எங்களுக்கு நிலம் அவசரமா தேவைப்படுது. விலை நிலவரத்த விசாரிச்சோம். முப்பது, முப்பத்தியஞ்சு லட்சத்துக்குப் போகும்னு சொன்னாங்க. நாங்க நாப்பது லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கறோம். இதுல அஞ்சு லட்சம் ரொக்கம் இருக்கு. 35 லட்சத்துக்கு செக் கொடுத்துடறோம். செக்குக்குப் பணம் வந்தவுடனே பதிஞ்சிக்கலாம்”

ஒரு சாதாரண நில விவகாரத்தில் சங்கர் ஏன் அப்படி விம்மி விம்மி அழுகிறான் என்று அவர்களுக்குப் புரியவில்லை.

காட்சி முடிந்ததும் பச்சைப்புடவைக்காரி தொடர்ந்தாள்.

“சில நாட்கள் அந்தக் குழந்தையைத் துாக்கிப்போட்டு விளையாடவேண்டும் என்று தோன்றியது. அதை அந்தக் குழந்தை துன்பமாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?”

“என்னிடமே உண்மையை மறைத்துவிட்டீர்களே தாயே!”

“என்னடா உளறுகிறாய்?”

“அடுத்த பத்து பிறவிகளில் சங்கர் பெற வேண்டிய ஆன்மிக வளர்ச்சியை இந்தப் பிறப்பிலேயே கொடுத்துவிடுவது என தீர்மானித்துவிட்டீர்கள். நாலாபக்கமும் துன்பங்கள் சூழ்ந்த நிலையிலும் சங்கர் உங்களைப் பற்றித் தப்பாக ஒரு வார்த்தை குறை சொல்லவில்லை. அவனுடைய பக்தியின் தீவிரம் பலமடங்கு அதிகமாகியது. விளைவு இந்தப் பிறப்பு முடிந்தவுடன் அந்த ஜீவன் உங்களோடு ஒன்றிவிடும்”

“எதை வைத்து அப்படி சொல்கிறாய்?”

“உங்களால் விளையாட்டுக்குக்கூட எங்களைத் துன்புறுத்த முடியாது, தாயே! எங்கள் கர்மக்கணக்கு கோளாறாக இருந்தால் மட்டுமே எங்களுக்குத் துன்பம் வரும். அதையும் நீங்கள் கணிசமாகக் குறைத்துவிடுவீர்கள். நீங்கள் விளையாடினீர்களாம்! அந்தக் குழந்தை அது புரியாமல் துன்பப்பட்டதாம்! யாரிடம் கதை அளக்கிறீர்கள்?”

அன்னை சிரித்தாள். அகிலமே மலர்ந்தது.

-அடுத்த வாரம் முற்றும்

வரலொட்டி ரெங்கசாமி






      Dinamalar
      Follow us