
பிறப்பின் ரகசியம்
தனு என்ற அரக்கனின் பிள்ளைகளான இருவரும் சகோதர பாசத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கினர். கரம்பன் மீது எதிரிகள் கை வைத்தால் அவர்களை ரம்பன் துவம்சம் செய்து விடுவான். இதே போல் தான் கரம்பனும் தன் தம்பி மீது பிறர் தாக்குதல் நடத்தினால் அவர்களை அழித்து விட்டே மறுவேலை பார்ப்பான். இதனால் இருவரையும் கண்டு மன்னர்களெல்லாம் நடுங்கினர்.
கரம்பனுக்கும், ரம்பனுக்கும் திருமணமானது. கரம்பனின் மனைவி கருவுற்றாள். பிரசவவலி ஏற்படவே தாதி வரவழைக்கப்பட்டாள். குழந்தையின் தலை வெளியேறும் சமயத்தில் தாதி அதிர்ச்சியடைந்தாள்.
“கரம்ப மகாராஜா...!” என ஓலமிட்டாள். அவளது சத்தம் கேட்டு கரம்பன் ஓடிவந்தான்.
“என்னாயிற்று! எனது பட்ட மகிஷி நலமாக இருக்கிறாளா. குழந்தைக்கு ஏதேனும் ஆபத்தா” என பதைபதைப்புடன் கேள்விகளை அடுக்கினான்.
“ராஜா... மகாராணிக்கு ஏதுமில்லை. நலமாக இருக்கிறார்கள். ஆனால், இந்தப் பெண் குழந்தையின் முகத்தை பாருங்கள். கொடூரமாக இருக்கிறது. எருமையின் முகம் போல் எனக்கு தெரிகிறது. எருமை முக குழந்தை பிறப்பது நாட்டுக்கும், உங்களுக்கும் நல்லதல்ல. இதை அழித்து விட்டால் என்ன” தாதியின் யோசனையை கரம்பன் ஏற்பதா வேண்டாமா என சிந்தித்தான்.
மகாராணியோ அழுதாள்.
“அரசே! இந்த தாதி சொல்வதை ஏற்காதீர்கள். தங்கள் வீரத்தின் முன் எவர் நிற்க இயலும். குழந்தை அழகாய் இருந்தாலும், அருவருப்பை தருவதாக இருந்தாலும், ஒரு தாயின் பாசத்திற்குரியதே! தந்தையும் அந்தப் பிள்ளையை வெறுக்கமாட்டார். பெற்ற பிள்ளையை எப்படி கொல்ல முடியும். அது மட்டுமல்ல! இவளது பிறப்பின் ரகசியத்தையும் கேளுங்கள்” என்றாள்.
“ரகசியமா. அது என்ன” என ஆவலுடன் கேட்டான் கரம்பன்.
“அன்பரே! சில காலத்துக்கு முன் ஒரு துறவி பிச்சைக்காக நம் அரண்மனைக்கு வந்தார். நமக்கு பிறக்கப்போகும் குழந்தை முற்பிறப்பில் முப்பெருந்தேவியர் அருளால் பிறந்து தத்தன் என்பவனுக்கு வாழ்க்கைப்பட்டதையும், அவர்களுக்குள் ஏற்பட்ட சர்ச்சையில் இவள் எருமையாகப் பிறந்து விட்டதையும் சொன்னார். சாபவிமோசனம் பெறவே இவள் நமது வயிற்றில் பிறந்திருக்கிறாள். தெய்வத்திருமகளான இவளுக்கு என் தெய்வமான உங்களது பெயரையே சூட்டுவோம். இவளது பெயர் கரம்பிகா. வீரத்திருமகளான இவளது இப்பிறப்பு நமக்கு பெருமையையே தரும். நீங்கள் கவலை கொள்ளாதீர்கள்” என்றாள்.
இது கேட்டு ஆச்சரியமடைந்த கரம்பன் தன் அன்பு மகள் மீது பாசத்தை செலுத்தி வளர்த்து வந்தான். ஆனாலும் அவன் மனதில் ஒரு குறை. லீலாவதிக்குப் பின் கரம்பனுக்கு குழந்தை பிறக்கவில்லை. தம்பி ரம்பனுக்கும் குழந்தை இல்லை. 'தனக்குப்பின் நாட்டைக் கவனிக்க ஒரு ஆண்பிள்ளை வேண்டுமே' என்ற கவலை வாட்டியது.
உடனே கரம்பனும், ரம்பனும் தங்கள் துணைவியரிடம் விடை பெற்று தங்களுக்கு ஆண்குழந்தை வேண்டுமென கோரி, சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்தனர். கரம்பன் ஒரு ஆற்றில் இறங்கி இரவும் பகலும் தவம் செய்தான். ரம்பன் அக்னி மூட்டி அதன் நடுவில் நின்று கொடும் தவம் செய்தான்.
