sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விட்டலனின் விளையாட்டு - 7

/

விட்டலனின் விளையாட்டு - 7

விட்டலனின் விளையாட்டு - 7

விட்டலனின் விளையாட்டு - 7


ADDED : மே 02, 2023 01:17 PM

Google News

ADDED : மே 02, 2023 01:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானமயமான கானோபாத்ரா

ஸந்த் ஜனாபாய் எழுதிய 'பஜன கரீ மகா தேவ' என தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள். சிவபெருமான் ராமனைத் துதிக்கிறார். ராமபிரான் சிவனுக்கு பூஜை செய்கிறார். இரண்டு தெய்வங்களையும் ஒன்றாகவே கருதுங்கள். அவர்கள் ஒருவரே, இருவரல்ல. சிவனுக்கும் ராமபிரானுக்கும் பேதம் இல்லை. ஒன்றே அனைத்து ஆத்மாவுக்குள்ளும் வியாபித்துள்ளது

...

''விட்டலன் கோயிலில் ருக்மணிக்கு மட்டுமல்ல, சத்யபாமாவுக்கும் தனி சன்னதி. பிரகாரத்தில் வெங்கடேஸ்வரரையும் தரிசிக்க முடியும். அந்த சன்னதிக்கு எதிரில் ஒரு மரம் காட்சி அளிக்கிறது. அது துரட்டு மரம். உள்ளூர்வாசிகள் தராட்டி என்கிறார்கள். கை கூப்பியபடி அதை வலம் வருகிறார்கள்''

பத்மநாபன் விவரிக்க, 'கோயிலுக்கு தலவிருட்சம் இருக்குமே, அதுபோன்றதா?' எனக் கேட்டாள் பத்மசனி.

''அதற்கும் மேல். அதை வலம் வந்து இலைகளை பிரசாதமாகப் பெறுகிறார்கள்''

பத்மாசனி மேலும் ''குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அரசமரத்தை சுற்றி வருவார்களே, அதுபோலவா? ''

''அப்படி அல்ல பத்மா. அந்த மரம் ஒரு பரமபக்தையின் வாழ்க்கையை நமக்கு எடுத்து ரைக்கிறது. சொல்லப்போனால் அந்த பக்தைதான் அந்த மரமே'' பத்மாசனி

ஆர்வம் அதிகரிக்க, கானோபாத்ரா​வின் வாழ்க்கையை எடுத்துரைக்கத் தொடங்கினார் பத்மநாபன்.

...

பண்டரிபுரத்தின் தெற்கு பகுதியில் இருந்த கிராமம் மங்கள​படே. அங்கே வசித்து வந்தாள் சியாமா என்ற பெண். கருவுற்றதும் தனக்கு பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டாள். அந்தக் காலத்தில் மகன் பிறக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். சியாமா மாறுபட்டு யோசித்ததன் காரணம் அவளது குலத்தொழில்.

தாசியாக வாழ்ந்தவள் அவள். தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் தந்தை யார் என்பது கூட அவளுக்கு தெரியாது. அவள் விருப்பப்படியே பெண் குழந்தை உரிய காலத்தில் பிறந்தது. அதற்கு கானோபாத்ரா என பெயரிட்டாள் ஷியாமா.

குழந்தை வளர்ந்தாள். இளமைப் பருவத்தில் பேரழகியாக மலர்ந்தாள். தாயின் மனது ஆனந்தத்தில் சிறகடித்து பறந்தது. ஆடல் பாடலில் மகளை தேர்ச்சி பெற வை​த்தாள். அன்னையின் மனம் வக்கிரமாக யோசித்தது.

''அக்கம் பக்கத்தில் உள்ள செல்வந்தர்களுக்கு இவளை விருந்தாக்கி வசதியான வாழ்க்கை வாழலாம் என்று நினைத்தோம். ஆனால் மகளின் பேரழகைப் பார்த்தால் மன்னனுக்கே கூட அவளை தாசி ஆக்கிவிடலாம் போலிருக்கிறதே. என் வாழ்க்கை, அவள் வாழ்க்கை இரண்டுமே செல்வச் செழிப்போடு இருக்குமே''

கானோபாத்ரா பேரழகி மட்டுமல்ல; புத்திசாலியும் கூட. இதன் காரணமாக நல்லது எது தீயது எது என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. வளர்ந்த சூழல் அவளது எண்ணங்களை மாசு படுத்தவில்லை. அவள் மனம் சிற்றின்பத்தை மறந்து பேரின்பத்தை நாடியது.

தன் எண்ணப் போக்கை அவள் கூறிய போது அன்னையால் அதை ஏற்க முடிய வில்லை. மகள் தன் தரப்பு விளக்கத்தை அன்னைக்குப் புரிய வைக்க முயற்சித்தாள்.

''அம்மா யோசித்துப் பார். இந்த இளமையும் வனப்பும் என்றென்றும் நிரந்தரமா? காலப்போக்கில் இளமையான, அழகான பெண் கிடைத்தால் மன்னன் என்னை ஒதுக்க மாட்டானா? அப்போது என்ன செய்வாய்? மூப்பு என்பது அனைவருக்கும் வரக் கூடியது. அப்போது யோசித்துப் பார்க்கும்போது நம் இளம் வாழ்க்கையை பற்றி ஒரு பெருமிதம் இருக்க வேண்டும். அருவருப்பான வாழ்க்கையை வாழ்ந்து விட்டோமே என அவமானப்படும் நிலை வந்து விடக் கூடாது. கடவுள் ஒருவரே நிரந்தரமானவர். அவனைச் சரண் புகுந்து என் வாழ்க்கையை வாழ நினைக்கிறேன். அனுமதியுங்கள்''

அம்மாவால் இந்த வாதத்தை ஒதுக்கித் தள்ள முடியவில்லை. அதேசமயம் ஏற்றுக் கொள்ளவும் தயக்கமாக இருந்தது. மவுனமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

ஆக உடனடியாக தவறான பாதைக்கு செல்வதை கானோபாத்ரா தவிர்த்து விட்டாள். ஆனால் அன்னையின் மனம் மீண்டும் மாறிவிட்டால்?

