
வேதாந்த தேசிகன் முகத்தில் பரவிய சலனம் மணப்பாக்கத்து நம்பியை சிந்திக்க வைத்தது.
''சுவாமி... நான் தவறாக பேசி விட்டேனா?''
''ஆம்...தவறாகத் தான் பேசி விட்டீர்''
வேதாந்த தேசிகன் அதிர்ச்சியளித்தார்.
''அது என்ன என்று என்னை உணரச் செய்வீரா?''
''சற்று பின்னோக்கி சிந்தித்தால் தங்களுக்கே தெரிய வருமே?''
''பின்னோக்கிச் சிந்திப்பதா... புரியவில்லை சுவாமி''
''என்னைக் காண வரும் முன் எங்கு சென்றதாகக் கூறினீர்?''
''அத்திகிரி எம்பெருமான் கோயிலுக்கு...''
''அங்கே வரதன் இட்ட கட்டளை என்ன?''
'' ஸ்ரீரங்கம் சென்று பிள்ளைலோகாச்சார்யாரிடம் குறையை தீர்த்துக் கொள்ள கட்டளையிட்டார்''
''அவர் எப்படிப்பட்டவர் என அறிவீரோ?''
''அந்த பெயரையே எம்பெருமான் மூலம் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் எப்படி அறிந்திருக்க முடியும்?''
''இப்படியிருக்கும் நிலையில், மறைபொருள் உள்ளிட்ட சகலத்தையும் என்னிடம் அறிய விரும்புவது சரியா?''
''உங்கள் அருள்திறத்தைத்தான் நேரிலேயே கண்டேனே...''
''இந்த உலகம் புறச்செயல்பாடுகளை பார்த்து மயங்குகிறது. அகச்செயல்பாடுகள் தான் முக்கியம் என்பதை தாங்கள் அறியவில்லையோ?''
''தாங்கள் என்ன கூற வருகிறீர்கள்?''
''பிள்ளைலோகாச்சார்யார் அவதார புருஷர். காஞ்சி வரதனின் மானுட ஜென்மம்''
''தாங்கள் அவரை இந்தளவுக்கு அறிந்திருப்பது எனக்கு தெரியாது என்னை மன்னியுங்கள்...''
''மன்னிக்க ஒன்றுமில்லை. வைணவன் ஒரே குறியாய் ஒரே போக்கில் செல்ல வேண்டும். ஒரு தெய்வம் - ஒரு போக்கு - ஒரே பிறப்பு இதுவே வைணவனின் லட்சணங்கள்!''
''ஒரு தெய்வம் சரி - அதை நோக்கிய ஒரே போக்கும் சரி - ஒரே பிறப்பு என்பது புரியவில்லையே...''
''வைணவனுக்கும் ஒரு பிறப்பு தான்... பல பாதை - பல போக்கு கிடையாது. கூடவும் கூடாது. ஒரு தெய்வத்தை மனதில் நிறுத்தி ஒரே பாதையில் சென்று எம்பெருமான் திருவடிகளை அடைந்து விடுவாருக்கு ஒரு பிறப்பு தானே?''
''ஆகா...அற்புதமான விளக்கம். இப்போது நான் என்ன செய்ய வேண்டும்''
''ஒன்றுமில்லை. எம்பெருமான் சொற்படி ஸ்ரீரங்கம் சென்று பிள்ளைலோகாச்சார்யாரிடம் உங்களை ஒப்படையுங்கள். மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்''
''தங்களுக்கு தங்க மனசு! அதனால் தான் நான் தங்களை ஆச்சார்ய வந்தனம் செய்ய விரும்பிய போதும், தாங்கள் என்னை மடைமாற்றம் செய்து லோகாச்சார்யாரை நோக்கி செலுத்துகிறீர்கள். அவர் எம்பெருமானின் மறுவடிவம் என்பதை புரிய வைத்தீர்கள்..''
''நல்லது! ஸ்ரீரங்கம் புறப்படுங்கள். காலம் தாழ்த்துவது சரியல்ல. என் பூரண ஆசிகள்''
வேதாந்த தேசிகர் அட்சதை துாவி வாழ்த்தி விட்டு, ''பிள்ளைலோகாச்சார்யாரை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்கள். அப்படியே சோதனை காலம் நெருங்க உள்ளது, அப்போது வைணவ நெறிக்கு பங்கமின்றி பொறுப்புடன் நடப்பது அவசியம்'' என்றும் சொல்லுங்கள்.
''சுவாமி! பரிட்சைக்காலம் என்றால்...''
''அவர் புரிந்து கொள்வார்''
''நான் அறியக் கூடாதா?''
''அந்நிய நாட்டவர் குறித்து வருந்தினீரே?''
''ஆம்''
''அவர்கள் இங்கு வரக் கூடும் அல்லவா?''
''நிச்சயமாக..''
''அதைத் தான் பரிட்சை காலம் என்றேன்''
''அது கொடிய காலம் ஆயிற்றே. அது எப்படி பரிட்சைக்காலமாகும்?''
''அது எந்தக் கோணத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்தது''
''என் கோணம் அப்படியாயின் தவறா?''
