
இருப்பதுதான் இல்லாமல் ஆகும். இல்லாமல் ஆவது தான் மறுபடியும் இருக்கும். இல்லவே இல்லாத ஒன்றை நம்மால் நினைக்க முடியுமா? நமது மனசின் அடுக்குகளிலும், நினைவின் அடுக்குகளிலும் பதிந்திருக்கும் ஒன்று தான் கதையாக, கவிதையாக, வார்த்தையாக, வாழ்க்கையாக, கடவுளாக, கடவுள் மறுப்பாக இப்படி எத்தனை எத்தனையோவாக உருவாக முடியும். உருவாக்கவும் முடியும்.
விமானத்தில் பறக்கும் போது இந்த பிரம்மாண்டத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். வானம் இருக்கும். அதன் கீழே மேகங்கள் கூட்டம் கூட்டமாக மிதந்து கொண்டிருக்கும். வானத்துக்கும் மேகத்துக்கும் நடுவிலுள்ள வெளி... வெட்ட வெளி... அண்ட வெளி... இந்த வெளியில் விமானம் பறக்கும் போது நமக்குள் ஏற்படும் புரிதல் அலாதியானது.
இல்லாதது இருக்கிறது. அது இருக்கிறது. ஆனால் அங்கே ஏதுமில்லை. எனவே இல்லாததும் இருந்தாகத்தான் வேண்டும்.
இருப்பதும் இல்லாததும் எதைப் போன்றது என்று கேட்டால் பசியை போன்றது என்று சொல்லலாம்.
வயிற்றில் உணவு இல்லை. அதனால் வயிற்றில் பசி இருக்கிறது. இல்லாத ஒன்றினால் இருப்பது உருவாகிறது. இருப்பதிலிருந்து இல்லாதது நிரப்பப்படும். இல்லாதது நிறைவாகும்.
இரைப் பசி - உணவால் நிறையும்.
இறைப் பசி - உணர்வால் நிறையும்.
இரைப்பசியோடு இருப்பவருக்கு உணவின் படங்களைகாட்டினால் போதுமா? உணவின் வாசனையை காட்டினால் போதுமா? உணவு என்னும் பவுதீகப் பொருள் மட்டும் தான், நிஜமான உணவு தான் இரைப்பசியை நிறைக்கும்.
இதே போன்று தான் இறைப்பசியும்...
அடையாளங்களை துறப்பது தான் இறைமை என்று சொன்னாலும், அடையாளம் மூலம் தான் அடையாளமின்மையை அடைய முடியும். இரைப்பசி தீர்ந்ததும் உணவுப் படங்களும், உணவுப் பொருட்களும் வேண்டாதவையாகி விடும். அதே போன்று இறைப்பசி முழுமையானால் தான், இறைக்காட்சி இல்லாத வெட்ட வெளியிலும் இறைமையை உணர முடியும்.
வங்காள விரிகுடா கரையோரமாக, சென்னை சோழிங்கநல்லுாரில் எனது இறைப்பசி தீர்க்கும் திருத்தலம் உள்ளது. பிரத்யங்கரா தேவி சன்னிதானம். அடடா... அடடா... எந்த மொழியிலும் அவளை விளக்க வார்த்தை இல்லை. எந்த வழியிலும் அவளை முழுமையாக ஆராதிக்க வார்த்தைகள் இல்லை.
குளுமையான திருக்கோயில். இனிமையான தென்றல் காற்று. சுத்தம், சுத்தம், சுத்தம் என்றிருக்கும் துாய்மையான வளாகம். மின்னலின் வெளிச்சமான சன்னிதானங்கள். ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் எனது கண்களும் புல்லரித்தன என்றால் பிரத்யங்கரா தேவி திருக்கோயிலில் தான்.
கோயிலுக்குச் சென்றால் எதையாவது கேட்கத்தான் வேண்டுமா? எதையாவது இறைஞ்சத்தான் வேண்டுமா?
அந்தந்த கோயிலும் அந்தந்த அளவில் நமக்கு தரும் நிம்மதியின் வாசம். சந்தோஷத்தின் ஆசுவாசம். மலர்ச்சியின் சுகந்தம். நெகிழ்ச்சியின் மகரந்தம். இவைஎல்லாம் உலகின் எந்த கடையில் கிடைக்கும்? எத்தனை கோடி கொடுத்தால் கிடைக்கும்?
