sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா! (11)

/

ஷிர்டி பாபா! (11)

ஷிர்டி பாபா! (11)

ஷிர்டி பாபா! (11)


ADDED : மார் 04, 2014 02:06 PM

Google News

ADDED : மார் 04, 2014 02:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருடன், தான் திருடிய வைர நகைகளெல்லாம் பாபாவுடையது என்று கூறுகிறானே! என்ன செய்வது இப்போது? பாபாவின் மகிமைகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நீதிபதி சற்றுத் தயக்கத்தோடு பாபாவிடம் கேட்டார்:

''பாபா! திருடன் திருடிய நகைகளெல்லாம் உங்களுடைய வைதானா? திருடன் அப்படித்தான் சொல்கிறான்!'' நீதிபதி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, பாபா கலகலவென்று நகைத்தார். என்ன மனோகரமான சிரிப்பு! மக்களும் நீதிபதியும் அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் மயங்கினார்கள்.

பாபா பேசலானார்: ''ஆம் நீதிபதி அவர்களே! திருடன் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான். அவன் வைத்திருக்கும் நகைகள் அத்தனையும் என்னுடையவைதான்!'' பாபாவின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் திகைத்து நின்றார்கள். திருடனும் திகைப்பில் ஆழ்ந்தான்.

அவனுக்குத் தெரியுமே அந்த நகைகள் பாபாவுடையது இல்லை என்று! தப்பிக்கத் தானே அவன் பொய் சொன்னான்? ஆனால், பாபா திருட்டு நகைகள் தம்முடையவை என்கிறாரே?

பாபா தொடர்ந்து பேசலானார்:

''இவன் திருடிய நகைகள் மட்டுமல்ல, உலகில் உள்ள தங்கம் வெள்ளி வைரம் வைடூர்யம் எல்லாமே என்னுடையவைதான். ஏன், இந்த ஊர், இந்த நதி, இந்தக் காற்று, கூடியிருக்கும் மக்கள், ஆகாயத்தில் தென்படும் நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன், சூரியன் என அண்ட பகிரண்டத்தில் உள்ள அனைத்தும் என்னுடையவைதான். நான் படைத்தவை என்னுடையவையாகத் தானே இருக்கும்? இதுகூட உங்களுக்குப் புரியவில்லையா? ஒன்று சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள் நீதிபதி அவர்களே! நீங்களும் கூட என்னுடையவர்தான்! ஞாபகம் இருக்கட்டும்!''

இந்த வாக்கியங்களைச் சொல்லும்போது பாபாவின் முகம் தேஜோமயமாய்ப் பிரகாசித்தது. அவரின் ஆலய மணிக் குரல் கணீரென்று இந்த வாக்கியங்களைப் பிரகடனம் செய்தது. அப்போது பாபாவின் திருமுகத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களைச் செய்யும் தெய்வத்தையே தரிசித்தார்கள் மக்கள். நீதிபதி பரவசத்தோடு பாபாவை இருகரம் கூப்பி வணங்கினார்.

அதன்பின் நீதிமன்ற முறைப்படித் திருடனுக்குத் தண்டனை தரப்பட்டது. ஆனால், பாபாவின் அறிவிப்பைக் கேட்ட அந்தத் திருடன், பின்னாளில் பாபாவின் தீவிர அடியவனாக மாறினான். இந்த விசாரணையில் பாபா கூறிய பதில்களால் பாபா புகழ் மேலும் பரவலாயிற்று.

ஷிர்டியை அடுத்து ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு பணியாற்றி வந்தார் ஓர் ஆசிரியர். பரம ஏழை அவர்.

மாதவராவ் மல்வந்த் தேஷ் பாண்டே என்பது அவரது பெயர்.

பாபா ஓர் அவதார புருஷர் என்பதை மிக நல்லவரான அவரது மனம் எளிதில் உணர்ந்து கொண்டது. பாபாவைக் கண்கண்ட தெய்வமாகக் கருதி இதயத்தில் பூஜித்து வந்தார் அவர்.

தாம் எதுசெய்தாலும் அந்தச் செயலை மனத்தால் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்து விடுவார். தமக்கு எந்தத் தீங்கு வந்தாலும் அதிலிருந்து பாபா தம்மைக் காப்பாற்றி விடுவார் என்பது அவரது பரிபூரண நம்பிக்கை.

