ADDED : ஜன 10, 2020 09:34 AM

காஞ்சி மகாசுவாமிகள் ஒருமுறை ஆந்திராவிலுள்ள கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்குள்ள மக்களின் தொழில் விவசாயம், கால்நடை வளர்த்தல். தங்கள் பகுதிக்கு மகாசுவாமிகள் வந்திருப்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சுவாமிகள் தங்குவதற்கு நல்ல இடம் வேண்டுமே? என ஆலோசித்தனர். ஒதுக்குப்புறமாக ஓரிடத்தில் கீற்றுக் கொட்டகை வேய்ந்து குடில் அமைத்தனர். வேத காலத்து ரிஷிகளைப் போல சுவாமிகளும் குடிலில் தங்குவதற்கு தயாரானார். அதற்கு முன்பாக மக்களுக்கு ஆசியளிக்கத் தொடங்கினார்.
அப்போது பன்றி ஒன்று, குட்டிகளுடன் குடிலுக்குள் நுழைந்து அங்குமிங்கும் சுற்றியது. யாரையும் அவை பொருட்படுத்தியதாக தோன்றவில்லை. என்ன இது! சுவாமிகள் தங்குமிடத்தில் பன்றிகளா? என சிப்பந்திகள் கோபம் கொண்டனர். பன்றிகளின் மீது கற்களை வீசி விரட்டவும் முயன்றனர். ஆனால் தாய்ப்பன்றி சிறிதும் பயப்படவில்லை. அலட்சியமாக பார்த்தபடி நகராமல் நின்றது. குட்டிகளோ தாயைச் சுற்றி விளையாடின.
இதைக் கண்ட மகாசுவாமிகள், ''பன்றிகளை தொந்தரவு செய்ய வேண்டாம். சிறிது நேரத்தில் தானாகவே போய் விடும். நாம்தான் இப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து உள்ளே வந்திருக்கிறோம். நமக்கு முன்பே இவை தான் இப்பகுதியில் குடியிருந்தன. இல்லாவிட்டால் இத்தனை சுவாதீனமாக அவற்றால் சுற்றி வர முடியுமா?
திருமால் வராக அவதாரம் எடுத்து கடலுக்குள் போன பூமியை மேலே கொண்டு வந்தார். இதோ இப்போது நமக்கு முன் அம்பிகையின் அம்சமான பன்றி முகம் கொண்ட வராஹியம்மனே இப்படி தோன்றியிருக்கிறாள். பிரார்த்தனை செய்தபடி காத்திருப்போம். பன்றிகள் வெளியேறிய பின் பணிகளைத் தொடர்வோம்'' என்றார்.
ஓரிடத்தில் அமர்ந்த மகாசுவாமிகள் ஜபம் செய்யத் தொடங்கினார். சற்று நேரத்தில் குட்டிகளோடு பன்றி புறப்பட்டது. இடத்தை சுத்தப்படுத்திய பின், தங்களின் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர்.
அப்போதும் மகாசுவாமிகள் ஜபித்தபடியே இருந்தார். அவரது முகத்தில் புன்னகை வெளிப்பட்டது. காரணம் அப்பகுதியின் முந்தைய உரிமையாளர்களான தாய்ப்பன்றியும், குட்டிகளும் தங்களுக்காக நிலத்தை விட்டுக் கொடுத்தது அல்லவா?
உடல்நலம் பெற...
காஞ்சிப்பெரியவர் அருளிய ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மந் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
பொருள்: பரம்பொருளே! எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! மகத்துவம் கொண்டவரே! நீயே நோய்களைப் போக்கி எனக்கு நலம் தர வேண்டும்.
உபதேசங்கள்
* நாடு செழிக்க பசுவை நேசியுங்கள்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com
திருப்பூர் கிருஷ்ணன்