எங்குமே கிடைக்காத பொக்கிஷமும், பூரிப்பும், நிம்மதியும் வேண்டுமா?
சோழிங்கநல்லுார் பிரத்யங்கரா தேவி கோயில் மட்டுமே இத்தனையும் தரும். இதற்கு மேலும் தரும். கேட்பவையும் தரும். கேட்காதவையும் தரும். இந்தப் பிறவிக்கும் அர்த்தம் தரும்.
இனி வரும் பிறவிக்கும் அர்த்தம் தரும்.
மனசு முழுக்க குழப்பம். கண்கள் முழுக்க கண்ணீர். விடியல் முழுக்க இருட்டு. உள்ளம் முழுக்க வலி. வார்த்தை முழுக்க புலம்பல். உறக்கம் முழுக்க பிரச்னை. முயற்சி முழுக்கத் தோல்வி. உடம்பு முழுக்க வியாதி.
இப்படியான வாழ்க்கையா? கவலையே வேண்டாம். சமய சஞ்சீவி, அமுதம், சர்வ நிவாரணி இப்படி எதை சொன்னாலும் அதையெல்லாம் விஞ்சி நிற்கிறாள் பிரத்யங்கரா தேவி. விஸ்வரூபம் எடுத்து நிற்கிறாள் பிரத்யங்கரா தேவி.
சரபேஸ்வரரின் மூன்றாவது கண்ணிலிருந்து உதித்தவள்; ஆயிரத்தெட்டு சிங்க முகம்; இரண்டாயிரத்து பதினாறு கரங்கள்; குருதி தோய்ந்த நாக்குமாக தோன்றியவள்; பார்வதி. சரஸ்வதி, லக்ஷ்மியின் படைப்பானவள்;
இரண்யகசிபுவின் அழிவுக்கு பின்னும் ஆக்ரோஷமாக அலைந்த, நரசிம்மரின் கோபம் தீர்க்க அவதரித்தவள் என்றெல்லாம் புராணங்கள் சொல்கின்றன.
வராகி, நீல சரஸ்வதி, சரபேஸ்வரர், விநாயகர், முருகன், பஞ்சமுக ஆஞ்சநேயர், அக்னிதேவன், காளிகாம்பாள், ஐயப்பன், சனீஸ்வரர், நரசிம்மர், ராகு கேது, குருவாயூரப்பன், சிவன் என எல்லோரும் புடைசூழ காட்சி தரும் கோலாகல தாய் பிரத்யங்கரா தேவி.
சிங்கத் திருமுகம், மனித உருவம் என்று காட்சி தரும் கோலாகல தாய் பிரத்யங்கரா தேவி, சக்தியின் அவதாரம்; சவுந்தர்யத்தின் அவதாரம். அவள் திருத்தலம் பதைபதைக்கும் மனசுக்கு சாமரமாகும். வதைவதைக்கும் மன அழுத்தத்துக்கு ஆதுரமாகும். வழியும் கண்ணீரைத்துடைக்கும் தாய்மைக் கரமாகும். நம் வாழ்க்கையை காக்கும் அறமாகும்.
அவளின் பிரகாரத்தில் நடந்தேன். அவளின் தரிசனத்தில் கிடந்தேன். எனது கவலையெல்லாம் கடந்தேன். அவளின் வெளிச்சத்தில் விடிந்தேன். அதர்மங்களைக் காலடியில் போட்டு மிதிப்பாள் எனும் நம்பிக்கையுடன் சோழிங்கநல்லுார் வாருங்கள். அநீதியை அழிப்பவள், அக்கிரமங்களை அழிப்பவள், துன்பங்களை அழிப்பவள் இவள்.
வேண்டுதலைச் சமர்ப்பித்து பசுமஞ்சளை அவள் காலடியில் சேர்க்கும் நொடி நம் வாழ்வின் வசந்த நொடி. வேண்டுதல் நிறைவேறிய பின் மீண்டும் ஐந்து பசுமஞ்சளை பிரத்யங்கரா தேவிக்குத் தந்து பாருங்கள். அவளே நமது காப்பு; அவளே நமது உயிர்ப்பு; அவளே நமது செழிப்பு; அவளே நமது இருப்பு.
இன்னும் சொல்வேன்
அலைபேசி: 94440 17044
- ஆண்டாள் பிரியதர்ஷினி