sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா - (3)

/

ஷிர்டி பாபா - (3)

ஷிர்டி பாபா - (3)

ஷிர்டி பாபா - (3)


ADDED : டிச 11, 2013 02:28 PM

Google News

ADDED : டிச 11, 2013 02:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் தொடங்கினார்களே சிலர்! அப்போதுதான் யாரோ சீற்றத்தோடு பெருமூச்சு விடும் ஒலி கேட்டது.....

வேப்பமரத்தின் அருகாக இருந்த பாம்புப் புற்றிலிருந்து ஒரு ராஜநாகம் பெருமூச்சோடு உர்ரென்று தலையைத் தூக்கிச் சீறியது.

அத்தனை பெரிய நாகப்பாம்பை யாரும் அதுவரை பார்த்ததில்லை. அதன் குடைபோல் விரிந்தபடத்தையும் பளபளவென மின்னும் வழவழப்பான வசீகரத் தோற்றத்தையும் வியந்து பார்த்த மக்கள், ''நாகராஜா! எங்களைக் காப்பாற்று!'' என்று முணுமுணுத்தவாறே கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

வேப்ப மரத்தடியிலிருந்து இப்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இளைஞன், நாகராஜாவைக் கனிவோடு பார்த்தான்.

''சரி.. சரி... நான் சொல்லித்தான் இவர்கள் தோண்டுகிறார்கள். நீ கோபம் கொள்ள வேண்டாம்! அமைதியாக இரு!'' என்று நாகப்பாம்பிடம் சொன்னான்!

பாம்போடு பேச முடியுமா? அவன் பேசினானே! அந்தப் பாம்பும் அவன் பேச்சைப் புரிந்துகொண்டதே!

புற்றைவிட்டு மெல்ல ஊர்ந்து வெளிப்பட்ட ராஜநாகம், இளைஞன் அமர்ந்திருந்த இடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வலம் வந்தது. பின் அவன் பாதங்களில் தலைவைத்து நமஸ்கரித்தது. பிறகு மறுபடி அதே புற்றுக்குள் போய் மறைந்துவிட்டது!

இந்த விந்தையான காட்சியைப் பார்த்த பெண்மணிகள் கன்னத்தில் கைவைத்து, ''என்னடியம்மா இது! அதிசயமாக இருக்கிறது!'' என்று வியப்பில் ஆழ்ந்தார்கள்.

இளைஞன் கலகலவெனச் சிரித்துக் கொண்டே ''நடக்கட்டும்! வேப்ப மரத்தின் வேரை வெட்டிவிடாதீர்கள். அது இந்த ஊரின் காவல் மரம்!'' என்று எச்சரித்து, தோண்டுகிறவர்களுக்கு உத்தரவு கொடுத்தான்.

மணிநாதம் போன்ற இளைஞனின் சிரிப்பில் மயங்கிய அவர்கள், பின் சுதாரித்துக் கொண்டு மறுபடி தோண்டத் தொடங்கினார்கள். மண்ணுக்குள்ளே அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

மண்ணை மெல்ல மெல்லத் தள்ளிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே தென்பட்டது ஒரு குகை. அந்த அழகிய குகையில் நான்கு மாடங்கள் இருந்தன. நான்கு மாடங்களிலும் நான்கு தனித்தனி அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. அதை விட ஆச்சரியம்! அந்த விளக்குகள் ஒவ்வொன்றும் அப்போதுதான் ஏற்றி வைக்கப்பட்டதுபோல் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன.

மூடிய குகைக்குள் விளக்கை ஏற்றிவைத்தது யார்? மண்மூடிய குகைக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது எப்படி?

குகை நடுவே ஒரு மரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. மிகச் சில கணங்கள் முன்னால் வரை, யாரோ ஒரு ரிஷி அதில் அமர்ந்து தவம் செய்திருக்க வேண்டும்.

'அந்த ரிஷி யார்? இப்போது அவர் எங்கே போனார்?' அன்றலர்ந்த மலர்களால் அந்தப் பலகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலகையின் மேலே ஒரு ஜபமாலை. அந்த ரிஷி பயன்படுத்திய ஜபமாலையாக இருக்கலாம்.

குகை முழுவதும் கமகமவென ஒரு மனோகரமான நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மண்ணால் மூடியிருந்த குகை இப்போது திறக்கப்பட்டதால் அந்த மணம் வெளியேயும் பரவி, கிராமம் முழுவதையும் வாசனை நிறைந்ததாக மாற்றியது.

மண்ணைத் தோண்டி குகையைக் கண்டுபிடித்தவர்கள் மேலே ஏறி வெளியே வந்து தாங்கள் கண்ட அதிசயக் காட்சியை இளைஞனிடமும் மக்களிடமும் சொன்னார்கள். ஏற்கனவே தெரிந்த விஷயத்தைக் கேட்பதுமாதிரி, அவர்கள் சொன்னவற்றைச் சிரித்துக் கொண்டே கேட்டான் இளைஞன்.

