sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா (13)

/

ஷிர்டி பாபா (13)

ஷிர்டி பாபா (13)

ஷிர்டி பாபா (13)


ADDED : மார் 19, 2014 01:45 PM

Google News

ADDED : மார் 19, 2014 01:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீதிபதியின் தலை சுற்றிய காரணத்தைக் கேட்டால், நமக்கும் தலை சுற்றும். காரணம், ஓய்வெடுக்கப் போவதாகச் சொன்ன பாபா, தாவி ஏறி, ஒரு நூலில் படுத்துக் கொண்டு ஆனந்தமாக உறங்கலானார். ஒரு மனிதர் தரையில் படுக்கலாம். பாயில் படுக்கலாம். கட்டிலில் படுக்கலாம். ஆனால், ஒரு மெல்லிய நூலில் எப்படிப் படுக்க முடியும்? நீதிபதிக்குத் தன் கண்ணையே நம்ப முடியவில்லை.

ஆனால், நம்ப முடியாததை எல்லாம் நிகழ்த்திக் காட்டுவதுதானே பாபாவின் மகிமை!

ஒரு நூலில் படுக்குமளவு, தம்மை எப்படி கனமே இல்லாதவராக ஆக்கிக் கொண்டார்? நீதிபதிக்கு எதுவும் புரியவில்லை.

கண்களில் பக்திக் கண்ணீர் பெருக, நெடுநேரம் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி, பாபாவைக் கீழே விழுந்து வணங்கி மனத்தில் அவரை பூஜித்தவாறே இல்லம் திரும்பினார்.

பாரததேசம் சுதந்திரம் அடைவதற்கு முன், ஷிர்டியில் தரிசனம் தந்த பாபாவை, திலகர் உள்ளிட்ட சுதந்திரத் தியாகிகள் பலரும் சென்று சந்தித்திருக்கிறார்கள். நாட்டு மக்களிடம் சுதந்திர எழுச்சியை ஊட்டியவர்களில் மிக முக்கியமானவர் அல்லவா லோகமான்ய பால கங்காதர திலகர்! இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் விநாயகரை வழிபடுவதால், விநாயகர் வழிபாட்டின் மூலம் பாரத மக்களிடையே ஒற்றுமையை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்தார் அவர். நாடெங்கும் விநாயகர் சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வழிவகுத்து, ஊர்வலங்கள் நடத்தி, அதன்மூலம் பாரத மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியைத்

தூண்டினார். பகவத் கீதைக்கு உரை எழுதி அதன்மூலம் பெரும்புகழ் பெற்றார்.

பாபாவின் மகிமை குறித்து அறிந்த அவர், பாபாவை நேரில் சென்று சந்தித்தார். 1912 மார்ச் 12ல், அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மகாத்மா காந்தியும் பரமாச்சாரியாரும் (காஞ்சிப் பெரியவர்) சந்தித்த சந்திப்பைப் போல், பாபாவும், திலகரும் சந்தித்த சந்திப்பும்

முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தாதா சாஹப் கபார்டே என்ற வழக்கறிஞர், பாபாவின் அடியவராகவும் திலகரின் நண்பராகவும் இருந்தார்.

அவர்தான், திலகரை பாபாவிடம் அழைத்து வந்தார். பாபாவைப் பரவசத்தோடு தரிசித்த திலகர், அவரது கமலப்பூம் பாதங்களில் தலை வைத்து வணங்கினார். பாபாவை 'தத்தாத்ரேயரின் அவதாரம்' (சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சம் கொண்டவர் தத்தாத்ரேயர்) என்றே திலகர் நம்பினார்.

பாபா, திலகருக்கு அந்தரங்கமாகச் சில அறிவுரைகள் கூறினார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதில், பாபாவின் அருளாசியும் அறிவுரைகளும் கூடப் பின்னணியில் இருந்தன என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. திலகர் பாபாவைச் சந்தித்துச் சென்ற பின்னர், பாபா வசித்த பிரதேசமான அகமத் நகர் மாவட்டத்தின் ஆணையர், அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார். சுதந்திரப் போரில் பாபாவுக்கு என்ன பங்கு என்று கண்காணிக்க விரும்பினார். பாபாவின் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, ரகசிய அறிக்கைகளைத் தமக்கு அனுப்புமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். எல்லோரையும் கண்காணிக்கும் கடவுளையே, கண்காணிக்க முயன்ற அந்த அதிகாரியின் பேதைமையை என்னென்பது!

