sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 7

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 7

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 7

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 7


ADDED : செப் 22, 2023 10:10 AM

Google News

ADDED : செப் 22, 2023 10:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புத்தாய் அனசூயை

பரத்வாஜ முனிவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் சித்திரகூட மலையை நோக்கிச் சென்றனர். வழியெங்கும் தவத்தில் இருந்த முனிவர்களை தரிசித்து ஆசி பெற்றனர். அப்படியே அத்திரி முனிவரின் ஆசிரமத்தை அடைந்தனர். முனிவர் தன் மனைவியான அனசூயையுடன் வரவேற்று உபசரித்தார். அனசூயையைக் கண்ட சீதை பாச உணர்வால் மனம் நெகிழ்ந்தாள். ஆமாம், அவளின் தாயார் சுநைனா, மாமியார் கோசலை, இளைய மாமியார் கைகேயி, சுமித்திரையைப் போல மனதிற்கு நெருக்கமானவராக அனசூயை தோன்றினாள். அவளும் சீதையைத் தன் மகளாக கருதி கட்டியணைத்தாள். சீதையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

யார் இந்த அனசூயை?

முனிபத்தினியான இவளது கற்பின் சக்தியை வானுலக தேவர்களும் கேள்விப்பட்டு வியந்தனர். கற்பின் சக்தியால் யாரையும், எந்த நிலைக்கும் மாற்றும் வலிமை கொண்டவள் என்பதை சோதித்து பார்க்க திட்டமிட்டனர். தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி மூவரும் அவர்களின் கணவன்மார்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் பூலோகத்திற்கு அனுப்பினர்.

'ஒரு பெண் பாராட்டப்படுகிறாள் என்றால் அதுவே மற்ற பெண்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி விடுகிறதே... இதன் மூலம் தேவியர் மூவருக்கும் தக்க பாடம் கிடைக்கப் போகிறது' என மூவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

பிரம்மச்சாரியாக உருமாறி அத்திரி முனிவரின் ஆசிரம வாசலில் நின்று பிச்சை கேட்டு நின்றனர். அப்போது முனிவர் வெளியே சென்றிருந்ததால் அதிதியாக (விருந்தினராக) வந்தவர்களை அனசூயை இன்முகத்துடன் உபசரித்தாள்.

அவர்களுக்கு ஆசனம் கொடுத்து அமரச் செய்தாள். வாழை இலையில் உணவுகளைப் பரிமாறவும் தயாரானாள். அதைத் தடுத்தபடி, 'உணவிடும் போது ஆடை உடுத்தியிருப்பது கூடாது. வெற்றுடம்போடு உணவு அளித்தால் மட்டுமே நாங்கள் ஏற்போம்'' என நிபந்தனை விதித்தனர்.

அனசூயை மனதுக்குள் கணவரை தியானித்த போது அவர்கள் யார், வந்ததன் நோக்கம் எல்லாம் மனக்கண்ணில் தெரிந்தது. வலக்கையால் நீரை அள்ளி எடுத்து கணவரை வணங்கியபடி மூவர் மீதும் தெளித்தாள். அவர்கள் பச்சிளம் குழந்தைகளாக மாறினர். அனசூயை ஆடையைக் களைந்த நிலையில் குழந்தைகளுக்கு பாலுாட்டியதும் மீண்டும் உடுத்திக் கொண்டாள். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பியதும் நடந்ததை தெரிவித்தாள். ஞான திருஷ்டியால் உண்மையை உணர்ந்த அவரும் தெய்வக் குழந்தைகளை வணங்கினார். அன்னையின் அரவணைப்பில் அக்குழந்தைகள் வளர்ந்தனர்.

தேவியர் மூவரும் ஆசிரமத்திற்கு வந்தனர். அனசூயையின் கற்பைச் சோதிப்பதற்காக நிகழ்த்திய செயல் இது எனச் சொல்லி மன்னிப்பு கேட்டனர். அப்போது மும்மூர்த்திகள், 'எங்களைக் குழந்தைகளாக்கி பாலுாட்டிய அனசூயை எங்களின் தாயாகி விட்டார். ஆகவே மூவரின் சக்தியும் கொண்ட 'தத்தாத்ரேயர்' என்னும் அவதாரமாக அத்திரி, அனுசூயா தம்பதிக்கு தோன்றுவோம்' என வரமளித்தனர். அதன்படி தத்தாத்ரேயர் அவதாரம் நிகழ்ந்தது.

அனசூயை என்பதற்கு 'பொறாமை இல்லாதவள்' என்பது பொருள். அனசூயையை தரிசித்தது என் பாக்கியம் என மகிழ்ந்தாள் சீதை. அவளின் மடி மீது தலை வைத்து தாய்ப்பாசம் அறியாத தன் ஆற்றாமையை போக்கிக் கொண்டாள் சீதை.

தன் நகைகளை எல்லாம் சீதையிடம் கொடுத்து, '' எனக்கு இவற்றின் மீது ஆசை இல்லை. என் கணவரான அத்திரி மகரிஷியை விட சிறந்த பொக்கிஷம் எனக்கு வேறில்லை. துறவு வாழ்வில் நகை அனாவசியமே. நீயே இவற்றை வைத்துக் கொள்'' என்றாள்.

ஜனகரின் மகளும், தசரதனின் மருமகளும் ஆன சீதையின் ராஜ வாழ்வுக்கு நகை தேவையானதாக இருந்தது. ஆனால் இப்போது அவசியம் இல்லாமல் போயிற்று. இருக்கும் போது அனுபவிப்பதும், இல்லாத போது வருத்தப்படாததுமான சீதையின் மனப்பான்மை அனசூயையைப் பெரிதும் கவர்ந்தது. அதனாலேயே நகைகளை சீதைக்கு கொடுத்து அழகு பார்த்தாள்.

'அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து அவன் அரும்

பன்னி கற்பின் அனசூயை பணியால் அணிகலன்

துன்னு தூசினொடு சந்து இவை சுமந்த சனகன்

பொன்னொடு ஏகி உயர் தண்டக வனம் புகுதலும்'

-கம்பர்

நகைகளை அணிந்தபடி வந்து நின்ற சீதையைப் பார்த்து பிரமித்தான் ராமன். 'அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த நகைகள் உன்னிடம் வந்ததால் தமக்குப் பெருமை தேடிக் கொண்டன' என மகிழ்ந்தான் அவன். 'இந்த நகைகள் எதிர்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும்' என அனசூயை நினைத்துக் கொண்டாள்.

அப்படித்தானே ஆயிற்று! சீதை கடத்தப்பட்ட தகவலை சொன்னவை இந்த நகைகள் தானே! புஷ்பக விமானத்தில் ராவணன் துாக்கிச் சென்ற போது என்ன செய்வதென அறியாமல் திகைத்த சீதை. தன்னைத் தேடி வரும் ராமனுக்கு அடையாளமாக இருக்கட்டும் எனக் கருதி நகைகளை கீழே வீசினாள்.

வானரப் படையினர் மூலமாக எடுத்து வரப்பட்ட நகைகளைப் பார்த்ததும் அனசூயையால் சீதைக்கு தரப்பட்டவை இவை என்பதை ராமன் புரிந்து கொண்டான்.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us