
முரட்டு குணம் கொண்ட எட்டு வயது சிறுவன் ஒருவன் எல்லோரையும் அடிப்பான். அவனது தந்தை எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் கேட்கவில்லை. பிரச்னை தீர காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்கலாம் என தாய் சொல்ல, தந்தை அவனை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் சென்றார்.
சுவாமிகளை தரிசிக்க வரிசையில் நின்ற போதே அருகிலுள்ளவர்களிடம் சிறுவன் தன் சேட்டையை காட்டினான். அதைக் கவனித்தபடி இருந்தார் மஹாபெரியவர். சுவாமிகளின் அருகில் வந்ததும் தந்தை வணங்கினார். சிறுவனையும் வணங்கச் சொன்னார். கனிவுடன் பார்த்த சுவாமிகள், ''பையன் முரட்டுத்தனமாக இருக்கிறான். அது தானே உங்களுக்கு பிரச்னை?'' எனக் கேட்டார்.
''ஆமாம் சுவாமி. எல்லா சிறுவர்களையும் போல் இவனும் சாதுவாக இருக்க சுவாமிகள் தான் அனுக்ரகம் செய்யணும்'' என்றார். இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல சிறுவன் அமைதியாக சுவாமிகளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். புன்சிரிப்புடன் ஆசியளித்த சுவாமிகள், ''கவலை வேண்டாம். இவன் புத்திசாலி. புத்திசாலி குழந்தைகள் கொஞ்சம் முரட்டுத் தனமாக இருப்பதுண்டு. பலாப்பழத்தின் மீது முள் இருந்தாலும் உள்ளே இனிப்பான சுளைகள் இருக்கிறதில்லையா? போகப் போக இவன் சுபாவம் மாறி விடும். நல்லவர்கள், அனுபவம் மிக்க பெரியவர்கள் அடிக்கடி உங்கள் வீட்டுக்கு வருவது மாதிரிப் பார்த்துக் கொள்ளுங்கள். கோயில், பஜனைக்குச் செல்லும் போது இவனையும் அழைத்துச் செல்லுங்கள். தப்பு செய்யும் போது தண்டிக்கவோ, அதட்டவோ வேண்டாம். அதட்டினால் எதிர்விளைவு தான் ஏற்படும். நல்ல நண்பர்களுடன் பழகுகிறானா என்பதை மட்டும் கவனியுங்கள். நல்லதே நடக்கும்'' என்றார்.
புத்திசாலி என தன்னை சுவாமிகள் பாராட்டியதைக் கேட்ட சிறுவன் பெருமைபட்டுக் கொண்டான். நல்ல சகவாசம் ஏற்படுத்திக் கொடுத்தால் நாளடைவில் சிறுவனின் சுபாவம் மாறும் என்ற சுவாமிகளின் வழிகாட்டுதலை சிந்தித்தபடி தந்தையார் நம்பிக்கையுடன் விடைபெற்றார். யாரும் சொல்லாமலே சுவாமிகளை மீண்டும் வணங்கிய சிறுவனும் அவரைப் பின்தொடர்ந்தான்.
- மீண்டும் சந்திக்கும்வரை நன்றியுடன் விடை பெறுகிறேன்.
திருப்பூர் கிருஷ்ணன்