sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஷிர்டி பாபா (26)

/

ஷிர்டி பாபா (26)

ஷிர்டி பாபா (26)

ஷிர்டி பாபா (26)


ADDED : ஜூலை 02, 2014 04:13 PM

Google News

ADDED : ஜூலை 02, 2014 04:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்த செல்வந்தர் பாபாவிடம், தமக்கு பிரம்மஞானம் அளிக்க வேண்டுமென மன்றாடினார். தாம் வெளியூரிலிருந்து வந்திருப்பதால் தமக்கு முன்னுரிமை கொடுத்து, உடனடியாக பிரம்ம ஞானத்தை அருளவேண்டும் என்று இடைவிடாமல் வற்புறுத்தினார்.

பாபாவுக்கு உள்ளூற நகைப்பு.

பிரம்மஞானம் என்ன கடைச்சரக்கா? பணப்பித்துப் பிடித்த இவர் எவ்விதம் பிரம்மஞானத்தை அடைய இயலும்?

பாபா அவர் முன்னிலையில் ஒரு நாடகம் நடத்தினார்!

ஒரு சிறுவனைக் கூப்பிட்டு, நந்து மார்வாடி என்பவரிடம் சென்று ஐந்து ரூபாய் கைமாற்று வாங்கிவரச் சொன்னார். சிறுவன் ஓடிப்போய்த் திரும்பி வந்து அவர் வீடு பூட்டியிருப்பதாகச் சொன்னான். ''அப்படியானால், மளிகைக்கடைக்காரர் பாலாவிடம் ஐந்து ரூபாய் வாங்கிவா,'' என்றார். என்ன சங்கடம்! பாலா வீடும் பூட்டியிருந்தது. இப்படி எந்த வீடெல்லாம் பூட்டியிருக்கும் என்று தெரிந்த மாதிரி ஒவ்வொரு வீடாகச் சிறுவனை அனுப்பினார். அவன் வீடு பூட்டியிருக்கும் தகவலைச் சொல்லும் போதெல்லாம் பிரம்மஞானம் கேட்ட செல்வந்தரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் பாபா. அவரிடம் அசைவே இல்லை. தனக்கு பிரம்மஞானத்தை போதிக்குமாறு மீண்டும் கேட்கத் தொடங்கினார் அவர்!

பாபா திடீரென்று அவரைப் பார்த்துச் சீறினார்.

''உன் பையில் பத்து ரூபாய் நோட்டுகளாக இருபத்தைந்து நோட்டுகள் இருக்கின்றன அல்லவா? அதுவே உனது பிரம்மம். அதைக் கட்டிக்கொண்டு அழு. நான் ஐந்து ரூபாய் கைமாற்றாக வேண்டும் என்று பலரைக் கேட்டு வருகிறேன். உன் பையிலுள்ள 250 ரூபாயிலிருந்து ஓர் ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுக்க உனக்குத் தோன்றவில்லை. ஆனால், பிரம்மஞானம் வேண்டும் உனக்கு! எவன் என்ன விரும்பினாலும், அவனுக்கு அதை என்னால் அளிக்க முடியும்! ஆனால், வாங்கிக் கொள்கிறவனுக்குப் பெறுகிற தகுதி இருக்கிறதா என்று நான் கவனிக்கவேண்டும். உனக்குப் பணமே பிரம்மம்!''

பாபாவின் சீற்றத்தைப் பார்த்த செல்வந்தர் திகைத்துப் போனார். தன்னிடம் இருநூற்றைம்பது ரூபாய் இருப்பதை அவர் மிகச் சரியாகக் கண்டறிந்து சொன்னது அவரைத் திகைப்பில் ஆழ்த்தியது. வெட்கத்துடன் விடைபெற்றார் அவர்....

இப்படி இன்னும் பாபா வாழ்வில் எத்தனை எத்தனையோ லீலைகள். அவர் நிகழ்த்திய லீலைகளுக்கு முடிவேது? அவர் பொன்னுடல் உகுத்துப் புகழுடல் பெற்ற பின்னரும், இப்போதும் பலரது வாழ்வில் தொடர்கின்றனவே அவரது லீலைகள்!

எல்லா அவதாரமும் ஒருநாள் பூர்த்தியாகத் தானே வேண்டும்? சரயூ நதியில் கலந்த ராமன், வேடனால் அடிபட்டு விண்ணுலகு சென்ற கண்ணன் என ஒவ்வொரு மனித அவதாரமும் உடலை உகுப்பதென்பது

நிகழவேண்டியது தானே!

மண்ணுக்கு மனித வடிவெடுத்து வந்த இறைசக்தி மீண்டும் விண்ணுக்குச் செல்கிறதா, அல்லது இந்தப் புவியெல்லாம் நிறைகிறதா? உடலை உதறிய அருள்சக்தி மண்ணில் மனிதர்கள் மேல் கருணை கொண்டு நிலையாக வாழ்கிறது என்பதே உண்மை. அதனால் அல்லவோ பாபாவின் அருளால் இப்போதும் அடியவர்கள் பயனடைகிறார்கள்?

பாபா அடியவர்களுக்கு சூட்சும உருவில் அருள்செய்ய நிச்சயித்து விட்டார். எனவே ஸ்தூல உடலை உதற முடிவெடுத்துவிட்டார்.

1918, செப்டம்பர் 28 ... பாபாவுக்கு லேசான காய்ச்சல் கண்டது. அவர் உணவு உண்பதை நிறுத்திக் கொண்டார்.

