ADDED : மே 02, 2023 01:19 PM
அரிஷ்ட நேமி கிருஷ்ணார்ப்பணம் என்ற சொல்லைச் சொல்லி சொன்ன கருத்து இளவரசன் திவ்ய புருஷனை மட்டுமல்ல, அவன் தந்தையான அரசனையும், ராஜகுருவையும் சிந்திக்க வைத்து ஒரு கேள்வியையும் அவர்களுக்குள் எழுப்பியது.
''மகரிஷி... தாங்கள் பாவ புண்ணியத்தை கிருஷ்ணார்ப்பணம் செய்து விடுவதாக கூறினீர்கள். அந்த வார்த்தையே எங்களுக்கு புதிதாக இருக்கிறது. அது யார் கிருஷ்ணர்?'' என்று கேட்டான் ராஜகுமாரன் திவ்யபுருஷன்.
'கிருஷ்ணம் என்றால் கரியவன். இரவுக்குரியவன். மறைவான இயக்கமுடையவன் என்று பொருள். இதெல்லாம் திருமாலுக்கே பொருந்தும். நாங்கள் சகலத்தையும் திருமாலுக்கு அர்ப்பணிக்கிறோம். அவனிடமே எங்கள் வாழ்வை ஒப்படைத்து விட்டபடியால் எங்கள் நன்மை தீமைக்கும் அவனே பொறுப்பு.
மானிடப் பிறப்பெடுத்து விட்ட நிலையில் நாம் கடைத்தேறிட இதைத் தவிர வேறு வழியில்லை''என்றார் அரிஷ்டநேமி.
''அரிய கருத்து. இப்படி ஒரு விளக்கத்தை இதுவரை கேட்டதில்லை. வாழ்வு என்பது நம் வசமே என்ற மாயையில் இருந்த எங்களுக்கு இந்த சரணாகதி செயல்பாடு பல விளக்கங்களை அளித்து விட்டது'' என்றார் ராஜகுரு.
...
மார்க்கண்டேயரும் அதுவரை தான் சொல்லி வந்த அரிஷ்டநேமி, கால நேமியின் வரலாற்றை சற்று நிறுத்தி பாண்டவர்களையும், கிருஷ்ணனையும் ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தார். அந்த பார்வையின் பொருள் சகாதேவனுக்கு சட்டென புரிந்தது.
''மகாமுனி... அரிஷ்டநேமி குறிப்பிட்ட கிருஷ்ணார்ப்பணத்திற்கு விளக்கமாய் இன்று கிருஷ்ணாவதாரமே எடுத்து வந்து இதோ எங்கள் அருகில் நிற்கிறாரே இவர் என புரிந்து கொள்கிறோம். சரிதானே?'' என்று கேட்டான்.
''மெத்தச் சரி. மேலிருந்து கீழ் இறங்கி வருவதையே அவதாரம் என்கிறோம். இறங்கி மட்டுமல்ல, இரங்கியும் வருதல் என்பதே அதன் நுட்பமான பொருள். எனவே தான் அந்த பாற்கடல் துாக்கக்காரன், இதோ கிருஷ்ணன் என்கிற விழிப்புள்ள இயக்கக்காரனாய் உங்கள் அருகில் நிற்கிறான். சகலத்தையும் இவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள் மற்றதை இவன் பார்த்துக் கொள்வான்'' என்றார் மார்க்கண்டேயர்.
''மகரிஷி... என்ன இது எதற்கு இந்த சாமான்யனை இப்படி உயர்த்துகிறீர்... நானும் ஒரு ஜீவாத்மா தான். நீங்கள் அரிஷ்டநேமி, காலநேமி பற்றிக் கூறியது போல ஏனைய அறிய வேண்டிய வரலாற்றுப் பாத்திரங்களை தொடர்ந்து கூறிடுங்கள்'' என்று கிருஷ்ணன் மார்க்கண்டேயரை மடைமாற்றம் செய்தான்.
