ADDED : ஜன 17, 2018 03:37 PM

எப்போதும் மகிழ்ச்சியுடன், சிரித்து பேசும் அந்த சங்கீத வித்வான் அன்று, சற்று சுருதி குறைவுடன் காணப்பட்டார்.
அவர் நண்பர் கேட்டார், 'என்ன சார்... இந்த சங்கீத சீசனிலே நிறைய கச்சேரிகள் உங்களுக்கு புக் ஆகியிருக்குமே. 'கந்தர்வ சபா'வில கூட நிறைய நிகழ்ச்சில பாடிட்டு வந்துருக்கீங்க. அப்புறம் ஏன் கவலையோட இருக்கீங்க?'
வித்வான் சற்று விரக்தியுடன் பதிலளித்தார், 'சமீபத்தில நிகழ்ச்சிக்கு ஓரளவு தான் கூட்டம் வந்தது. அதிலும் பலருக்கும் சங்கீத நாட்டமே இல்லை. நான் பாடிக் கொண்டிருக்க, ரசிகர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அனுபவித்து பாடுபவர்கள் இருந்தால் மட்டும் போதுமா? அதை ரசித்து கேட்பவர்களும் இருந்தால் தானே நிகழ்ச்சி வெற்றி பெறும்' என்றார்.
சொற்பொழிவு, கலை, தொழில், படிப்பு, விளையாட்டு என எந்த துறையில் பங்கேற்றாலும், அதில் உள்ளார்ந்த ஈடுபாடு, முழு கவனம் செலுத்தி கற்பவர்கள் தான் சாதனை படைப்பர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஈடுபாடும், அர்ப்பணிப்புமே ஜெயித்துக்காட்டுவதற்கான மூல காரணிகள்.
இளமைப்பருவம் தான் மனிதனின் வாழ்வில் முக்கிய காலகட்டம். எதிர்கால வாழ்விற்கான கால்கோள் விழா நடத்தும் கல்லுாரி பருவத்தை மாணவர்கள் நல்லபடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அவர்களின் கவனம் அரட்டையிலும், அரசியலிலும், காதலிலும், கேளிக்கையிலும் தடம் மாறினால் படிப்பு ஏறாது.
பாரதிதாசன் தன் பாடலில் சித்தரிக்கும் சம்பவம் ஒன்றை புதிய கோணத்தில் பார்க்கலாமா...
இளைஞன் ஒருவன் அவன் வீட்டு கூடத்தில் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தான்.
அப்போது பக்கத்து வீட்டு இளம்பெண் ஒருத்தி, ஏதோ வேலையாக அவன் வீட்டிற்குள் நுழைந்தாள். வாலிபனின் பார்வையும், வந்தவளின் பார்வையும் சங்கமித்தன.
அவ்வளவு தான்! அவன் ஈடுபாடு இடம் மாறியது. பாடம் தடம் மாறியது.
கவிஞர் பாடுகின்றார்,
'பாடம் படித்த நிமிர்ந்த விழி - தனில்
பட்டுத் தெறித்தது மான்விழி!
ஆடை திருத்தி நின்றாள் அவள் தான் - இவன்
ஆயிரம் ஏடு திருப்புகிறான்!'
'ஈடுபாட்டுடன் பயின்றவை என்றுமே
மறக்கப்படுவதில்லை' என்கிறார் அறிஞர் ஒருவர்.
நம் மூதாதையருக்கு வருடந்தோறும் செய்யும் திவசத்திற்கு, 'சிராத்தம்' என்று பெயர்.
அதை செய்ய வரும் பெரியவர்களை நம் மூதாதையர்களாக நினைத்து அந்த கடமையை சிரத்தையோடு, அதாவது ஈடுபாட்டோடு செய்வது என்பதை 'சிராத்தம்' என்ற சொல் குறிக்கிறது. கடனே என்று பிதுர்கடன் செய்வது தவறானது.
தாமரை இலை நீர் போல தான் பலர் பட்டும், படாமலும் செயலாற்றுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் எப்படி திறமைசாலிகளாக விளங்க முடியும்?
குருஷேத்திர போர்க்களத்தில் கவுரவர்களோடு போரிட வந்த அர்ஜூனன் தயங்கியும், மயங்கியும் நின்றான்.
அத்தகைய சூழ்நிலையில் பரந்தாமன் பார்த்திபனுக்கு கூறிய அறிவுரை களஞ்சியமே 'பகவத்கீதை' என்பதை நாம் அறிவோம். 'போர்புரிய வந்த கடமையிலிருந்து பின்வாங்க கூடாது; பூரண ஈடுபாட்டுடன் செயல்படு' என்பதை கீதை வலியுறுத்துகிறது.
கீதையின் அத்யாயங்கள் கர்ம யோகம், ஸாங்க்ய யோகம், விபூதி யோகம் என்று யோகத்தின் பெயராலேயே அமைந்திருக்கும்.
மகாகவி பாரதியார் பகவத் கீதைக்கு எழுதிய உரையில், 'யோகம்' என்பதற்கு அளித்துள்ள அர்த்தம் என்ன தெரியுமா?
'எச்செயலில் ஈடுபட்டாலும் அதனோடு பொருந்துக! இரண்டற கலந்து அத்தொழிலில் ஈடுபடுக!' என்பது தான்.
சாலையின் ஓரத்தில் மரம் நடும் பணி நடந்து கொண்டிருந்தது. மூன்று பேர் அப்பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். முதலாமவர் குழி தோண்ட வேண்டும், இரண்டாமவர் மரம் நட வேண்டும்; மூன்றாமவர் மண்ணை இட்டு பள்ளத்தை மூட வேண்டும்.
இப்படியாக நடந்து கொண்டிருந்த பணியில் அன்று நடந்த குழப்பத்தைப் பாருங்கள்...
முதலாமவர் பள்ளம் தோண்டிக் கொண்டே செல்ல, மூன்றாமவர் பள்ளத்தை மூடிக் கொண்டே சென்றார்.
இதை கவனித்த வழிப்போக்கன் ஒருவர் விசாரித்தார். அதற்கு அவர், 'அவரவர்க்குரிய வேலையை அவரவர் செய்கிறோம். மரம் நடுபவர் இன்று விடுமுறை' என கூறினார்.
இப்படியெல்லாம் நடப்பதை பார்த்தால் பாரதி பாடலை தான் நினைக்க தோன்றுகிறது
நெஞ்சு பொறுக்குதிலையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்!
தொடரும்
அலைபேசி: 98411 69590
- திருப்புகழ் மதிவண்ணன்