sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா (16)

/

ஷிர்டி பாபா (16)

ஷிர்டி பாபா (16)

ஷிர்டி பாபா (16)


ADDED : ஏப் 09, 2014 02:29 PM

Google News

ADDED : ஏப் 09, 2014 02:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இதோ அந்த அற்புத பதில்!

''நான் எவ்விதம் அதை மறுக்க முடியும்? பண்டிட், என்னை அவரது குருவான காகாபுராணிக் என்றல்லவோ எண்ணுகிறார்? காகா புராணிக்கிற்கு, ரகுநாத மகராஜ் என்றொரு பெயருண்டு. இப்போது, பாபா என்று இன்னொரு பெயரும் இருப்பதாக பண்டிட் கருதுகிறார். என் வடிவில் தம் குருவையே அவர் காண்கிறார். அவரது குரு பக்தியை நாம் அங்கீகரிக்க வேண்டுமல்லவா? எல்லா குருவாகவும் இருப்பது நான்தானே? தம் குருநாதருக்குப் பூசுவது போலவே, என் நெற்றியிலும் சந்தனம் பூசினார். அவர் என் நெற்றியில் சந்தனம் பூசும்போது நான் பாபா அல்ல. காகாபுராணிக் தான்!''

இதைக் கேட்ட பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

பின்னர் பண்டிட்டிடம் அதுபற்றி விசாரித்தார்கள். பண்டிட் இருகரம் கூப்பி பாபா சொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டார். மனிதர்களின் மன ஆழத்தில் ஓடும் எண்ண ஓட்டங்களை உள்ளது உள்ளவாறே கண்டறிவதில் பாபாவுக்கிருந்த அபாரமான

ஆற்றலை எண்ணி எல்லோரும் அதிசயித்தார்கள்.

அதேநேரம், 'இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைŒக்தியாக உள்ளிருந்து எல்லோர் எண்ணங்களையும் கண்காணித்துக் கொண்டிருப்பவர் பாபாதானே!' என்ற உண்மையையும் சிலர் வெளிப்படுத்தினார்கள்.

பொதுவாகவே உயர்நிலை மகான்கள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள். ஐம்புலன்களை அடக்கி ஆள்வதில் பூரணமான வல்லமை பெற்றதனால், ஐம்பூதங்களை அடக்கி ஆளவும் வல்லமை பெற்றுவிடுகிறார்கள் போலும்.

''உரன் என்னும் தோட்டியால் ஓரைந்தும் காப்பான்'' என, ஐம்புலன்கள் என்கிற யானையை மன உறுதி என்ற அங்குசத்தால்

அடக்குபவனே மெய்ஞானி என்றல்லவோ வள்ளுவம் சொல்கிறது!

ஐம்பூதங்களை அடக்கும் அந்த அபாரமான ஆற்றலை மனித குல நன்மையின் பொருட்டாக அத்தியாவசியத் தேவை நேர்ந்தால் மட்டுமே மகான்கள் பயன்படுத்துவார்கள்.

ஸ்ரீஅரவிந்த அன்னை, தான் பயணம் செய்த கப்பலைப் புயல் தாக்கியபோது, உடலை விட்டுத் தனது உயிரைப் பிரித்து வானில் சென்று , புயலைத் தோற்றுவித்த தீய சக்திகளை அதட்டினார். அவ்விதம் புயலை நிறுத்தி, தன்னுடன் கப்பலில் பயணம் செய்த அத்தனை மக்களையும் காப்பாற்றினார். பாபாவின் வாழ்விலும் அவர் ஐம்பூதங்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைக் குறிக்கும் சம்பவங்கள் பல உண்டு.

ஒருநாள் மாலை நேரம். இருள் கவியத் தொடங்கியிருந்தது. திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் ஷிர்டியைத் தாக்கலாயின. அரைமணி நேரத்தில் தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தது.

தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் கடகடவெனப் புகுந்தது. வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள் பிய்த்துக் கொண்டு காற்றில் பறந்தன. மக்கள் பரிதவிப்போடு இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.

இப்போது என்ன செய்வது? இந்தப் புயலிலிருந்தும் மழையிலிருந்தும் எப்படித் தப்பிப்பது? அப்போதுதான் அந்த விந்தையான காட்சியை மக்கள் பார்த்தார்கள்.