''கிருஷ்ணா... லீலைகளில் ஞானம் மிக்கது உனது லீலைகளே. அது ஒவ்வொரு கோணத்தில் ஒவ்வொரு பொருளைத் தந்திடும். இப்போதும் தன்னடக்கத்திற்கு ஒரு விளக்கத்தை நீ அளித்து விட்டாய். என்னை இயக்கும் பரம்பொருள் நீ. நீயே பகலென்னும் ஆட்டக்காரனாய் நடராஜனாக திகழ்கிறாய். அந்த நடராஜனாய் எனக்கு இறவா வரமும் அளித்தாய்! இன்று என்னை பேசச் செய்து, இவர்களையும் கேட்கச் செய்து வழிநடத்துகிறாய்.மொத்தத்தில் பிரமிக்க வைக்கிறாய்!'' என்ற மார்க்கண்டேயர் அடுத்ததாய் 'அத்ரி' என்ற மகரிஷி பற்றி கூறத் தொடங்கினார்.
'' பாண்டவர்களே! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாத்திரங்களில் அத்ரி மகரிஷியும், பதிவிரதை அனுசூயா முக்கியமானவர்கள். பிராமணராகவும், வேதங்களை காப்பவராகவும் உள்ள அத்ரிக்கு வனவாழ்வு தான் பிடித்திருந்தது. தியானம், தவம் என்று வாழ்வதே தன் தர்மம் என்று கருதினார்.ஆனால் மனைவி அனுசூயாவும், மகன் துர்வாசர், தத்தாத்ரேயரும் சில காலம் நகரத்தில் வாழ விரும்பினர். அத்ரி மகரிஷி இதை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் நகரத்தில் வாழ வீடு, மாடு என்று சொல்ல செல்வங்களாவது வேண்டும்.
அதை நாடாளும் அரசனான 'வைன்யன்' என்பவனை யாசித்து அடைய தீர்மானித்தார்.
ஒரு பிராமணன் பணம் கேட்கும் நிலையை உண்டாக்காமல் அவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். இங்கே பிராமணன் ஒரு ஜீவாத்மா மட்டுமல்ல... வேதங்களை மனதில் சுமந்து கொண்டு அதன் ஒலி வடிவாய் வாழ்பவன். எனவே அவனை வணங்குவதும் போஷிப்பதும் உலகோர் கடமை. குறிப்பாக அரசனாக இருப்பவன் பிராமணர்களை பாதுகாத்திட வேண்டும். பிராமணனும் ஒழுக்கம் குன்றாமல் வாழ வேண்டும்.
அத்ரி மகரிஷியும், அரசன் வைன்யனை சந்தித்து, ''வைன்யா... நீ பாக்யசாலி! பிரபு... இந்த பூமியில் மக்களை நேருக்கு நேராய் ரட்சிக்கும் கடப்பாடு கொண்ட ரட்சகன். நீ தர்மத்தை பூரணமாய் அறிந்து அதன்படியே ஆட்சி செய்கிறாய். அந்த விதத்தில் மக்களுக்கு நீயே முதல் கடவுளாகவும் காட்சி தருகிறாய். இந்திரனைப் போல விளங்குகிறாய். உன்னை மனதார வாழ்த்துகிறேன் என்ற அத்ரியின் வாழ்த்து அன்று அரசவைக்கு வந்திருந்த கவுதம மகரிஷியை மனம் கோணச் செய்தது.
அதைக் கண்ட அரசனான வைன்யன் கவுதம ரிஷியிடம் அதன் காரணத்தை கேட்டான். அவரும் பதில் கூறலானார்.
''அத்ரி... சப்தரிஷிகளில் ஒருவர். அவர் அறியாதது என ஒன்றில்லை.
