
பெருமாள் நின்ற, அமர்ந்த, கிடந்த கோலத்தில் காட்சி தருவார். அவருடைய அவதாரங்களில் ஒன்றான நரசிம்மரும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றை தரிசிப்போம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது நரசப்புரம். புரம் என்ற சொல்லுக்கு காத்தல் என பொருள். ஒரு சமயம் இந்த ஊருக்கு திருட வந்தவர்களை மரத்தை பிடுங்கி அடித்து விரட்டினார் இங்கு குடி கொண்டுள்ள நரசிம்மர். அதனால் இப்பகுதிக்கு நரசப்புரம் என பெயர் வந்தது. அம்மரத்தை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
பஞ்சு வியாபாரி ஒருவரிடம் இப்பகுதியில் ஓடும் பார்கவி ஆற்றில் சிலையாக கிடந்த நரசிம்மர், ''என்னை எடுத்து வழிபாடு செய்'' என அசிரீரியாக சொன்னார். நான் எப்படி உன்னை துாக்கி செல்வேன் என நரசிம்மரிடம் அவர் கேட்க, ''பஞ்சு மூட்டை போல் இருப்பேன்'' என வாக்களித்தார்.
அதன்படி சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். பிறகு பிரகாரத்துடன் கோயில் எழுப்பபட்டது. அபய வரத கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் நின்ற கோல நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம்.
பிரச்னைகளுக்கு சுவாமியிடம் பூ போட்டு கேட்கும் வழக்கம் இங்கு உள்ளதால், இவரை 'சம்மதம் தரும் நரசிம்மர்' என்கின்றனர்.
சுவாமியின் உக்கிரத்தை தணிக்கும் வகையில் அவரது இடப்புறத்தில் மஹாலட்சுமி தாயார் உள்ளார். சன்னதி எதிரே கருடாழ்வார், கருடத்தம்பத்தை காணலாம்.
எப்படி செல்வது: ஓசூரில் இருந்து 22 கி,மீ.,
விசேஷ நாள்: சுவாதி நட்சத்திரம் சனிக்கிழமை, நரசிம்மர் ஜெயந்தி வைகுண்ட ஏகாதசி.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி: மாலை 4:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 94864 67520
அருகிலுள்ள தலம்: அத்திமுகம் அழகேஸ்வரர் கோயில் 7 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி: மாலை 4:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 97866 43137