அக்டோபர் 16 அன்று, பண்டரிபுரத்தில் வசித்த பக்தர் தாஸ்கணுவின் கனவில் தோன்றினார் பாபா. ''நான் உடலை உகுக்கப்போகிறேன். உடனே வந்து என்னைக் கதம்ப மலர்களால் போர்த்து!'' என்று ஆணையிட்டார். தாஸ்கணு ஷிர்டிக்கு அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்துசேர்ந்தார்.

பிறகு, தன் அன்பரான வஸே என்பவரை அழைத்து ராமாயணத்தில் 'ராமவிஜயம்' என்ற பகுதியைப் படிக்கச் செய்தார். மீண்டும் மீண்டும் பலநாட்கள் பலமுறை அப்பகுதியைப் படித்தார் வஸே. படித்ததனால் அவர் களைப்படைந்து விட்டார். படித்தது போதும் என்று சைகை செய்த பாபா அமைதியாகத் தமக்குள் மூழ்கிவிட்டார்.

1918, அக்டோபர் 18, விஜயதசமி. மிகமிகப் புனிதமான நாள். பாபா உடல் என்ற தன் எல்லைக்கோட்டைத் தாண்டிச் சென்று எங்கும் நிறைவதற்குத் தேர்ந்தெடுத்த நன்னாள். கொஞ்சம் உடல் உபாதை உள்ளதுபோல் அவர் காட்டிக் கொண்டாலும் மிகுந்த உள்ளுணர்வுடன் அவர் இயங்கினார். கடைசித் தருணத்திற்குச் சற்று முன்னர் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து காட்சி தந்தார்.

சில நாட்கள் முன்னால்தான், அவரது பக்தையான லட்சுமிபாயி ஷிண்டேயிடம், ''எனக்குப் பசிக்கிறது,'' என்றார்.

லட்சுமிபாயியும், ''இதோ ரொட்டியுடன் வருகிறேன்,'' என்று ஓடோடிச் சென்று ரொட்டியையும், காய்கறிகளையும் அவர் முன் வைத்தாள். அவர் அவற்றை அப்படியே எடுத்து நாய்க்குக் கொடுத்தார்! லட்சுமிபாய் கண்ணீர் வடித்தாள்.

''பாபா! உங்களுக்குப் பசிக்கிறது என்றீர்கள். அதனால் அல்லவோ அவசர அவசரமாக என் கையால் பக்தியோடு ரொட்டி தயார்செய்து கொண்டு வந்தேன்? இதை நாயிடம் எறிகிறீர்களே?''

அவள் கேட்ட கேள்வியை பாபா கனிவோடு எதிர்கொண்டார்.

''ஏன் கவலைப்படுகிறாய்? நாய் வேறு.. நான் வேறா? நாய்க்குள் இருப்பதும் நான் தானே? அதற்கும் பசிக்கும் அல்லவா? பசி என்று வந்த எந்த ஜீவனது பசியை நீக்கினாலும், அந்த உணவு என்னையே வந்தடைகிறது என்பதை அறிந்துகொள்!'' பாபாவின் அருளுரையைக் கேட்ட லட்சுமிபாய், அவரை விழுந்து வணங்கினாள். எங்கும் நிறை பரப்பிரும்மமே மனித வடிவெடுத்திருக்கிறது என்பதை அவள் முழுமையாகப் புரிந்து கொண்டாள்.

அன்றுமுதல் எல்லா உயிர்களிலும் பாபாவைப் பார்க்கப் பழகினாள் அவள்.

பாபா தனக்கு லட்சுமிபாயி செய்த சேவைகளை நினைவு கூர்ந்தார். அவளை அவர் எப்படி மறக்க முடியும்? தமது பையில் கையைவிட்டு ஒருமுறை ஐந்து ரூபாயும், மறுபடி நான்கு ரூபாயும் ஆக மொத்தம் ஒன்பது ரூபாய் கொடுத்தார். லட்சுமிபாயி வசதியான பெண்மணி. பாபா கொடுத்த ஒன்பது ரூபாய்க்குப் பின், ஒன்பது நல்ல குணங்களைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாபா அறிவுறுத்துவதாக அவள் உணர்ந்தாள். கண்ணீர் வழிய வழிய அந்த அருட் பிரசாதத்தை அவள் பெற்றுக்கொண்டாள்.

தம் கடைசி வினாடி வரை பாபா உணர்வுடன் இருந்தார். பக்தர்கள் யாரும் கலங்கக் கூடாது என்று அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.

அவர் தரையில் விழவில்லை. படுக்கையிலும் படுத்திருக்கவில்லை. இருக்கையில் அமர்ந்துகொண்டே, தமது சொந்தக் கைகளால் தர்மம் செய்துகொண்டே உடலை நீத்தார். உலகெங்கும் நிறைந்த அவரது புகழுடலின் அருளாட்சி அன்றுதொட்டு எங்கும் நிலவத் தொடங்கியது.

''நீங்கள் என்னைத் தேடித் தொலைதூரம் போகவேண்டாம். உங்களுக்குள்ளும் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் இருப்பவன் நானே. உங்களுக்குள்ளும் எல்லா உயிர்களுக்குள்ளும் என்னைக் காண்பீர்களாக. என்னிடம் வருபவர் ஆறு கடலுடன் ஒன்றாகக் கலப்பதுபோல் என்னுடன் கலந்துவிடுகிறார் என்பதை அறிவீர்களாக!'' என்கிறார் ஷிர்டிபாபா

-நிறைந்தது






      Dinamalar
      Follow us