''ஆம் மிலேச்சர்களின் மார்க்கமும், வழிமுறைகளும் வேறு. நம் நெறிமுறைகள் அவர்களுக்கு ஏற்புடையதாகவும் இருக்காது.''
''என்ன சொல்ல வருகிறீர்கள்... புரியவில்லையே''
''கோபமோ, வெறுப்போ தேவையில்லை. அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு! நம் நம்பிக்கை நமக்கு! நம் நெறி விட்டு விலகாமலும், நம்பிக்கை இழக்காமலும் திகழ வேண்டும் என்று மட்டும் கூறுங்கள்!''
''நிச்சயம் சொல்கிறேன். ஆனாலும் பூடகமாக ஏதோ கூறுவது போல் தான் தோன்றுகிறது''
''ஆம்.. ஆனால் நடக்க நடக்க எல்லாம் தெரிய வரும்''
''ஒன்று மட்டும் புரிகிறது. பெரும் சோதனை காத்திருக்கிறது என்று''
''நான் பரிட்சை என்றேன். நீங்கள் சோதனை என்கிறீர்கள். ஒன்றும் வேறுபாடு இல்லை. எம்பெருமான் நமக்காக அவதாரம் எடுத்து, சோதனைகளையும் சந்தித்திருக்கிறான். நாமோ அதை மனித வாழ்வின் வேறு வடிவில் சந்திக்கப் போகிறோம்.. அவ்வளவு தான்!''
''பயமாக உள்ளது சுவாமி!''
''சுதர்சன சக்கரத்தை தியானியுங்கள். பயம் ஓடி விடும். அனுமனைப் பின் தொடருங்கள். துணிவும், அறிவுத் தெளிவும் உருவாகும்''
வேதாந்த தேசிகர் பொடி வைத்தே பேசினார். அதை அசை போட்டபடியே மணப்பாக்கத்து நம்பியும் புறப்பட்டு ஸ்ரீரங்கம் அடைந்தார்.
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கரின் சன்னதி. கல் மண்டபம் ஒன்றில் பிள்ளைலோகாச்சார்யார் சீடர்களுக்கு பாடம் நடத்தியபடி இருந்தார். மணப்பாக்கத்து நம்பி வந்திருப்பதை யாரும் கவனிக்கவில்லை.
''சீடர்களே! எம்பெருமான் மீது பக்தி செய்யவே பிறப்பு அருளப்பட்டுள்ளது. ஆறாவது அறிவு என்பது மனிதருக்கு மட்டுமே! பெருகிப் பாயும் நதியை 'ஆறு' என்போம். ஆறு நிலைப்பாட்டை உடையது என்பதால் காரணப் பெயராக ஆறு என்கிறோம். கடல்நீர் ஆவியாதல் முதல் நிலை, மேகமாதல் இரண்டாம் நிலை, மேகம் சூல் கொள்ளுதல் மூன்றாம் நிலை, மேகம் மழையாக பொழிந்து அருவியாக பாய்வது ஐந்தாம் நிலை, பாய்ந்த நீர் கடலில் கலப்பது ஆறாம் நிலை...
இந்த ஆறு நிலை கொண்டதால் அது ஆறு எனப்படுகிறது. இதில் நீராடுவது மேலான செயலாக கருதப்பட காரணம் சமுத்திர சங்கமமே! ஆற்றில் நாம் நிற்கும் சமயம் வலப்புறம் மலையும், இடப்புறமும் கடலும் இருப்பதாக பொருள். ஒன்று உயர்ந்தது. இன்னொன்று ஆழமானது.
நடுவில் உள்ள ஓட்டம் சமநிலையைச் சொல்வது. ஆறு தன்னுள் இப்படி மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. நமக்கும் அந்த நிலை பற்றிய அறிவும், புரிதலும் வேண்டும். அதை ஒரு ஆறு மறைவாக உணர்த்துகிறது.
அது எப்படி கடலை அடைகிறதோ, அதை போல ஆறு அறிவு கொண்ட மனிதர்களான நாமும் கடலை இருப்பிடமாகக் கொண்ட எம்பெருமானை அடைய வேண்டும். அதற்கே இந்த வாழ்வு... இப்படிப்பட்ட வாழ்வை நாம் வீணில் கழித்து, உடம்புக்கு அடிமைப்பட்டு உண்டும் உறங்கியும் கழிக்கலாமா?'' பிள்ளைலோகாச்சார்யார் கேட்ட கேள்வி மணப்பாக்கத்து நம்பியை சிந்திக்க வைத்தது.
''ஆகா.. எளிய விளக்கம். ஆற்றை தொட்டு கடலிடம் சென்று பின் அதை பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமானோடு தொடர்புபடுத்திச் சொன்ன விளக்கம் தான் என்னே!''
வியந்தார் மணப்பாக்கத்து நம்பி. அப்போது குதிரைகள் ஓடும் குளம்படிச் சத்தம்.. குதிரைகளின் கனைப்புச் சப்தமும் கேட்டது ஏதோ அசம்பாவிதம்...?
தொடரும்
இந்திரா சௌந்தர்ராஜன்