ADDED : ஜன 17, 2018 03:38 PM

பரமாச்சாரியாரை தேடி வந்தான் இளைஞன் ஒருவன். ''சுவாமி... நீங்களே என் குரு. உங்களிடம் மந்திர உபதேசம் பெற வந்திருக்கிறேன்'' என்றான்.
சுவாமிகள், ''எத்தனையோ பேர் என்னை குரு என்கிறார்கள்'' என்று சொல்லி சிரித்தார்.
இளைஞன் பிடிவாதமாக,'' மற்றவர்களும் நானும் ஒன்றல்ல; உண்மையில் நீங்கள் தான் என் குரு. இன்று நீங்கள் ' ஸ்ரீவித்யா ஷோடசி மந்திரத்தை' எனக்கு உபதேசிக்க வேண்டும். சிஷ்யனுக்கு உபதேசிப்பது உங்கள் கடமையல்லவா?'' என்றான்.
எப்படியாவது சுவாமிகள் சம்மதிக்க வேண்டும் என்னும் உறுதி அவனது குரலில் வெளிப்பட்டது.
சுவாமிகள் உற்று பார்த்த போது, ஆன்மிகத்தில் இன்னும் அவன் ஆரம்ப நிலையை கடக்கவில்லை என்பதால், ஸ்ரீவித்யா உபாசனைக்கு அவசியமில்லை என்பது புரிந்தது.
''மந்திரோபதேசம் இருக்கட்டும்; அது பற்றி பிறகு பேசுவோம். இப்போது ஆன்மிகரீதியாக என்ன செய்கிறாய்?'' என கேட்டார்.
''தினமும் சவுந்தர்ய லஹரி, திருப்பாவை, திருவெம்பாவை, விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்கிறேன்''
''அதையே இன்னும் சில காலம் அக்கறையுடன் செய்து வா''
''இன்று நீங்கள் மந்திர உபதேசம் செய்யாவிட்டால், இங்கிருந்து போகமாட்டேன்''
''உன் வயது என்ன''
''23''
''உன் தாயார் உனக்கு சாப்பாடு கொடுக்கிறாளா? இல்லை பால் தருகிறாளா?''
திகைப்புடன் அவன்,''சாப்பாடு தான்... கூட்டு, குழம்பு, ரசம், மோர் எல்லாம் தான் சாப்பிடுகிறேன்''
''நீ ஆறுமாத குழந்தையாக இருந்தபோது அவள் சாப்பாடு கொடுத்தாளா?''
''அது எப்படி முடியும்? அப்போது பால் தான் கொடுத்தார்''
''அது மாதிரி தான் ஆன்மிகமும். நீ ஆன்மிகத்தில் இப்போது ஆறுமாத குழந்தை. நீ இப்போது செய்வதை தொடர்ந்து செய்து வா. திட உணவுக்குரிய பக்குவத்தை வயிறு அடைவது மாதிரி; உன் மனதிற்கு பக்குவம் வேண்டும். அதுவரை காத்திரு... காலம் கனியும் போது உனக்கான குருவை, கடவுளே அனுப்புவார். நீ கேட்ட மந்திர உபதேசம் அப்போது கிடைக்கும்'' என்றார். சுவாமிகளின் விளக்கம் கேட்டதும் ஆன்மிகத்தில் மனப்பக்குவத்திற்கும் ஏற்ப படிநிலைகள் உண்டு என்பது புரிந்தது. மனநிறைவுடன் வணங்கி விட்டு புறப்பட்டான்.