ADDED : மார் 29, 2019 02:49 PM

மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடு குறித்து காஞ்சிப்பெரியவரிடம் கேட்டார் பக்தர் ஒருவர்.
''மிருகங்கள் எல்லாம் பக்கவாட்டில் குறுக்காக வளரும். ஆனால் மனிதன் மட்டும் மேல்நோக்கி உயர்ந்து வளர்கிறான். அதற்கேற்ப உயர்ந்த சிந்தனைகள் அவனுக்கு இருக்கிறாதா என்றால் இல்லை.
விதவிதமான ஆசைகள், அடுக்கடுக்கான துன்பங்களில் சிக்கி மனிதன் தத்தளிப்பது போல மிருகங்களுக்கு துன்பம் வருவதில்லை. பெரியதாக சிந்தித்துச் செயல்படாததால் அவற்றுக்கு பாவச்சுமையும் இல்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் மிருகங்களுக்கு இருக்கும் இயற்கை வசதி, வாய்ப்புகள் மனிதனுக்கு இல்லை. நம்மை யாராவது அடித்தால் திருப்பித் தாக்க உடம்பில் இயற்கையான ஆயுதம் கிடையாது. மாட்டைத் தாக்கினால் அது திருப்பித் தாக்க கொம்பு, புலிக்குக் கூர்மையான நகம் இருக்கிறது. கடுமையான குளிரிலிருந்து தப்பிக்க, ஆடுக்கு உடல் முழுவதும் ரோமங்கள் உள்ளன. குதிரைக்குக் கொம்பு இல்லாவிட்டாலும் எதிரியிடம் இருந்து தப்பித்து ஓட அசாத்திய வேகம், பலம் கொடுத்திருக்கிறார் கடவுள். மனிதனால் அத்தனை வேகமாக ஓட முடியாது.
ஆனால் மனிதனுக்கு புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார். குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள மற்ற மிருகங்களின் ரோமத்தினால் கம்பளி செய்து கொள்கிறான். வேகமாக செல்ல வேண்டுமானால், வண்டியில் குதிரையைக் கட்டி அதன் வேகத்தைத் தனக்காக பயன்படுத்திக் கொள்கிறான். தனக்கென உடம்பில் ஆயுதம் இல்லாவிட்டால் என்ன? வெளியிலிருந்து விதவிதமான ஆயுதங்களை செய்து விடுகிறான்.
மற்றொரு விஷயமும் இருக்கிறது. ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு பிரதேசத்தில் தான் உயிர் வாழும். குளிர்ப் பிரதேசக் கரடி, உஷ்ண பிரதேசத்தில் வாழ முடியாது. இங்குள்ள யானைகள் அங்கு வாழ்வதில்லை. மனிதனோ எங்கும் வாழ, புத்தியை பயன்படுத்தி, சூழ்நிலையை உருவாக்குகிறான்.
புத்தியுள்ள மனிதன் இன்னும் முயற்சித்தால் காமம், கோபம் போன்ற தீயகுணங்களை விட்டு தெய்வ நிலைக்கு உயரவும் முடியும்'' என்றார்.
தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com
திருப்பூர் கிருஷ்ணன்