ADDED : ஜூலை 30, 2023 05:42 PM

மிருதங்கத்திற்கு தோல் மாற்ற வேண்டியிருந்ததால் கடைக்குச் சென்றார் பாலக்காடு மணிஐயர். “தற்சமயம் எங்களிடம் மாட்டுத்தோல் இருப்பு இல்லை. அடிமாடு வந்ததும் தோலை உரித்துப் பதப்படுத்தி ஒரு வாரத்தில் தருகிறோம்” என்றார் கடைக்காரர்.
மனதிற்குள், ''ஒரு ஜீவனை ஹிம்சைப்படுத்தி இந்த இசைத் தொழிலைத் தொடரத்தான் வேண்டுமா?” என சிந்தித்தபடி வீட்டுக்கு வந்தார். சாப்பிடப் பிடிக்காமல் படுத்து விட்டார். ஒப்புக்கொண்ட கச்சேரிகளை மட்டும் முடித்துக் கொடுத்தபின் புதிய கச்சேரிக்கு ஒப்புக் கொள்வதில்லை எனத் தீர்மானித்தார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு கச்சேரிக்காக சென்னை வந்த அவர் காஞ்சிபுரம் சென்றார். அங்கிருந்து 50 கி.மீ., தொலைவிலுள்ள கிராமத்தில் மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். அங்கு போய் சுவாமிகளை தரிசித்த போது, “மணி... நீ நாளைக்குப் போகலாம். உன் தனி ஆவர்த்தனம் கேட்டு ரொம்ப நாளாச்சு” என்று சொல்லி விட்டு மஹாபெரியவர் பூஜைக்குச் சென்றார்.
பிரசாதம் பெற்ற போது மடத்தின் சீடர், “பெரியவா...உங்களைப் பார்த்து பேசணுங்கிறார்” என்றார்.
அங்கு, '' மணி, ஏன் உன் முகம் வாட்டமா இருக்கு?” எனக் கேட்டார் மஹாபெரியவர்.
''இதுவரை நடந்தது போதும் பெரியவா. இனி ஜீவஹிம்சை செய்து மிருதங்க கச்சேரி செய்ய இஷ்டமில்லை. அதில் வரும் வருமானமும் வேண்டாம்” என்றார்.
''மணி... சிவன் கோயில்ல நந்திகேஸ்வரரை தரிசனம் செஞ்சிருக்கியோ?'' எனக் கேட்டார்.
ஆமாம் என தலையசைத்தார்.
''அவரது வேலை மிருதங்கம் வாசிப்பது. நீயோ கலியுகத்தின் நந்தி. மிருதங்கம் வாசிக்காமல் இருந்தால் தான் பாவம். அதே நேரம் கறவை நின்ற பசுக்களை அடிமாடாக விற்பதை தடுப்பது நம் கடமை. அது பெற்ற தாயாருக்கு சமம்.
மாடுகளைப் பராமரிக்காவிட்டால் நாட்டுக்கே தீங்கு ஏற்படும். பசுவைப் பாதுகாப்பது ஜீவகாருண்யம் மட்டுமல்ல மகாலட்சுமிக்கு செய்யும் பூஜையும் கூட. இனி இயற்கையாக மரணம் அடைந்த மாட்டின் தோலில் மிருதங்கம் செய்” என்றார். மறுநாள் காலையில் கச்சேரி செய்தபின் நிம்மதியுடன் புறப்பட்டார் மணிஐயர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.