sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 22

/

பச்சைப்புடவைக்காரி - 22

பச்சைப்புடவைக்காரி - 22

பச்சைப்புடவைக்காரி - 22


ADDED : ஜூலை 12, 2024 09:13 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 09:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவளின் அநியாயங்கள்

அன்று நிறைந்த மனதுடன் கோயிலுக்குச் சென்றேன். கோயில் வாசலில் இருந்த கடையில் இருந்து ஒரு பெண் கத்தினாள்.

“பூஜை சாமான் வாங்காமப் போறீங்க?”

“என் உடல், பொருள், ஆவிதான் பூஜை சாமான்”

“சாமர்த்தியமாகப் பேசுறயா... நான் ஒரு அநியாயக்காரி என்று உனக்கு இப்போது காட்டப்போகிறேன்.”

யாரென புரிந்தது. விழுந்து வணங்கினேன்.

கண் முன்னே காட்சி விரிந்தது.ஒல்லியாக இருந்த ஒரு மனிதன் ஒரு கொல்லன் உலையில் உதவியாளனாக வேலை செய்தான். அவனுக்கு அருகே உஷ்ணம் தகித்துக் கொண்டிருந்தது. இரும்பு சாமான்களை கிடுக்கியின் மூலம் உள்ளே போடுவதும் அவை சூடானவுடன் எடுத்து உலைக்காரனின் சுத்தியலின் முன் வைப்பதுமாக இருந்தான். சில நிமிடங்களிலேயே அவன் துவண்டு போனான்.

பசி கிள்ளியது. வீட்டில் படுக்கையில் கிடக்கும் தாயை நினைத்துப் பார்த்தான். காலை அவளுக்கு பால் வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்கு வரவேண்டும் என நினைத்தான். அவனால் முடியவில்லை. இன்று எப்படியும் தாய்க்கு மருந்து வாங்கிக் கொடுத்து விடவேண்டும் என நினைத்தான்.

இந்த வாழ்வை விட்டே ஓடினால் என்ன என்று யோசித்தான். தற்கொலை செய்யலாம் என்ற எண்ணமும் மனதில் ஓடியது.

“டேய் சோணை, ஒழுங்காப் பிடிரா, கூறுகெட்டவனே” உலை முதலாளி திட்டினான். தன்னை நொந்தபடி வேலை செய்தான் சோணை.

அன்று சனிக்கிழமை. சம்பள நாள். கிடைத்த சொற்ப சம்பளத்தில்தான் இரண்டு ஜீவன்கள் சாப்பிட்டாக வேண்டும். இதில் தாய்க்கு எப்படி மருந்து வாங்குவது?

சோணைக்கு ஐந்து வயதான போதே அவனது தந்தை இறந்தார். அவனுடைய தாய்தான் கூலிவேலை செய்து வளர்த்தாள். இன்று நோய்வாய்ப்பட்டு கிடக்கிறாள். அடுத்த வாரம் முழுவதும் தான் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவதென்றும் அதில் மிச்சப்படும் காசில் தாய்க்கு மருந்து வாங்கலாம் என முடிவெடுத்தான்.

அதன்படி வாங்கி கொடுத்து விட்டான் சோணை. கையில் இருந்த காசை எண்ணி எண்ணிச் செலவழித்தான். வேலையில் கவனமாக இருந்தான். அதில் மகிழ்ந்த முதலாளி அவனுக்கு பத்து ரூபாய் கொடுத்தார். பக்கத்துக் கடைக்கு ஓடினான் சோணை.

“அண்ணே ஒரு பன், ஒரு டீ”

பன்னைத் தின்ன முற்பட்ட போது அவன் வேலை பார்க்கும் இடத்தில் எடுபிடியாக இருந்த சிறுவன் கை நீட்டினான்.

“காலையிலருந்து சாப்பிடலண்ணே” தன் கையில் இருந்த பன்னை சிறுவனிடம் கொடுத்தான் சோணை.

“என்ன அநியாயம் இது, தாயே! கடுமையாக உழைக்கிறான். தாய்க்காக தியாகம் செய்கிறான். பசியில் இருந்தபோதும் தானம் செய்கிறான். அவனைப் போய் பாடாய்ப் படுத்துகிறீர்களே?”

“நான் செய்த அடுத்த அநியாயத்தையும் பார்த்துவிட்டு முடிவுக்கு வா”

சென்னைக்கு வெளியே இருந்த ஒரு பிரமாண்ட பண்ணை வீட்டின் படுக்கையறை. ஐம்பது வயதான நடிகன் முன்னால் உயர்ந்த ரக மது இருந்தது. ஒரு அழகியின் மடியில் படுத்தபடி மதுவைச் சுவைத்துக் கொண்டிருந்தான். கதவு தட்டப்பட்டது.

“உள்ளே வா” வந்தவன் நடிகனின் எடுபிடி.

“உங்ககூட நடிக்கற முத்துசாமி வந்திருக்காரு. பொண்டாட்டிக்கு நெஞ்சுவலியாம். பணம் வேணும்னு...”

“அந்த நாய்க்குச் சல்லிக் காசு தரமாட்டேன்னு துரத்தி விடுரா”

“கெஞ்சுறாரு. பாவமா இருக்குண்ணே”

“இங்க வாடா”

அருகில் போன அந்த எடுபிடிப் பையனைக் காலால் உதைத்தான் நடிகன். பையன் நிலை தடுமாறிக் கீழே விழுந்தான்.

