
காஞ்சி மடத்திற்கு கழுத்தில் சங்கிலியும், விரல்களில் மோதிரங்களும் மினுமினுக்க வந்தார் பணக்காரர் ஒருவர். கைகளில் வளையல் சலசலக்க, வைர கம்மல், மூக்குத்தி என முகம் பளபளக்க அவரது மனைவியும் உடன் வந்தாள். பழங்கள், பூமாலை... கூடவே மகாசுவாமிகளுக்கு சமர்ப்பிக்க பொன்னாடை, பணம் வைக்கப்பட்ட கவருமாக பெரிய தாம்பாளமும் வந்தது.
பணக்காரருடன் வந்த செயலாளர், 'வந்திருப்பவர் எத்தனை பெரிய மனிதர், என்னென்ன பதவிகள் வகிக்கிறார், கோயில்களுக்காக எவ்வளவு நன்கொடை கொடுத்திருக்கிறார்' என்பதை சுவாமிகளுக்கு விளக்கமாக கூறினார். அப்போது பணக்காரரின் முகத்தில் ஒரே புன்னகை.
சுவாமிகள் மவுனம் காத்தார்.
டியூப் லைட் தானம் கொடுத்தால் கூட, அதில் பெயரை பெரிதாக எழுதி வைக்கும் உலகம் தானே இது!
திடீரென சுவாமிகளின் பார்வை தொலைவில் நின்ற பெரியவர் ஒருவர் மீது விழுந்தது. பரம ஏழை என்பதை அவரது அழுக்கு வேட்டி சொல்லாமல் சொல்லியது. அருகில் வர சொல்லி கையசைத்தார்
சுவாமிகள். 'நீ இன்னார் தானே....' என்றும் விசாரித்தார். 'என் பெயர் எப்படி சுவாமிக்கு தெரிந்தது' என வியப்புடன் ஓடி வந்தார் அவர்.
அப்போது பணக்காரரிடம் சுவாமிகள், 'என் கிட்ட சமர்ப்பிக்க கொண்டு வந்த பணத்தை அவர் கிட்ட கொடுங்கோ. பொன்னாடையை அவருக்கே போர்த்துங்கோ. பிரதிபலன் பார்க்காம ஏராளமான சிவன் கோயில்ல உழவார பணி செய்யறவர் இவர். பல வருஷமா, புதர் மண்டி கிடக்கும் பழைய கோயில்களை சுத்தப்படுத்தற திருப்பணியை செய்யறார். ஆனா, யார்கிட்டயும் தன்னை பத்தி சொன்னதில்ல.... கர்வமில்லாமல் நம்மால எது முடியுமோ அதை ஆத்மார்த்தமா செய்யறது தானே ஆன்மிக பணி'' என்றார்.
மகாசுவாமிகள் தனக்கு சொல்லாமலே சொல்லும் அறிவுரை என்பது பணக்காரருக்கு புரிந்தது. தட்டில் இருந்த பணம், பழங்களை பெரியவரிடம் கொடுத்ததோடு,பொன்னாடையும் போர்த்தினார். மனைவியுடன் சேர்ந்து கைகுவித்து வணங்கினார். பணக்காரரின் மனமாற்றம் கண்ட சுவாமிகள் அட்சதை அளித்து ஆசியளித்தார்.