கானோபாத்ராவின் மனம் தவித்தது. அப்போது வாசலில் பஜனை சத்தம் கேட்டது. இருபது பேர் அடங்கிய குழுவினர் விட்டலன் திருநாமத்தை பாடியபடி சென்றனர். அவர்கள் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்!

கானோபாத்ரா வேகமாக அவர்களை அடைந்தாள். அவர்களிடம் பேசிப் பார்த்தபோது அவர்கள் பண்டரிபுரத்துக்கு செல்வதாக தகவல் கிடைத்தது. தனக்கான வழி கிடைத்து விட்டதாக நம்பினாள் கானோபாத்ரா. ''ஐயா என்னையும் உங்களோடு அழைத்துக் கொண்டு செல்வீர்களா?'' என்று கெஞ்சினாள். ''விட்டலனை தரிசிப்பதற்கு யாருக்கும் தடை இல்லை. நீ தாராளமாக வரலாம்'' என்றார்கள்.

கானோபாத்ரா அன்னையை அணுகினாள். பஜனைக் குழுவினரோடு பண்டரிபுரத்துக்குச் சென்று வருவதாகக் கூறினாள். மகளின் வாதத்தால் ஏற்கனவே மனம் மாறி இருந்த அன்னையும் சம்மதித்தாள். சில நாட்கள்தான் மகளை பிரிந்து இருக்கப் போவதாக அவள் (தவறாக) நினைத்து விட்டாள்.

பஜனைக்குழு பண்டரிபுரத்தை நெருங்கியது. அந்தத் தலத்தில் காலடி வைத்த உடனேயே தனது வருங்காலம் இனி அங்கேதான் என்பதை கானோபாத்ராவின் உள்ளுணர்வு உணர்த்தியது.

கோயில் கோபுரத்தைக் கண்ட உடனேயே ஆனந்த கண்ணீர் வந்தது. விட்டலன் குறித்த பல பாடல்கள் அவளிடம் இருந்து வெளிப்பட்டன. குழுவினர் ஆச்சரியப்பட்டனர். காரணம் அந்த அற்புதமான பாடல்கள் அவர்கள் கேட்டிராதவை. தங்களுடன் வந்த அந்த இளம் பெண் இயற்றிய பாடல்கள் அவை என்பதை உணர்ந்து பாராட்டினர். இந்த அங்கீகாரம் எல்லாம் கானோபாத்ராவின் உள்ளத்தில் ஏறவே இல்லை. விட்டலனின் கோயிலை கண்டதிலிருந்து மனம் அவள் வசம் இல்லை.

குழுவினர் விட்டல நாமத்தை வெளிப்படுத்திய படி கோயிலுக்குள் சென்றனர். ஆனால் கானோபாத்ரா வெளியிலேயே நிற்க வேண்டிய நிலை. காரணம் அக்கால நடைமுறைப்படி அவள் பிறந்த குலம் காரணமாக அவளால் உள்ளே பிரவேசிக்க முடியாது. ஆனால் இந்த தடை அவளுக்கு வருத்தம் தரவில்லை. வெளியில் இருந்து காண்பதே அவளுக்கு பெரும் சுகத்தை அளித்தது. விட்டலனுக்கு அருகாமையில் இருக்கிறோம் என்ற எண்ணமே போதுமானதாக இருந்தது. தன் வாழ்க்கை தறி கெட்டுப் போகாமல் தடுத்து விட்டோம் என்பதே அவளுக்கு நிறைவாக இருந்தது. விசேஷ நாட்களில் விட்டலன் உற்ஸவ ​மூர்த்தியாக ஊர்வலம் வருவானே. அப்போது காண்போம் என ஆறுதலடைந்தாள்.

தினமும் கோயிலின் அருகிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் இரவு தங்கத் தொடங்கினாள். காலை எழுந்தவுடன் சந்திரபாகா நதியில் குளித்து விட்டு கோயிலின் வாசலில் நின்றபடி விட்டலன் குறித்த பாடல்களை அடுத்தடுத்துப் பாடினாள். அந்தக் குரலின் இனிமை அருகில் இருந்த அனைவரையும் மயக்கியது.

அவள் பாடல்களை கேட்கவே தினமும் பக்தர்கள் அங்கே வந்தனர். ஆனால் இது குறித்து எல்லாம் சிறிதும் கவலைப்படாமல் கண்களை மூடியபடி பரவசத்துடன் அடுத்தடுத்து 'அபங்'களை பாடிக்கொண்டிருந்தாள்.

சில நாட்களாகியும் மகள் வீடு திரும்பாததால் தாய் தவித்தாள். தன் மகள் விட்டல பக்தி இயக்கத்தில் தனிச் சிறப்பைப் பெறப்போகிறாள் என்பது அப்போது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

கானோபாத்ராவின் வாழ்வில் சோதனைகளும் எளிதில் நம்ப முடியாத திருப்புமுனைகளும் அடுத்தடுத்து நிகழத் தொடங்கியிருந்தன.

-தொடரும்

ஜி.எஸ்.எஸ்.,






      Dinamalar
      Follow us