ஆறறிவுடைய மனிதர்களுக்கு இல்லாத புத்தி, ஐந்தறிவுடைய மிருகங்களுக்கு இருக்கும்போல் தோன்றுகிறதே! ஆடுமாடுகள் கூட்டம் கூட்டமாக பாபாவின் மசூதிக்கு ஓடோடிச் செல்வதை அவர்கள் கவனித்தார்கள். கொட்டும் மழையில் கோவர்த்தனகிரியைத் தூக்கி நின்று கோகுலத்து ஆனிரைகளைக் காப்பாற்றிய கண்ணனின் அவதாரம்தான் பாபா என்பது ஆடுமாடுகளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்றன.

அந்த அற்புதக் காட்சியைப் பார்த்த எல்லா மக்களும், ஆனிரைகளைப் பின்பற்றித் தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும் ''பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்!'' என்று உரத்துக் குரல்கொடுத்தவாறே, அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள்.

மனித குலத்தை ரட்சிப்பதற்கென்றே வந்த அவதாரமல்லவா பாபா? மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் அவர். பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்தார். ஆகாயத்தை உற்றுப் பார்த்தார். இடியும் மின்னலும் பேய்க்காற்றும் ஷிர்டியையே உலுக்கிக் கொண்டிருந்தன.

அவரது விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்தன. பரமசிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்ததுபோல் இருந்தது அவரைப் பார்க்க! வானை நோக்கி உறுமினார் அவர்.

''நிறுத்து! போதும் உன் சீற்றம்! எங்கு வந்து யாரிடம் ஆட்டம் போடுகிறாய்? உன் வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன் தெரிகிறதா? இந்த நரித்தனமான வேலைகளெல்லாம் இங்கு வேண்டாம். ஆடுமாடுகள், தாவரங்கள் உள்பட இங்கிருப்பவர்கள் எல்லோரும், என் பாதுகாப்பில் உள்ளது உனக்குத் தெரியாதா? ஜாக்கிரதை. உடனே கடையைக் கட்டு. ஓடு இந்த இடத்தை விட்டு! ஒருகணம் கூட நிற்காதே''.

பாபாவின் முழக்கத்தைக் கேட்ட மக்கள் அச்சத்தோடு வியந்து, வாய்பொத்தி நின்றார்கள். அது வெறும் முழக்கமல்ல. இடி முழக்கம். ஏன், இடியின் ஓசையையும் அடக்கி அதற்கும் மேலான ஒலியில் முழங்கிய முழக்கம்.

அடுத்த கணம் ஆகாயத்தில் இருந்த மோட்டார் ”விட்சை யாரோ அணைத்த மாதிரி சடக்கென்று மழை நின்றது. தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பதுபோல், புயல் குளிர்ந்த தென்றலாய் மாறி பாபாவின் பாதங்களைப் பணிவோடு வருடியது. மக்கள் பரவசத்தோடு பாபாவைக் கும்பிட்டார்கள். பின் மெல்லமெல்லக் கலைந்து வீடுகளுக்குச் சென்றார்கள்.

ஆடுமாடுகளைத் தடவிக் கொடுத்தார் பாபா. ஆனிரைகள் பாபாவைப் பிரிந்துசெல்ல மனமே இல்லாமல் தயங்கித் தயங்கி நடந்துசென்றன. தன்னை நாடிவந்த மக்களும், ஆடு மாடுகளும் இல்லம் திரும்புவதைக் கருணையோடு பார்த்தவாறே மசூதி வாயிலில் நின்று கொண்டிருந்தார் பாபா. வானத்தில் அப்போதுதான் தோன்றிய முழு நிலவு பயபக்தியோடு இந்த விந்தையான காட்சியை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

மழையை மட்டுமல்ல, நெருப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாபா. ஒருநாள்...மசூதியில் மக்கள் கூடியிருந்த நேரம்....

மசூதியில் எப்போதும் 'துனி' என்ற நெருப்பு எரிந்து கொண்டிருக்குமே! திடீரென அந்த நெருப்பு ஓங்கி எரியலாயிற்று. சடசடவெனப் பற்றிய நெருப்பு, மசூதியின் மேற்பகுதியைத் தொட்டுவிட்டது. இந்த நெருப்பு இப்போது எல்லா இடங்களிலும் பரவும்போல் தோன்றுகிறதே! மக்கள் பதைபதைத்தார்கள்.

பாபா, தம் கையில் தாம் எப்போதும் பயன்படுத்தும் 'சட்கா' என்ற கம்பை எடுத்துக்கொண்டார். நெருப்பை நோக்கிச் செல்லாமல் அருகே இருந்த தூணை நோக்கிச் சென்றார்! என்ன செய்யப் போகிறார் பாபா?....

- அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us