ADDED : ஜூலை 23, 2023 04:17 PM

ஆதவன் அருள்பெற்ற பானுதாசர்
ஸந்த் சாவ்தா மாலி எழுதிய 'நகோ துஜேம்' என தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.
'பண்டரிநாதா... எனக்கு உன்னுடைய ஞானம் வேண்டாம். உனக்குக் கிடைக்கும் மரியாதை வேண்டாம். உனது புத்தி வேண்டாம். முக்தி கூட வேண்டாம். எனக்கு நிம்மதி அளிப்பது வேறு ஒன்று. எனக்கு உனது பாதங்களே வேண்டும். உன் சரணத்தில் தலையை வைத்து வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்ந்து எனக்குக் கிடைக்க அருள் செய்வாயாக'
...
'தன் பக்தைக்காக விட்டலன் மாவு அரைத்து கொடுத்தான் என்பது ஆச்சரியமாக இருக்குது அப்பா' என்றாள் சிறுமி மைத்ரேயி.
'விட்டலன் எளிமைக்கும் நட்புக்கும் பேர் போனவன். பண்டரிபுரத்தில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ளது கோபால்புரி. அது ஜனாபாயின் பெருமையை இன்னமும் கூறுகிறது. பண்டரிபுரத்தில் இருந்து பேருந்து, படகு, ஆட்டோ மூலமாக கோபால்புரியை அடையலாம்.
கோபால்புரியில் உள்ள கண்ணன் - ஜனாபாய் கோயில் சிறுகுன்றின் மீதுள்ளது. கொஞ்சம் செங்குத்தான படிகள்தான். ஆனால் அதிக எண்ணிக்கையிலான படிகள் இல்லை. பிரகாரத்தின் ஓர் அறையில் 'ஜனாபாயும் விட்டலனும் பயன்படுத்திய அரவை இயந்திரம்' என்ற அறிவிப்புடன் ஒரு மாவரைக்கும் இயந்திரம் காணப்படுகிறது. அது தங்கத் தகட்டால் மூடப்பட்டு இருக்கிறது. அருகில் அரிசி விற்கிறார்கள். அதில் கொஞ்சம் வாங்கி அந்த இயந்திரத்தில் இட்டு நாமும் மூன்று சுற்று சுற்றலாம்'.
பத்மநாபன் இப்படிக் கூற, தானும் அங்கு சென்று தரிசிக்க வேண்டும் என ஆவல் பத்மாசினிக்கு ஏற்பட்டது. அதை புரிந்து கொண்ட பத்மநாபன் 'சீக்கிரமே உங்கள் அனைவரையும் அந்த இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்' என்று நம்பிக்கை கொடுத்தார். மற்றொரு மகானின் சரிதத்தை அவர் கூறத் தொடங்கினார்.
...
திருமாலின் பக்தர்களாக விளங்கிய ஒரு குடும்பத்தில் பிறந்தவர் பானுதாசர். ஆச்சாரமான குடும்பம் அது. உரியகாலத்தில் பானுதாசருக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. வேதங்களை கற்றுக் கொள்வதற்காக குருகுலத்துக்கும் அனுப்பப்பட்டார். ஆனால் அவருக்கு ஏனோ படிப்பில் நாட்டமில்லை. இதன் காரணமாக தன் தந்தையிடம் அடிக்கடி திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் தந்தையின் கோபம் எல்லை மீறியது. அவரிடமிருந்து தப்பிப்பதற்காக ஊரிலிருந்து கிளம்பி வெகுதுாரம் ஓடிச் சென்றார் பானுதாசர். அங்கே ஒரு கோயிலைக் கண்டார். அது சூரிய தேவனுக்கான ஆலயம். அது பார்ப்பதற்கு குகை போல காட்சியளித்தது. அதன் படிகள் கீழிறங்கிச் சென்றன. அவற்றில் இறங்கினார் பானுதாசர்.
கீழே சூரியதேவனின் திருவுருவம் காணப்பட்டது. அந்த அழகில் மெய்மறந்து அவரெதிரே நமஸ்காரம் செய்தார் பானுதாசர். பின்னர் சூரியனை நோக்கி வேண்டினார். இளம் சிறுவனொருவன் வேண்டியதைக் கண்ட சூரியன், மனமிரங்கி வேதியர் வடிவில் தோன்றி ஒரு கிண்ணத்தில் பால் அளித்தார். 'காட்டின் நடுவில் இருக்கும் இக்கோயிலில் பயப்படாமல் தங்கலாம். நான் உன்னை காக்கிறேன்' என்று கூறி மறைந்தார். இந்த வார்த்தைகள் பானுதாசருக்கு நம்பிக்கை அளித்தன. தினமும் வேதியர் பால் தருவதை வழக்கமாக்கினார்.
அதே சமயம் பானுதாசரின் தந்தை மகனைக் காணாமல் தவித்தார். எவ்வளவு தேடியும் மகன் கிடைப்பதாக தெரியவில்லை. அவர் பதறினர். என் மகன் மட்டும் கிடைத்துவிட்டால் அவனை நான் இனி நிந்திக்க மாட்டேன். அவன் பாடங்களில் கவனம் செலுத்தாததற்காக கண்டிக்க மாட்டேன். அவன் என்னிடம் சேர்த்துவிடு என திருமாலிடம் வேண்டினார். அப்போதுதான் நம்பிக்கை தரும் விதத்தில் ஒரு செய்தி அவரை எட்டியது.
