ADDED : ஜூன் 29, 2017 02:12 PM

சிறிய பாத்திரத்தில் சின்னஞ்சிறு சிவலிங்கத்தை தரிசிக்க, திருவாரூர் மாவட்டம் திருவாய்மூர் தியாகராஜர் கோயிலில் வழிபட்டால் அகால மரணம் ஏற்படாது. சொர்க்கம் கிடைக்கும்.
தல வரலாறு: தேவர் தலைவனான இந்திரன் சிவனிடம், விடங்கம் என்ற சிறிய வடிவ லிங்கத்தை பூஜை செய்வதற்காக கேட்டான். ''போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில், அதை வைத்து பூஜை செய்வது கஷ்டம்,'' என சிவன் கூறினார். இந்திரன் வற்புறுத்தியதால், அதைக் கொடுத்து விட்டார்.
அந்த லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என சிவபெருமான் விரும்பினார். முசுகுந்த சக்கரவர்த்தி என்பவர் பூலோகம் முழுமையும் ஆண்டு வந்த போது, மக்கள் மிருகங்களால் துன்பப்பட்டனர். அவர் வேட்டைக்குச் சென்றார். பின்னர் காவிரிக்கரைக்கு வந்தார்.
சில முனிவர்கள், சிவராத்திரி பூஜைக்காக வில்வமரக்காடு ஒன்றுக்கு இரவில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் முசுகுந்தனிடம், சிவராத்திரியன்று
மிருகங்களை வேட்டையாடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. எனவே வேட்டையைக் கைவிடு,'' என்றனர். அறியாமல் செய்த தவறுக்காக வருந்திய அரசன், முனிவர் போல் வேடம் தரித்து, அவர்களுடன் சென்றார். அவருக்கு காட்சி தந்த சிவன், இந்திரனிடம் இருக்கும் சிவலிங்கத்தைஎப்படியேனும் வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். வாலாசுரன் என்பவனைக் கொல்பவர்களுக்கு எதைக் கேட்டாலும் தருவதாக இந்திரன் சொல்லியுள்ளான். நீ அவனைக் கொன்று விடங்கலிங்கத்தை பரிசாகப் பெற்று வா,'' என்றார்.
விடங்க வடிவம் என்றால் எப்படியிருக்கும் என்பதைத் தனக்கு காட்ட வேண்டும்,” என்றான் முசுகுந்தன்.
சிவனும் சிறிய லிங்க வடிவில் காட்சியளிக்க, அங்கு ஒளிவெள்ளம் எழும்பியது. அதுகண்டு பரவசப்பட்ட முசுகுந்தன், “தாங்கள் இந்திரலோகத்திலும் இருங்கள். இங்கேயும் இருங்கள். நான் கோயில் எழுப்புகிறேன்,” என்றான். அதை ஏற்று சிவன் அத்தலத்தில் தங்கினார்.
சிறப்பம்சம்: நவக்கிரகங்கள் இங்கு நேர் வரிசையில் உள்ளன. காசியைப் போல இங்கும் எட்டு பைரவர்கள் உள்ளனர். இவர்களில் நான்கு பேர் சிலை வடிவிலும், நான்கு பேர் தண்டம் என்னும் ஆயுத வடிவிலும் காட்சியளிக்கின்றனர். மூலவர் பெயர் வாய்மூர்நாதர்.
அவருடன் அம்பிகை, ''பாலினும் நன்மொழியாள்'' அருள்பாலிக்கிறார்.
எப்படி செல்வது: திருவாரூர்- வேதாரண்யம் சாலையில் 25 கி.மீ.,
நேரம்: காலை 7:30 - 12:00 மணி; மாலை 5:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 97862 44876

