sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆண்டாளும் அற்புதங்களும் - 21

/

ஆண்டாளும் அற்புதங்களும் - 21

ஆண்டாளும் அற்புதங்களும் - 21

ஆண்டாளும் அற்புதங்களும் - 21


ADDED : மே 02, 2023 02:18 PM

Google News

ADDED : மே 02, 2023 02:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோதையின் காதல் பக்திமயமானது

மனித இனத்தின் தோற்றமே காதலில் தான் தொடங்குகிறது. காதல் இல்லாத வாழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாது. காதல் வந்தவர்கள் சுற்றுப்புறத்தை மறக்கிறார்கள். தங்களுக்குள் ஒரு உலகத்தை உருவாக்கிக் கொண்டு தாங்களே ஒரு உலகம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். நம் ஆண்டாள் கூட இப்படித்தான் போலும். அவளுக்கென்று ஒரு உலகம் அமைத்துக் கொண்டு பாசுரங்கள் பாடியிருக்கிறாள்.

பரம்பொருளான கடவுளை பற்றிக்கொள்ள எத்தனையோ பக்தி மார்க்கங்கள் இருந்தாலும் பக்தியுடன் காதலை கலந்து கொடுத்தவர்கள் ஆழ்வார்கள். அவர்களுள் காதலோடு தன்னையே அவனுக்கு அர்ப்பணித்தவள் ஆண்டாள். நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் தங்களை நாயகி பாவத்தில் இருத்திக் கொண்டு நாயகனாகிய பெருமாளை நோக்கி பல பாசுரங்களை இயற்றி யுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்ததோ இரண்டாம் இடமே. முதலிடத்தை தட்டிச் சென்று 'பெருமாள்' என்னும் கோப்பையை பெற்றது நம் கோதை நாச்சியார் தான். இந்த நாயகன் நாயகி பாவம் என்பது நம் தமிழ் இலக்கியங்களில் மிகுதியாகவே காணப்படுகிறது. அதன்படி நம்மாழ்வார் பராங்குச நாயகியாகவும் திருமங்கையாழ்வார் பரகாலநாயகியாகவும் கண்ணனை காதலிக்கிறார்கள். ஆனால் கோதையோ தானாகவே அதாவது ஒரு பெண்ணாகவே இருந்து அவனை அடைய முனைகிறாள்.

கண்ணன் மீது தனக்கு இருந்த ஆராக் காதல் பற்றி நாச்சியார் திருமொழியில் உருகி பாடி இருக்கிறாள். நாச்சியார் திருமொழியில், மன்மதனை பார்த்து மானிடர்க்கு என்று என்னை மணமுடிக்க பேசினால் நான் வாழ மாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறாள். திருமணம் செய்தால் என் உள்ளம் கவர் கள்வனையே மனம் செய்வேன் என உருகுகிறாள். அவள் கண்ணன் மீது கொண்ட காதல் அவளுக்கு அத்தனையையும் பெற்றுத் தந்திருக்கிறது. ஆண்டாள் கண்ணன் மீது கொண்ட காதல் பக்திமயமானது. அந்த காதலும் தெய்வீகமானது. ஒரு மானிடப் பெண்ணுக்கும் இறைவனுக்கும் உள்ள காதல் மனிதர்களால் நம்ப முடியாத அற்புதமான வரலாறு. மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல. ஆம், உண்மை தான். அவளின் பக்தியும் காதலும் எம்பெருமான் மீதே நாட்டம் கொண்டது. அவள் மட்டுமல்ல. இவ்வுலகில் பிறந்த உயிர்கள் அனைத்தும் எம்பெருமா னையே அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியோடு இருந்தவள் ஆண்டாள். சரி, நமக்கெல்லாம் இங்கு ஒரு சந்தேகம் வரும். பக்தி வேறு, காதல் வேறு தானே? பக்தியும் காதலும் கிட்டத்தட்ட இரு வேறு திசையில் இருப்பது. அப்படி இருக்க இப்படியான பாசுரங்களை எப்படி எடுத்துக் கொள்வது? கடவுளை கைத்தொழும் போது காமம் எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு நம் புராணங்கள் சொல்லும் பதில் “ கசப்பு மருந்தை உள்ளுக்குள் அனுப்ப கொஞ்சம் இனிப்பு தேவை இல்லையா?! அதுபோலத்தான் இதுவும்”.

நாச்சியார் திருமொழியின் ஏழாம் பத்தில்

'கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய் தான்

தித்தித்திருக்குமோ'

எனத் தொடங்கும் இப்பாடல் போதும் ஆண்டாளின் மெல்லிய காதல் உணர்வை புலப்படுத்த. கண்ணனுடன் சேர்ந்திருக்கும் படியான அனுபவத்தை பெற வேண்டும்! அதற்கு எப்போதும் அவனுடன் சேர்ந்து இருக்கும் ஒரு பொருளிடம் அதன் அனுபவத்தை சொல்லி கேட்க வேண்டும். என்ன செய்வது? கோதைக்கு இந்த நேரத்தில் பாஞ்சன்னியத்தின் (சங்கு) நினைவு வந்தது. உண்மையில் சங்கும், சக்கரமும் பெருமாளின் கைகளில் நீக்கமற நிறைந்திருக்கும். அப்படி இருக்க ஆண்டாள் சக்கரத்தை விட்டு சங்கை தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? ஆண்டாள் சங்கிடம் அப்படி என்ன பேசுகிறாள்?