அவரது குடும்ப வாழ்விலும் பணி வாழ்விலும் சின்னச் சின்னப் பிரச்னைகள் வரத்தான் வந்தன. பிரச்னையே இல்லாத வாழ்க்கை ஏது? ஆனால், அந்த எல்லாப் பிரச்னைகளும், பாபாவின் அருளால் சுமுகமாக முடிந்தன. ஒவ்வொரு பிரச்னையும் தனக்கு சாதகமாகத் தீரும்போது மனத்தால் பாபாவுக்கு நன்றி சொல்லிக் கொள்வார் அவர். இயன்ற போதெல்லாம் பாபாவை நேரில் சென்று தரிசித்து அவரது அருளுரைகளைக் கேட்டு மகிழ்வார்.

ஒருநாள் அவர் வாழ்வில் அவர் முற்றிலும் எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவம் திடீரென நடந்தது. பாபாவின் மசூதிக்குச் சென்று அவரை தரிசிக்கும் நோக்கத்துடன் சாலையில் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென்று எங்கிருந்தோ சாலையின் குறுக்காக ஊர்ந்து வந்தது ஒரு கருநாகம்! அவரைச் சடாரென ஒரு கொத்துக் கொத்தி விட்டு, விறுவிறுவெனச் சாலையைக் கடந்து சென்று மறைந்துவிட்டது.

நாகப் பாம்பின் கொடிய விஷம் அவரது உடலெங்கும் கிடுகிடுவெனப் பரவத் தொடங்கியது. ஒரு கணத்தில் அவர் மேனி நீலம் பாரித்தது. அவரது வாயில் நுரை தள்ளத் தொடங்கியது. அவர், தனக்கு என்ன நடந்ததென்றே அப்போதுதான் புரிந்துகொண்டார்.

சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். பார்த்தவர்கள் அத்தனை பேரும் பதறித் துடித்தார்கள். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்தக் கொடிய விஷத்தின் பாதிப்பால் அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் என்ன செய்வது இப்போது? அதிர்ச்சியில் தத்தளித்தார்கள் அவர்கள்.

ஆனால், மாதவராவுக்குத் தான் பாபா மேல் தீவிர நம்பிக்கை உண்டே? இதுவரை தன் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றியவர் மனித வடிவில் வந்திருக்கும் அந்தக் கடவுள் தானே! இந்தச் சிக்கலில் இருந்தும் அந்தக் கடவுள்

தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என்ன! பாபாவிடம் சரணடைந்தால் தப்பித்துவிடலாம் என அவர் சரியாகவே முடிவெடுத்தார். ஒருகணம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடி வந்தார். அவருடன் மற்றவர்களும் கவலையோடு அவரைப் பின்தொடர்ந்து ஓடிவந்தார்கள்.

''என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற்றுங்கள்! உங்களையே சரணடைந்திருக்கும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!'' என்று கதறியவாறே அவர் மசூதிப் படிகளில் தன்னால் இயன்றவரை வேகமாக ஏறத் தொடங்கினார்.

கொட்டியதோ கொடிய விஷமுள்ள கருநாகம். அது கடித்தால் மரணம் என்பது நிச்சயம். கடும் விஷத்தின் பாதிப்பிலிருந்து பாபா எப்படி இவரைக் காப்பாற்ற முடியும்? சிலர் சந்தேகப்பட்டார்கள். பலர், பாபா நினைத்தால் இவரைக் காப்பாற்றி விட முடியும் என்று முழுமையாக நம்பினார்கள்.

மசூதியில் படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூர்மையாகப் பார்த்தார் பாபா. வாயில் நுரை தள்ளத் தள்ளப் படிகளில் மேலேறி வரும் தன் அடியவனைப் பாம்பு கடித்திருக்கிறது என்பது உடனேயே அவருக்குத் தெரிந்து விட்டது. அவரது கண்பார்வையின் கூர்மை பார்த்தவர்களைத் திகைக்க வைத்தது.

அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, ''ஏறாதே! நான் கட்டளையிடுகிறேன். ஏறாதே! நில்! இறங்கு! உடனடியாகக் கீழே இறங்கு!'' என்று பாபா ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டார். அவரது உரத்த கூச்சல் திடுக்கிடும் அளவு அச்சம் தருவதாக இருந்தது. கேட்ட மக்கள் அனைவரும் வெலவெலத்தார்கள்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லையே! பாபா தன்னைக் காப்பாற்றுவார் என்றல்லவோ தேடிவந்தோம், இப்போது நாம் நம்பி வந்த பாபா இப்படிச் சொல்கிறாரே, என்ன செய்வது என பாபாவின் தீவிர அடியவரான மாதவராவ் திகைத்துச் செய்வதறியாது அப்படியே படிகளில் மேலே ஏறாது நடுவில் நின்றார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தினரும் கூட அருளேவடிவான பாபா, இப்படிச் சொல்ல என்ன காரணம் என்றறியாமல் விக்கித்து நின்றனர்.....

- அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us