'உங்கள் மகனைப் போன்ற ஒரு சிறுவனை காட்டுப் பகுதியில் உள்ள சூரியதேவன் கோயிலுக்கு அருகே பார்த்தேன்' என்று ஒருவர் கூற, வெகுவேகமாக அந்தப் பகுதியை அடைந்தார் பானுதாசரின் தந்தை. அங்கு எங்கும் தென்படாததால் அந்தக் கோயிலுக்குள் நுழைந்தார். அங்கே பானுதாசர் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். கண்ணீர் வழிய மகனை அணைத்துக்கொண்டார். 'எப்படியடா ஏழு நாட்கள் இங்கே உணவு கூட இல்லாமல் இருந்தாய்?' என்று நா தழுதழுக்க கேட்டார். 'தினமும் ஒரு பிராமணர் இங்கு வந்து எனக்கு ஒரு கிண்ணத்தில் பால் கொடுப்பார். அது எனக்குப் போதுமானதாக இருந்தது. அவர் எனக்கு சில உபதேசங்களும் செய்தார். அவர் மிகவும் ஒளி பொருந்தியவராக தோற்றமளித்தார்' என்று மகன் கூறியதும் முதலில் திகைத்து போன தந்தை பிறகு உண்மையை உணர்ந்தார். ஏழு நாட்கள் குகையிலிருந்தும் தன் மகன் ஆரோக்கியத்துடன் பிரகாசமாக இருப்பதைக் கண்டதும் தன் மகன் கடவுள் அருள் பெற்றவன் என்பதை அறிந்து கொண்டார்.
'மகனே, வீட்டுக்குப் போகலாம் வா' என்று அழைத்தார். பானுதாசர் தயங்கினார். 'நான் உன்னை எதற்காகவும் கடிந்து கொள்ள மாட்டேன்' என்ற வாக்குறுதியை அளித்தவுடன் வர சம்மதித்தார் பானுதாசர்.
பானுதாசருக்கு மனப்பக்குவம் வந்திருந்தது. வீடு திரும்பியதும் பூஜை அறையில் இருந்த விட்டலன் வெண்கலச் சிலையைக் கண்டதும் இனி விட்டலனே தன் வாழ்வின் குறிக்கோள் என்ற தீர்மானம் அவர் மனதில் எழுந்தது.
காலம் கடந்தது. பானுதாசர் இப்போது இளைஞர். அவருக்குத் திருமணம் செய்விக்கப்பட்டது. இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையானார் பானுதாசர்.
மூப்பின் காரணமாக பானுதாசரின் தந்தை இறந்து விட, குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு பானுதாசருடையதானது. ஆனால் விட்டல பக்தியில்தான் அவர் மனம் திளைத்தது. கூட இருந்தவர்கள் அவரைக் கடிந்தனர். 'உரிய காலத்தில் வேதங்களை கற்கவில்லை. எனவே வேத ஆசானாக வாழ்க்கை நடத்த முடியாது. அதேசமயம் உன் மனைவி, குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு உனக்குள்ளது. எனவே 'நாங்கள் எல்லாம் குறிப்பிட்ட தொகையை தருகிறோம். அதைக் கொண்டு துணிகளை வாங்கு. லாபத் தொகையை சேர்த்து விற்கத் தொடங்கு. முதலீட்டு தொகையை எங்களுக்குப் பின்னர் திருப்பி அளித்துவிடு. லாபத் தொகையை கொண்டு குடும்பத்தை நடத்து' என்றார்கள்.
பானுதாசர் மனம் இதற்கு உடன்படவில்லை. அவர்கள் கூறியதை விட குறைவான லாபம் வைத்து அவர் துணிகளை விற்க தொடங்கினார். அதுமட்டுமல்ல எந்த வாடிக்கையாளர் வந்தாலும் 'இவ்வளவு தொகைக்கு இந்த துணிகள் வழங்கப்பட்டன. இந்த அளவு லாபம் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது' என்பதையும் விளக்கினார். இப்படி அவர் உண்மை பேசியதாலும் குறைவான லாபத்தில் குறைவான விலையில் தன் பொருள்களை விற்றதாலும் அவருக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமானது. இதனால் பிற வணிகர்கள் பாதிக்கப்பட்டனர். 'இவனுக்கு நல்லது செய்யப் போய் அது நமக்குத் தீங்கானதே' என வருந்தினர். அதே சமயம் அவர்களால் பானுதாசரை நேரடியாக குற்றம் சுமத்தவும் முடியவில்லை. ஏனென்றால் தான் வாங்கிய கடனை அவர்களுக்கு ஒழுங்காக திருப்பி அளித்து விட்டிருந்தார் அவர். இந்த நிலையில் பழிவாங்க அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
-தொடரும்
ஜி.எஸ்.எஸ்.,
aruncharanya@gmail.com