''சரி.... பூஜாரி சொன்னபடி மண்ணைத் தோண்டிப் பார்த்தாயிற்று அல்லவா? இனி அந்த இடத்தை முன்போல் மண்போட்டு மூடிவிடுங்கள்! இனி எக்காரணம் கொண்டும் இந்த இடத்தைத் திறக்காதீர்கள்! ஒரே ஒருமுறை திறந்து பார்க்க மட்டும்தான் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!'' அவன் எச்சரிப்பதுபோல் கூறினான்.

குகை மிகுந்த கவனத்தோடு மறுபடி மண்போட்டு மூடப்பட்டது. மக்களின் முகங்களில் தென்பட்ட கேள்விக்குறியைப் பார்த்து, இளைஞன் விளக்கம் தருவதுபோல் பேசலானான்:

''உள்ளே இருக்கும் குகை, குருநாதர் தவம் செய்யும் குகை. உலக ÷க்ஷமத்திற்காக அவர் எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார். அடிக்கடி மண்ணைத் திறந்து குருநாதர் தவத்தைக் கலைக்கலாகாது. இந்த வேப்ப மரத்தின் வெளியில் நாள்தோறும் விளக்கேற்றி வையுங்கள். வியாழக்கிழமை மறக்காமல் ஊதுபத்தி ஏற்றி வழிபடுங்கள். இச்செயல்கள் காரணமாக கிராமத்திற்கு மங்கலங்கள் பெருகும். அனைவரும் சுபிட்சமாக வாழ்வீர்கள். சரி... நீங்கள் எல்லோரும் இப்போது வீட்டுக்குச் செல்லலாம். நாளை அதிகாலை வரை யாரும் மறுபடி இங்கு வரவேண்டாம்!''

இளைஞனின் கண்டிப்பான குரலைக் கேட்டும், அந்தக் குகை பற்றிய வியப்பில் தோய்ந்தும் மக்கள் மெல்ல மெல்லக் கலைந்தார்கள். இளைஞன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து நிர்ச்சலனமான தியானத்தில் ஆழ்ந்தான்.

மக்கள் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். குகையில் குருநாதர் தவம் செய்வதாய்ச் சொன்னானே? யார் அந்த குருநாதர்? இவனே தானா?

நினைத்தாலே சாந்தி தரும் அவன் திருமுகத்தை மனத்தில் தேக்கியவர்களாய் அனைவரும் மனமில்லாமல் தங்கள் இல்லம் நோக்கி நடந்தார்கள்.

அந்த இளைஞனுக்குச் சாப்பிடச் சப்பாத்தி கொடுத்த பாய்ஜா மாயி, 'இரவில் தன்னந்தனியே இவன் இங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கப் போகிறான் போலிருக்கிறதே? பாம்புப் புற்று வேறு அருகில் இருக்கிறதே! இறைவா! எந்த ஆபத்தும் வராமல் இவனைக் காப்பாற்று!' என்று உளமார வேண்டிக்கொண்டாள். இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடமே வேண்டிக் கொள்ளும் அவளின் வெகுளித்தனத்தை என்னென்பது!

மறுநாள் அதிகாலை எழுந்தவுடன், இளைஞனை மீண்டும் தரிசிக்கும் ஆவலில் ஓடோடி வந்தாள் பாய்ஜாமாயி. ஊர்மக்கள் அனைவரும் அவளைத் தொடர்ந்து வந்து அதே வேப்பமரத்தடியில் மறுபடி கூடினார்கள்.

ஆனால், அந்த இளைஞன் அங்கே இல்லை. அதுமட்டுமல்ல, அவன் நேற்று அங்கே இருந்ததற்கான சுவடு கூட இல்லை. ஏன்... நேற்று வேப்ப மரத்தடியில் தோண்டிப் பார்த்து பின் புதுமண்ணைப் போட்டு மூடினார்களே? வேப்ப மரத்தடி பழையபடி தான் இருந்ததே தவிர, தோண்டிப் பார்த்து மறுபடி மூடியதற்கான அறிகுறி எதுவுமே அங்கு தென்படவில்லை!

அப்படியானால் நேற்று நடந்ததுதான் என்ன? அது உண்மையா... இல்லை.. மாயத் தோற்றமா? ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்து பார்த்தது மாயத் தோற்றமாக இருக்குமா?

ஆனால், இப்போது நினைத்துப் பார்த்தால், இந்த உலகமே மாயத் தோற்றம் என்றும், அந்த இளைஞன் ஒருவன் மட்டும் தான் உண்மை என்றும் அல்லவா தோன்றுகிறது?

இந்த வேப்பமரத்தடியை மீண்டும் தோண்டிப் பார்த்தால் என்ன? அந்த இளைஞன் மரத்தடியை மறுபடி தோண்டக் கூடாது என்றல்லவா உத்தரவு போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்?

அந்த தெய்வீக இளைஞன் மறுபடி வருவானா? ஷிர்டி மக்கள் அனைவரும் அவன் மறுபடி வரவேண்டும் என்று பிரார்த்தனை

செய்யலானார்கள். நாள்தோறும் அவன் சொன்னபடி அந்த வேப்பமரத்தடியில் விளக்கேற்றி வைத்து அவனது தரிசனத்திற்காக ஏங்கிக் காத்திருந்தார்கள். அந்த இளைஞன் வந்தானா?

அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us