இவர்களின் தவம் பற்றிய செய்தி தேவர்களின் தலைவன் இந்திரனை எட்டியது.
'ஆஹா... இவர்களின் தவம் பலித்தால் சக்தி மிக்க புதல்வர்கள் பிறப்பார்கள். அவர்கள் இந்திரலோகத்தைக் கைப்பற்றி விட்டால் நமது தேவேந்திர பதவி பறிபோய் விடும்' என எண்ணினான். ஒரு முதலையின் வடிவம் எடுத்து கரம்பன் தவம் செய்த ஆற்றுக்கு சென்றான். கரம்பனை அப்படியே விழுங்கி விட்டான்.
ஆனால், அக்னியின் மத்தியில் நின்ற ரம்பன் அருகே அவனால் நெருங்கக்கூட முடியவில்லை. அவன் தேவலோகம் திரும்பி விட்டான். அவனது கடும் தவம் கண்டு வியந்த அக்னி பகவான் அவன் முன் தோன்றினார்.
“ரம்பா! அக்னியான நான் தான் மற்றவர்களை சுடுவேன். நீயோ உன் கொடும் தவத்தால் என்னையே சுட்டு விட்டாய். நீ வேண்டும் வரம் கேள்” என்றார்.
“பகவானே! எனக்கு ஒரு ஆண் பிள்ளை வேண்டும். அந்தப் பிள்ளையை முப்பெரும் தெய்வங்கள் கூட வெல்ல முடியாது” என்ற வரத்தை தரவேண்டும்” என்றான்.
அக்னியும் அவ்வாறே வரமளித்தான்.
தான் தவசக்தி மிக்கவன், வானாளவிய அதிகாரம் படைத்தவன் என்ற தைரியத்தில் ரம்பன் கொடுங்கோல் ஆட்சி செய்தான். யாரும் அவன் அருகே நெருங்கக்கூட முடியவில்லை. அரக்க அழகிகள் அவனுக்கு இரையாயினர். ஒருசமயம் அவன் காட்டுக்கு சென்றான். அங்கே பெண்கள் யாரும் சிக்கவில்லை. ஆசையோ அத்துமீறியது. அப்போது அங்கே ஒரு பெண் எருமை
வந்தது. அதைப் பிடித்துக் கொண்டு பாதாளத்துக்குள் புகுந்தான். அதனிடம் சுகம் கண்டான். அதன்பின் அது அவனை விட்டு பிரிய மறுத்து அவன் பின்னாலேயே வந்தது. அந்த எருமை கர்ப்பமானது. ஒருசமயம் ஒரு ஆண் எருமை, அந்த பெண் எருமையிடம் சுகம் காண நெருங்கியது. ரம்பனுக்கு கடும் கோபம். அந்த ஆண் எருமையைத் தாக்கினான். ஆனால் பலமிக்க அந்த எருமை ரம்பனைத் தன் கொம்புகளால் குத்திக்கிழித்தது. ரம்பன் இறந்தான். அவனை சிதையில் வைத்தனர்.
சிதை பெரிதா, சிந்தை பெரிதா என்றால் சிந்தை தான் பெரியது. சிதை ஒரே முறையில் ஒருவனை எரித்து விடும். ஆனால் சிந்தை அவனை தினமும் எரிக்கும். நமக்கு பிரியமான ஒருவர் நம்மை விட்டு பிரிந்து விட்டால் அதைச் சிந்தித்து சிந்தித்து காலம் முழுவதும் மனம் எரியும்.
இதே நிலை தான் பெண் எருமைக்கும். ரம்பனுடன் கூடிக்களித்து வாழ்ந்த அந்த நாட்களை அதனால் மறக்க முடியவில்லை. கர்ப்பமாக இருந்த அது ஒரு குழந்தையைப் பெற்றது. அசுரனின் தொடர்பால் ஏற்பட்ட கரு என்பதால் எருமை முகமும், அசுர உடலும் கொண்டு அது பிறந்தது. பிறகு ரம்பனை எரித்துக் கொண்டிருந்த சிதையில் பாய்ந்து தன் உயிரை விட்டது. ரம்பனின் மனைவியும் கணவனின் பிரிவைத் தாளாமல் உயிர் விட்டாள்.
எருமையின் வடமொழிப் பெயர் மகிஷம். அதனால் குழந்தைக்கு 'மகிஷாசுரன்' என பெயர் சூட்டினர். தன் தந்தையைப் போலவே, மகிஷாசுரனும் கொடுங்கோலனாகவே இருந்தான். அது மட்டுமல்ல! பூலோகம், தேவலோகம், பாதாளம் என மூவுலகையும் தன் கட்டுக்குள் கொண்டு வர விரும்பினான். அதென்ன சாதாரண காரியமா. யாரிடம் யோசனை கேட்கலாம்” என ஆலோசித்த போது, அந்த மகான் நினைவுக்கு வந்தார்.
-தொடரும்
தி.செல்லப்பா
thichellappa@yahoo.com