sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா! (17)

/

ஷிர்டி பாபா! (17)

ஷிர்டி பாபா! (17)

ஷிர்டி பாபா! (17)


ADDED : ஏப் 21, 2014 02:51 PM

Google News

ADDED : ஏப் 21, 2014 02:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூணின் மீது கம்பால் ஓங்கி அடித்தார் பாபா. ''ம்! நெருப்பே! இறங்கு கீழே! எதற்கிந்த ஆவேசம்? நான் கட்டளையிடுகிறேன்.

உடனடியாய்க் கீழே இறங்கிவிடு!'' என்று உரக்க முழங்கினார்.

தூணில் அவர் அடித்த ஒவ்வோர் அடிக்கும் துனியில் எரிந்த அக்கினி ஜ்வாலை, கட்டுப்பட்டுப் படிப்படியாய்க் கீழே இறங்கியது. பின் எந்த ஆவேசமும் இல்லாமல், சாதாரணமாய் எரியத் தொடங்கியது. அது தன் நெருப்பு விரல்களால், பாபாவைக் கைகூப்பி வணங்கியதுபோல் தோன்றியது!

அடியவர்கள் பிரமித்தார்கள். பஞ்ச பூதங்களையும் பாபா தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றுஉணர்ந்து பணிவோடு அவரை வணங்கினார்கள். தங்களைப் படைத்தவருக்குத்தான் பஞ்ச பூதங்கள் கட்டுப்படுகின்றன என்று புரிந்து கொண்டார்கள்.

அன்னை சீதாப்பிராட்டியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, அனுமன் வாலில் அக்கினி தேவன் தன் இயல்பு மாறிக் குளிர்ச்சியாக இருந்தானே!

சீதை அக்கினிப் பிரவேசம் செய்தபோது, கற்பின் கனலியான அன்னையைச் சுடாமல், அக்கினி தேவன் பவித்திரமாக ஸ்ரீராமபிரானிடம் ஒப்படைத்தானே! கடவுளுக்கு நெருப்பு கட்டுப்படும் என்பது ராமாயண காலம் தொட்டு நாம் அறிந்தது தானே! தன்னைப் படைத்த இறைவனுக்கு நெருப்பு கட்டுப்படுவது இயல்புதானே!

''பரித்ராணாய ஸாதூனாம் விநாசாயச துஷ்க்ருதாம்!'' என்கிறான் கீதையில்

கண்ணன். நல்லோரைக் காத்து அல்லோரை அழிப்பதே அவதாரங்களின் நோக்கம். பாபா தீயவர்களை அழிக்கவும் செய்தார். தீயவர்களை நல்லவர்களாக்கி அவர்களைக் காக்கவும் செய்தார்.

தம்மை அன்று சரணடைந்தவர்களையும், இன்று சரணடைபவர்களையும் அவர் கைவிடாமல் காப்பாற்றுகிறார். வாழ்வில் கை தூக்கி விடுகிறார். இது பாபா பக்தர்கள் அனுபவத்தில் அறியும் உண்மை. ஒருதுளி சந்தேகமும் அற்ற முழுமையான சரணா

கதிக்கு, இறையருள் கட்டாயம் செவிசாய்க்கிறது என்பதே ஆன்மிக வாழ்வின் அடிப்படை விதி.

பாபா ஒருபோதும் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரர் என்ற பேதம் அவர் சந்நிதியில் என்றுமில்லை. ஜாதி மத பேதங்களை அவர் பொருட்படுத்துவது இல்லை. அவரைப் பூரணமாகச் சரணடைந்தவர்களே அவர் அருட்செல்வத்தை அதிகம் அடையும் தகுதியுள்ளவர்கள். வாரி வாரி இறையருளைவழங்குவதில் பாபாவுக்கு இணையான வள்ளல் யாருமில்லை.

பாபா மனிதர்களையோ விலங்குகளையோ

தாவரங்களையோ பிரித்துப் பார்ப்பதுமில்லை. எல்லாமே அவர் படைத்தவை என்பதால் எல்லாவற்றிற்கும் அவர் அருள் உண்டு. அவர் அருளால் தானே உலகமே இயங்குகிறது!

பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமானின் பல்வேறு லீலைகளைத் திருவிளையாடல் என்கிறோம். கண்ணனின் ராசலீலை உள்ளிட்ட லீலைகளைக் கிருஷ்ண லீலை எனப் புகழ்கிறோம்.

அதுபோலவே சாயி லீலைகளும் அனந்தம். அவர் அடியவர்கள் வாழ்வில் எண்ணற்ற லீலைகளைத் தொடர்ந்து புரிந்து வருகிறார். நுணுக்கமாகத் தங்கள் வாழ்வை ஆராயும் சாயி பக்தர்கள், பாபா தங்கள் வாழ்வில் நிகழ்த்திய லீலைகளைப் புரிந்துகொண்டு தொடர்ந்து அவர்மேல் பக்தி செலுத்துகிறார்கள்.