அப்படிப்பட்ட அவர் உன்னை புகழ்ந்து வாழ்த்தும் போது உன்னை இந்திரனுக்கு இணையாகவும், அந்த பரம்பொருளாகவும் குறிப்பிட்டு வாழ்த்தியது தவறு. பொருள் வேண்டி யாசிக்கும் போது நிதானம் தவறி மிகையாக கூறியது தவறு.அத்ரி இவ்வாறு பொருளை பொருட்படுத்தியது ஆச்சரியம் அதிர்ச்சி அளித்தது'' என்றார் கவுதமர்.
''இல்லை... நான் பொருளுக்காக இப்படி வாழ்த்தவில்லை. மனதார மட்டுமே வாழ்த்தினேன். ஒரு மண்ணரசன் விண்ணரசனுக்கு இணையாக இருக்கக் கூடாதா? இல்லை அது முடியாதா?
அடுத்து அவனே ஜனங்களை ரட்சிக்கிறான். எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து பசி, பட்டினி இல்லாமல் பார்த்துக் கொள்கிறான். இது கடவுள் தன்மை! அப்படிப்பட்டவனை கடவுளாகக் கருதி போற்றுவதில் தவறில்லை'' என்று அத்ரியும் மறுமொழி பகர்ந்தார்.
மொத்தத்தில் அந்த புகழுரை ஒரு சர்ச்சையை உருவாக்கி அத்ரி பொருளுக்காக அரசனை மிகைபட வாழ்த்தி விட்டார் என்று கருதும்படி செய்து விட்டது. இவ்வேளை சப்தரிஷிகளில் இன்னொருவரான காஸ்யப மகரிஷியும் அவைக்கு வந்து நடந்ததை அறிந்தார். அரசன் காஸ்யபரிடம் இது குறித்து பேசத் தொடங்கினான்.
''காஸ்யபரே! ஒரு வாழ்த்து சர்ச்சையை உருவாக்கி விட்டது. அத்ரி சொல்வது சரியா கவுதமர் சொல்வது சரியா? நீங்கள் இந்தமட்டில் சரியான பதிலைக் கூறி இச்சலனத்தை நீக்குங்கள்'' என்றான் அரசனான வைன்யன்.
காஸ்யபர் யோசித்தபடி, ''ஒருவரை வாழ்த்துவதில் கூடவா பிரச்னை எழுகிறது?'' எனக் கேட்டார்.
''வாழ்த்துவதில் பிரச்னையில்லை. அழிந்துபடும் சாமான்ய மனிதப் பிறப்பை அழியாத தேவர்களோடும், பரம்பொருளோடும் தொடர்புபடுத்துவது தான் பிழை'' இதனால் அந்த பரம்பொருளை குறைவுபடுத்துகிறோம். அது பாவம் ஆகாதா'' என்று ஆவேசமாக கேட்டார் கவுதம மகரிஷி.
''நீ மலரைப் போல மணக்கிறாய். சூரியனைப் போல ஜொலிக்கிறாய் என்று ஒருவரைப் பார்த்துச் சொல்லும் போது அதை உதாரணமாக சொல்கிறோம். அது எப்படி தவறாகும். இதனால் மலருக்கு மதிப்பு குறைந்து விடுமா... சூரியனையும் தாழ்த்தியதாக ஆகுமா? எனக்கு புரியவில்லை'' என்றார் அத்ரி.
இருவரின் ஆவேசமும் காஸ்யபரை தீவிரமாகச் சிந்திக்கச் செய்தது. பின் அவரே அதற்கொரு வழியையும் கண்டுபிடித்தார். ''நீங்கள் இருவருமே என்னோடு வாருங்கள். பிரம்மபுத்திரரும், பிரம்ம ஞானியுமான சனத்குமாரரிடம் செல்வோம். அவரால் சரியான தீர்வைச் சொல்ல முடியும்'' என்றார். மூவரும் சனத்குமாரரிடம் சென்றனர். சனத்குமாரரும் நடந்ததை அறிந்தார்.
--தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்