
எதிர்பார்த்தவர்களை பார்த்தவுடன் ஆபத்தில் உதவும் கடவுளே என சொல்வதுண்டு. கடவுள் என்ற சொல் மகாவிஷ்ணுவையும் குறிக்கும். ஆபத்தில் உதவும் பெருமாள் தொடர்புடைய கோயில் ஒன்று நேபாளத்தில் உள்ளது வாங்க அது பற்றி தெரிந்து கொள்வோம்.
நாவல்பூர் மாவட்டம் பினாய் திருவேணியில் கஜேந்திர மோட்சம் கோயில் உள்ளது. இந்த பகுதியில் மூன்று நதிகள் சங்கமிக்கும் நாராயணி நதியில் தான் கஜேந்திர மோட்சம் நடந்தது.
மன்னர் ஒருவர் யுஜா, உபயுஜா என்ற பண்டிதர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்த சொன்னார். பின்னர் அவர்களுக்கு பரிசு வழங்கினார்.
யாருக்கு கூடுதல் பரிசு பெற்றோம் என்பதில் கர்வம் உண்டானதால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு சபித்துக் கொண்டனர். அவர்களே இங்குள்ள நாராயணி நதியில் முதலையாகவும், (யுஜா) இங்குள்ள காட்டில் யானையாகவும்(உபயுஜா) வாழ்ந்தனர். தண்ணீர் குடிக்க வந்த யானையின் காலை பகையின் காரணமாக முதலை பிடித்தது. பூர்வ ஜென்ம வாசனையால் 'பரம்பொருளே' என அழைத்த யானையை விரைந்தோடி வந்து காப்பாற்றினார் மகாவிஷ்ணு. இக்கோயிலை கஜேந்திர மோட்சக்கோயில் என அழைக்கின்றனர். இது நேபாள பாணியில் கட்டப்பட்டுள்ளது. இங்கு மகாவிஷ்ணு. அவர் அருகே யானை, முதலை வணங்குவது போலவே கருவறை அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலுக்குள் லட்சுமிவெங்கடேசர், ஜானகிராமர், அனுமன் சன்னதிகள் உள்ளன.
இக்கோயிலுக்கு அருகே வால்மீகி ஆசிரமம், முக்திநாத் கோயில்களும் உள்ளது. இங்கு கோசாலை ஒன்று பராமரிக்கப்படுவதுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
எப்படி செல்வது: காத்மாண்டிலிருந்து 140 கி.மீ.,
விசேஷ நாள்: கஜேந்திர மோட்சம் கிருஷ்ண ஜெயந்தி
நேரம்: காலை 8:00 - 5:00 மணி
அருகிலுள்ள தலம்: வால்மீகி ஆசிரமம் 20 கி.மீ.,
நேரம்: காலை 8:00 - 5:00 மணி