''ஏ... சங்கே எப்பொழுதும் அவன் கைகளிலே ஒட்டி உறவாடும் பெரும் பேறை நீயே பெற்றிருக்கிறாய். அவன் கையில் உள்ள சக்கரம் கூட உன்னைப் போல பெரும்பேறை பெறவில்லை தெரியுமா? எப்பொழுதெல்லாம் அவன் எதிரியை அழிக்க அப்போதெல்லாம் அது நாராயணனின் கையை விட்டு பிரிந்து, மறுபடியும் அவனது கைகளில் வந்து சேர்கிறது. அதனால் அது நாராயணனை அவ்வப்போது பிரிய நேரிடுகிறது. ஆனால் நீ நொடிப்பொழுதும் அவனை விட்டு நீங்குவதில்லை. அத்துடன் உனக்கு நாராயணனின் திருவாயில் படும் பேறு உள்ளது. சக்கரத்துக்கு அந்த பாக்கியம் இல்லை. அது கையுடன் மட்டுமே உறவாடுகிறது அல்லவா? சக்கரத்தைப் போல எனக்கு அந்த பேறு கிடைக்கவில்லையே என மலைத்து மருகுகிறாள் ஆண்டாள்.

இப்போது சங்கிடம் அவள் கேட்கும் கேள்வியின் அழகை காணலாம் வாருங்கள். அதுமட்டுமா... ''ஏ சங்கே...கண்ணனுடைய பவளவாய் உதடுகள் இருக்கிறதே... அதில் பச்சைக் கற்பூரத்தின் வாசனை வீசுமா? அல்லது தாமரைப் பூவின் மணம் தான் வீசுமா? என முதலில் மணம் கேட்டவள் பின் அவன் வாயின் சுவை என்ன என தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறாள். ''ஏ வெண் சங்கே... குவலயாபீட யானையின் கொம்பினை ஒடித்த அந்த கண்ணனின் வாய் தித்திப்பு சுவையுடன் இருக்குமா அல்லது அறுசுவையின் ஏதாவதொரு சுவையுடன் இருக்குமா? இனிப்புச் சுவையை தாண்டி அவனது வாயின் சுவை வேறானதாக இருக்கும் என என்னால் எண்ண இயலவில்லை. ஆம்! ஆசையுடன் உன்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதைப் பற்றி சொல்கிறாயா? என ஆர்வத்துடன் கேட்கிறாள்.

அது மட்டுமா? அந்த சங்கை அவள் அத்துடன் விடுவதாய் இல்லை. அவன் வாய் அமுதத்தை பருக பலரும் காத்திருக்க, நீ ஒருவன் மட்டுமே புகுந்து தேனைக் குடிப்பது போல விடாது பருகலாமா? கண்ணனின் அடியவர்களுக்கு பொதுவானதை நீ மட்டும் பெற்று மகிழ்ந்தால் எப்படி? நாங்களெல்லாம் எப்போது பெறுவது? அதைப் பற்றி கொஞ்சமாவது உனக்கு யோசனை உண்டா? நீயோ கொடுத்து வைத்திருக்கிறாய். கண்ணனின் வாய் அமிர்தமே உனக்கு உணவாக கிடைத்து விடுகிறது. அவன் கையிலேயே நீ உறங்கியும் விடுகிறாய். உனக்கு நல்ல மெத்தையாக இருக்கிறான் அவன். இப்படி உணவும் உறக்கமும் கண்ணனிடமே உனக்கு வாய்த்ததால், உன்னை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. உன்னிடம் சண்டை இட வேண்டும் என்று தோன்றுகிறது என்கிறாள்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களுக்கு நேர்மாறானவள் ஆண்டாள். அவளுக்குள் எழுந்த எண்ணம் அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளாள். பெண்ணுக்கே உரித்தான அத்தனை குணங்களும் கொண்ட பாசுரங்கள் கொள்ளை அழகாய் கண்முன் விரிகிறது. ஆண்டாளின் உணர்வுகளை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து உள்வாங்கிக் கொள்ள முடியும். அவளது உணர்வு அலையில் நாமெல்லாம் அந்த நாராயணன் என்னும் கடலுக்குள்ளேயே இழுத்துச் செல்லப்படுகிறோம்.

திருப்பாவையில் கடவுளைக் காண்பதற்காக மார்கழி நோன்பு நோற்ற ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் அந்த கடவுளையே மணக்க நினைக்கிறாள். முன்னது வேதத்தின் வித்து என்றால் பின்னது காதலின் சொத்து அல்லவா! கோதையின் இன்ப ஆசைகள், வேதனைகள், மனச்சோர்வு, அச்சங்கள், காதல் வேட்கை, கல்லையும் கரைந்துருகச் செய்யும் காதல் துாதுகள், கண்ணனை கனவில் மணந்த மகிழ்ச்சி போன்ற பல உணர்ச்சிகள் ததும்புவதை நாச்சியார் திருமொழியில் காண்கிறோம்.

மொழிதான் ஆண்டாளின் ஆயுதம். ஆம், அதைப் பயன்படுத்தி நம்மையெல்லாம் முதலில் வீழ்த்தி பிறகு பண்படுத்தி இருக்கிறார். அலைகின்ற காற்றுக்கு தெரியாது, புல்லாங்குழலுக்குள் புகுந்து இசையாவோம் என்று. அதுபோல நாமும் ஆண்டாளுக்குள் புகுவோம். நயம் பல பெற்று கடவுளை நெருங்குவோம். தொடர்ந்து பயணிப்போம்... வாருங்கள்!

-தொடரும்

பவித்ரா நந்தகுமார்






      Dinamalar
      Follow us