கடும் நோய்வாய்ப் பட்டவர்களின் உடல் சார்ந்த துயரங்கள், பாபா மேல் கொண்ட நம்பிக்கை என்ற மருந்தினால் உடனடியாக விலகுகின்றன. பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் ஓடமாக பாபாவின் தாமரைத் திருவடிகளே பயன்படுகின்றன. பற்றற்ற

பாபாவின் பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டவர்களைப் பற்றி, பாபாவே அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவர்களை

ரட்சிப்பது பாபாவின் பொறுப்பாகிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் தம் அடியவர்களிடம் சொல்வாரே! ''என்னிடம் வக்காலத்து கொடுத்துவிடு (கோரிக்கையை சொல்லி விடு)!'' என்று! அதுபோல் பாபாவிடம் வக்காலத்து கொடுத்து, நம் வாழ்வை அவரிடம் ஒப்படைத்துவிட்டால், நமது ஒளிமயமான எதிர்காலத்திற்கு பாபா உத்தரவாதம் தருகிறார்.

ஆனால், எல்லாருக்கும் பாபாவைச் சரணடையும் பாக்கியம் கிட்டுமா என்ன? அதற்கும், பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்று சான்றோர்கள் சும்மாவா சொன்னார்கள்! பாபா மேல்

நாட்டம் கொள்ளவும், அவர் அருள் இருந்தால் தான் முடியும்.

ஷிர்டிக்குச் செல்லவேண்டும் என நினைத்தாலும், பாபா அருளிருந்தால் தான் செல்ல முடியும். அங்கே எத்தனை நாள் நாம் தங்க வேண்டும் என பாபா நினைக்கிறாரோ, அத்தனை நாள் மட்டுமே தங்க முடியும். பாபா ஸ்தூல வடிவோடு இருந்த அந்தக் காலத்திலும் அப்படித்தான். அருள்வடிவோடு இயங்கும் இந்தக் காலத்திலும் அப்படித்தான்.

காகா மகாஜனி என்பவர், பாபாவின் தீவிர அன்பர். மும்பையில் வசித்து வந்தார். அப்போது கிருஷ்ண ஜெயந்தி விழா வந்தது. கண்ணனின் அவதார தினத்தை ஒட்டி ஷிர்டியில் கொண்டாட்டங்கள் நடைபெறும். பாபா பிரத்யட்Œ கண்ணன் அல்லவா! கண்ணனை நேரில் தரிசித்த பலனை அடைய வேண்டுமானால், பாபாவை தரிசனம் செய்தால் போதும்.

'ஷிர்டி செல்வோம். ஒருவாரம் தங்கி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அனுபவிப்போம்'...இப்படி முடிவுசெய்த அவர், தம் முதலாளியிடம் ஒருவாரம் விடுப்பு சொல்லிவிட்டு, அலுவலகத்தில், இருந்த இன்னொருவரிடம் தாம் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளை ஒப்படைத்துவிட்டு புறப்பட்டார்.

அவர் ஷிர்டி செல்லலாம், ஆனால் பாபா எத்தனை நாள் விரும்புகிறாரோ அத்தனை நாள் தானே அங்கு தங்க முடியும்?

ஷிர்டியில் ஒருவாரம் தங்க வேண்டும் என்று அவராக எப்படி முடிவு செய்யலாம்? அப்படி முடிவு செய்தால் அந்த ஆணவத்தின் மீது பாபாவின் குட்டு விழும் அல்லவா?

பாபாவை அவர் தரிசித்த மறுகணமே, பாபா அவரிடம், ''அதுசரி. நீ எப்போது மும்பை திரும்பப் போகிறாய்?'' என்று விசாரித்தார்! என்ன இது! ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களைக் காண வந்தால், வந்து தரிசித்த மறுகணமே இப்படிக் கேட்கிறாரே பாபா? காகா மகாஜனியின் உள்ளம் துணுக்குற்றது.

ஆனால், அவர் மறுத்து எதுவும் பேசவில்லை. பணிவோடு, தாம் ஒருவாரம் ஷிர்டியில் தங்கும் உத்தேசத்தில் வந்ததாகவும், ஆனால் பாபா எத்தனை நாள் தங்க உத்தரவு கொடுக்கிறாரோ அத்தனை நாள் மட்டுமே தங்க முடிவுசெய்திருப்பதாகவும் கூறினார்.

அவர் பதிலால் பாபாவின் மனம் நிறைவடைந்தது. பாபாவின் கண்கள் அவரையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒருவரின் கண்களின் மூலமாக அவர் உள்ளத்தையும் அவரது எதிர்காலத்தையும் படித்து விடுவாரே பாபா? திடீரென பாபா

உத்தரவிட்டார்:

''நீ ஒரே ஒருநாள் இங்கு தங்கினால் போதும். நாளையே புறப்பட்டு பம்பாய் போ. நாளையே மறக்காமல் அலுவலகத்திற்கும் போய்விடு!'' ஏன் இந்த உத்தரவு என்றறியாமல் வியப்பும் வருத்தமும் அடைந்தார் காகா மகாஜனி. ஆனால். மறுபேச்சுப் பேசாமல் அவரது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார். மறுநாளே மும்பை சென்றார். அன்றே அலுவலகத்திற்கும் சென்றார். அங்கே....

- அருள்மழை கொட்டும்

திருப்பூர் கிருஷ்ணன்






      Dinamalar
      Follow us