“நான் சொன்னா சொன்னதுதான். எதிர்த்துப் பேசின மிதிச்சே கொன்னுருவேன்... போ”பையன் ஓடிவிட்டான்.

அழகி மென்மையான குரலில் பேசினாள்.

“என் வாழ்க்கைதான் இப்படி தறிகெட்டுப் போச்சி. என் தங்கச்சிக்கு நல்ல வரன் கெடைச்சிருக்கு. மூணு லட்சம் கொடுத்தீங்கன்னா அவள வாழ வச்சிருவேன்”

“மூணு என்ன, அஞ்சு லட்சம் தரேண்டி. ஒரு நாள் அவள என்கிட்ட அனுப்பி வை.”அழகியின் கண்களில் கண்ணீர். மனதில் செயல்படுத்த முடியாத ஆத்திரம். நடிகனின் செல்போன் ஒலித்தது.

“ஜூன் மாசம் உங்க கால்ஷீட் கொடுத்தீங்க்கன்னா படத்த முடிச்சிரலாம்ணே''

“இன்னும் அஞ்சு கோடி கொடுத்தா யோசிக்கலாம்”

எதிர்முனையில் இருந்தவர் ஏற்றுக்கொண்டார்.

காட்சி முடிந்ததும் தாயின் காலில் விழுந்தேன்.

“தாயே! நடப்பது உங்கள் ஆட்சி. உங்களைக் குறை சொல்ல எந்த நாய்க்கும் உரிமை இல்லை. இருந்தாலும் வலிக்கிறது தாயே! மனம் நிறைய அன்புள்ளவனுக்கு வறுமை, பட்டினியை கொடுத்துவிட்டு மனிதத் தன்மையே இல்லாதவனுக்குக் கோடிக்கோடியாகப் பணம், இன்பத்தை கொடுக்கிறீர்களே”

வெள்ளிக்காசுகளை தரையில் உருட்டியதை போல் சிரித்தாள் பச்சைப்புடவைக்காரி.

“அடிக்கடி என்னை நேரில் பார்த்துப் பேசும் உனக்கே இந்தச் சந்தேகம் வந்ததென்றால் மற்றவர்கள் நிலையை யோசித்துப் பார்”

குனிந்தபடி அழுதேன்.

“நான் காட்டிய இரண்டு காட்சிகளிலும் வந்தவன் ஒருவன்தான். ஒருவேளை சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாத சோணைதான் பின்னாளில் பெரிய நடிகனானான். கோடிக்கணக்கில் சம்பாதித்தான். மனம்போன போக்கில் மனிதத்தனமே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். சோணையாக இருந்தபோது அவன் மனம் நிறைய அன்பு இருந்தது. பசியோடு இருக்கும் போதும் உணவைப் பகிர்ந்து கொண்டான். தன்னைப் பெற்ற தாய்க்கு மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக சாப்பாட்டையே தியாகம் செய்தான்.

சரி, அவனை வாழ வைக்கலாம் என அவனை நடிகனாக்கினேன். பெரிய வாழ்க்கையைக் கொடுத்தேன் சீரழிந்து போனான். நான் அநியாயம் செய்கிறேன் என நீயே சொல்கிறாய்.”

“இனிமேல் என்ன ஆகும் தாயே?”

“அதையும்தான் பாரேன்”

அந்த மனிதன் மரண வேதனையில் இருந்தான். தொண்டையில் துளைபோட்டு அவனைச் சுவாசிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அதிகமாகக் குடித்ததால் கல்லீரல் கெட்டுவிட்டது என்றார்கள். கல்லீரல் மாற்றுச் சிகிச்சையில் ஏகப்பட்ட சிக்கல்கள். வலி தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தான்.

மருத்துவர் அவனுடைய மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“சர்க்கரை அதிகமாகி கால்ல பிரச்னை ஆயிருச்சி. நாளைக்கு ஆப்பரேஷன் செஞ்சி வலது காலை முழங்கால் வரைக்கும் எடுக்கணும். இல்லேன்னா உயிருக்கே ஆபத்து”அவனுடைய மனைவி அலறினாள்.

“அதே நடிகன்தான். ஆறு மாதம் வலியில் துடித்தபின் இறப்பான். அது அவன் விதி. உனக்கு என்ன வேண்டும் என்று சொல்”

“துன்பத்தில் துடித்தாலும், இன்பங்களில் திளைத்தாலும் எந்த நிலையிலும் யாரையும் புண்படுத்தாத மனம் வேண்டும் தாயே”

“அந்த நடிகனைப்போல் வறுமையில் உழன்று, செல்வத்தில் ஆடி, பின் துன்பத்தில் துவண்டு, மீண்டும் மீண்டும் பிறந்து வாழ்ந்து இறந்தபின் கிடைக்கும் ஞானம் அது. அதை வரமாகத் தர முடியாது”

“எந்தச் சூழ்நிலையிலும் அடுத்தவரைக் காயப்படுத்தக் கூடாது என்பதை எப்போதும் ஒரு தவமாகச் செய்யும் வல்லமையைக் கொடுங்கள் தாயே”

கலகலவெனச் சிரித்துவிட்டுக் காற்றோடு கலந்தாள் கனகாம்பிகை.

-தொடரும்வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us