
சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம் ஆகிய ஐந்தும் கிருஷ்ணரிடம் எப்போதும் இருப்பவை. பார்ப்பதற்கு ஆபரணங்களாக இருந்தாலும் எதிரிகளுக்கு ஆயுதங்களாக இருக்கும். சங்கு எப்படி ஆயுதமாகும்? என நினைக்கலாம். இப்படித்தான் துரியோதனனும் ஒருமுறை ஏமாந்து போனான்.
பாரதப் போரில் கிருஷ்ணரின் உதவி கேட்டு அர்ஜுனன் துவாரகைக்குப் போனான். துரியோதனனும் அங்கு வந்தான். இருவரும் தனித்தனியாக போரில் உதவிபுரிய வேண்டும் எனக் கேட்டனர்.
''தருமனுக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்து விட்டேனே'' என்றார் கிருஷ்ணர்.
''சரி அப்படியானால் பாண்டவருக்கு துணை நின்றாலும் அவர்களுக்காக ஆயுதத்தை ஏந்தி போரிடக் கூடாது'' என துரியோதனன் வேண்டினான். கிருஷ்ணரும் சம்மதித்தார். அர்ஜுனன் என்ன கேட்டான் தெரியுமா? ''கிருஷ்ணா...எனக்கு தேரோட்டியாக இருக்க வேண்டும்'' எனக் கேட்டான். அதற்கும் சம்மதித்தார். ஏனெனில் தேரோட்டுபவருக்கே எஜமானரின் வெற்றியை அறிவிக்க சங்கு ஊதும் உரிமை உண்டு.
கிருஷ்ணரின் சங்கிற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது துரியோதனனுக்கு தெரியவில்லை.
போர் நடக்கும் போது தான் அதன் சக்தியை உணர்ந்தான். கிருஷ்ணர் ஊதிய போதெல்லாம் துரியோதனனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்தனர். கிருஷ்ணரின் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு போரில் முழங்கியதால் நல்லவர்களுக்கு வெற்றி கிடைத்தது.