கட்டாயம் இந்தியா சுதந்திரம் அடையும் என்று பாபா ஆசி கூறியதாகவும், ஆனால் அகிம்சை முறையிலேயே அது நிகழும் என்று பாபா திட்டவட்டமாகத் திலகரிடம் அறிவித்ததாக கூறுகிறார்கள். எனினும், பாபா - திலகர் சந்திப்பு பற்றி ஓரளவு அறிய முடிகிறதேயன்றி, அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் கிட்டவில்லை. அப்போது நடந்தது பிரிட்டிஷ் அரசாங்கமாதலால், பாபாவும் திலகரும் பேசிய பேச்சின் விபரங்கள், மிக ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

ஷிர்டியில், காஷிராம் என்றொரு துணி வியாபாரி இருந்தார். பாபாவின் தீவிர பக்தர். உண்ணும் போதும், உறங்கும்போதும், துணி விற்கும்போதும் பாபாவை நினைத்தவாறே வாழ்ந்து வந்தார். பாபா மனித வடிவில் வந்துள்ள தெய்வம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தார்.

பாபாவை அடிக்கடித் தரிசிப்பதில் அவருக்குத் தீராத ஆர்வமுண்டு. பாபாவின் புனிதத் திருமுகத்தையும், அதில் பொங்கும் கருணையையும் திகட்டத் திகட்டப் பார்த்துக்கொண்டே இருப்பதில் அவருக்கு ஒரு தனி ஆனந்தம். நிவேதனப் பொருள் எதையேனும் ஆழ்ந்த பக்தியோடு எடுத்துக் கொண்டு பாபாவைப் பார்க்கச் செல்வது அவர் வழக்கம்.

அப்படித்தான் ஒருமுறை, ஒரு சிறு துணிப்பையில், பாபாவுக்காகக் கொஞ்சம் சர்க்கரை எடுத்துக் கொண்டு, பாபாவை தரிசிக்கப் புறப்பட்டார்.'பாபாவை நினைக்கும் போதெல்லாம், மனமே சர்க்கரையாய்த் தித்திக்கிறதே! இந்தச் சர்க்கரையை பாபா உண்ணும் அழகைக் கண்ணால் பருக வேண்டும்'... இவ்விதம் நினைத்தவராய், துணிக்கடையைப் பூட்டிவிட்டு, பாபா தங்கியிருந்த மசூதி நோக்கி, சர்க்கரைப் பையுடன் சாலையில் நடக்கலானார். பாபா நினைவே துணையாக அவர் நடந்தபோது, வழியில் தன்னைச் சிலர் ரகசியமாகப் பின்தொடர்வதை அவர் கவனிக்கவில்லை.

பின் தொடர்ந்தவர்கள் திருடர்கள்! துணி வியாபாரி, கையில் ஏதோ ஒரு சிறு பையை இறுகப் பற்றியவாறு நடப்பதைப் பார்த்த அவர்கள், அந்தப் பையில் அந்தப் பையில் அன்றைய துணி வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணமோ, வேறு விலை உயர்ந்த பொருளோ இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.

பாபா நினைத்தால் சர்க்கரையைக் கூடத் தங்கமாகவோ பணக் கற்றையாகவோ மாற்றக் கூடியவர்தான். ஆனால், அப்போது அந்தப் பையில் இருந்தது வெறும் சர்க்கரைதான். இதை அந்தத் திருடர்கள் அறியவில்லை.

'வெறும் சர்க்கரைப் பையையா, இப்படி ஒருவன் மார்போடு சேர்த்து இறுகக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பான்?

சந்தேகமில்லால் பையில் ஏதோ விலைமதிப்புள்ள பொருள் இருக்கிறது' என்று திருடர்கள் தவறாக முடிவு கட்டினார்கள்.

துணைக்கு யாருமில்லாத பகுதியில், துணி வியாபாரி நடந்தபோது அவர்கள் துணிவோடு வியாபாரியை வழிமறித்தார்கள். கத்தியைக் காட்டி காஷிராம் காதுகளில் இருந்த கடுக்கன்களைக் கழற்றித் தரச் சொன்னார்கள்.

பயந்துபோன, காஷிராம் உடனே கடுக்கன்களைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பின்னர், கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றித் தரச் சொன்னார்கள். கையில் கத்தியோடு வந்திருக்கிறார்களே? உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கிலியையும் கொடுத்து விட்டார்.

அதன்பின், அவர் இறுகப் பற்றியிருந்த அந்தச் சிறு பையைத் தருமாறு அதட்டினார்கள் அவர்கள். 'என்னது! இந்தப் பையை இவர்களிடம் கொடுப்பதா? பாபாவுக்கான சர்க்கரை அல்லவா இது? தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை யாராவது பன்றிகளுக்குப் போடுவார்களா? நகையும், கடுக்கனும் போனால் போகிறது. கடவுளுக்கான நிவேதனப் பொருள் பறி போகலாமா?' இப்படி எண்ணியது காஷிராமின் மனம்.

அடுத்த கணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.....

- அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us