
கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் மகான்களையும், மக்கள் தெய்வமாக வணங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் கரணி மாதா. துர்க்கையின் அவதாரமான அவர் கோயில் கொண்டிருப்பது, ராஜஸ்தான், பீகானேர் மாவட்டத்திலுள்ள தேஷ்னோக் கிராமத்தில். இங்கே எலி வழிபாடு பிரதானம்.
தல வரலாறு: 'சரண்' என்னும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் கரணி மாதா. இவர் 1387ல், ஜோத்பூர் அருகிலுள்ள கிராமத்தில் வசித்த தம்பதிக்கு, ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் ஆண் வாரிசை விரும்பினர். ஆறாம் முறையாக, கரணியின் தாய் கர்ப்பமானார். கரணி பிறப்பதற்கு முன்தினம், அவரது தந்தையின் கனவில் துர்க்கை தோன்றினாள். ''உனக்கு ஆறாவதும் பெண்குழந்தையே பிறக்கும். அது எனது அம்சமாக இருக்கும்,'' என்றாள். அந்தப் பெண் குழந்தை, சிறு வயதிலேயே அற்புதங்களை செய்ததால், 'கரணி' என்று பெயர் இட்டனர். கரணிக்கு ஐந்து வயதான போது, அவரது தந்தையை நாகம் தீண்டியது. பாம்பு கடித்த இடத்தை கைகளால் தடவி, விஷத்தை வெளியே எடுத்தார். பல இடங்களில் தரிசு நிலங்களை செழிப்புடைய தாக்கினார். ஒரு கிராமத்தில் கொள்ளையர்கள் வந்து அட்டகாசம் செய்த போது, அங்கு போர் கோலத்தில் சிம்மத்துடன் தோன்றி அவர்களை அழித்தார். இவருக்கு 29 வயதில் திருமணமும் நடந்தது. மணமகனை இவரே அடையாளம் காட்டினார். கணவர் பெயர் தேபா. திருமண ஊர்வலம் நடந்த போது, நீர் அருந்துவதற்காக ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது மாப்பிள்ளை, இவர் இருந்த பல்லக்கின் திரையை நீக்கி பார்த்தார். உள்ளே சிம்ம ஸ்வரூபிணியாக துர்க்கையாக தெரிந்தார். கணவரிடம் தன் அவதார நோக்கத்தை கூறி தன், தங்கையை அவருக்கு இல்லறத் துணையாக்கினார். பல ஊர்களிலும் சஞ்சாரம் செய்து, அதிசயங்கள் நிகழ்த்தி, தேஷ்நோக் என்ற வனப் பகுதியை அடைந்தார். அங்குள்ள குகையில் எழுந்தருளி மக்களுக்கு அருள்புரிந்தார். கரணிமாதா, 151 ஆண்டுகள் வாழ்ந்து, 1538ல், ஜோதி ரூபமாக வானில் கலந்தார். அதற்கு முன், பார்வையற்ற ஒருவனுக்கு பார்வை தந்து, தன் உருவத்தை பொறிக்கச் செய்தார்.
பெயர்க்காரணம்: கரணி மாதாவுக்கு அரச வம்சத்தினரிடம் தொடர்புண்டு. ஜோத்பூரை ஆண்ட, ராவ் ஜோதா என்பவன் மற்றொரு ரஜபுத்திரனால் விரட்டப்பட்டு இவரிடம் தஞ்சம் புகுந்தான். 10 ஆண்டுகள் இவருக்கு சேவை புரிந்து, அவர் சொன்ன சமயத்தில் எதிரியைத் தாக்கி தன் ராஜ்யத்தை மீட்டான். அதுவே ஜோத்பூர் என்று பெயர் பெற்றது. அவனது மகன் 'ராவ் பீகா' மாதாவின் ஆலோசனைப்படி ஒரு அழகிய நகரை நிர்மாணித்தான். அதுவே 'பீகாநேர்' ஆனது.
எலிகள் ஏன்?: ஒரு சமயம் கரணிமாதாவின் வளர்ப்பு மகன், கொலயட் என்ற ஊரில் நடந்த திருவிழாவின் போது, குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கி இறந்தான் . கரணி அவன் உடலுடன், ஒரு குடிசைக்குள் சென்று தாழிட்டு கொண்டார். எமனிடம் அவனது உயிரைத் திருப்பித்தரக் கேட்டார். அவன் மறுக்கவே, தன் சக்தியால் அவனை உயிர்ப்பித்தார். தன் சந்ததியினர், எவரும் இறந்த பின், உயிர் எமனிடம் போகாது என்றும், அது எலியாக மாறி, பின் மனித ஜென்மம் எடுக்கும் என்று அறிவித்தார். ''இங்கு ஒரு எலி இறந்தால், அங்குள்ள பழங்குடி இனத்தில் ஒரு உயிர் ஜனிக்கிறது. இது ஒரு அதிசயம்,'' என்கிறார் கோயில் அர்ச்சகர் . அம்பாள் முன்னால் உள்ள பெரிய தட்டிலுள்ள லட்டு மற்றும் பாலை எலிகள் ருசிக்கின்றன.
இங்கு இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எலிகள் உள்ளன. எல்லாம் ஒரே அளவாக இருப்பது அதிசயம். குட்டி எலிகளை (சுண்டெலி) யாரும் கண்டதில்லை. இது புரியாத புதிராகவே உள்ளது.
சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றி அவைகள் கவலைப்படுவதும் இல்லை. வெளியே ஓடுவதும் இல்லை. பறவைகளிடமிருந்து இவற்றுக்கு பாதுகாப்பு கருதி, மேலே வலை போட்டுள்ளனர். நான்கைந்து மட்டுமே வெள்ளைஎலிகள். அவை கண்ணில் பட்டால் பாக்கியம் என்கிறார்கள். ஏனென்றால், கரணி மாதாவே அந்த உருவத்தில் உலவுவதாக நம்புகிறார்கள். தின்பண்டங்கள், எலிகளுக்கு படைக்கப்பட்ட பின்புதான், மற்றவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த எலிகளை 'காபாக்கள்' என்கின்றனர்.
அம்பாள் அமைப்பு: அம்பாள் சிலை ஜெய்சல்மர் மற்றும் ஜோத்பூரில் கிடைக்கும் சிவப்பு கல்லில் செதுக்கப்பட்டிக்கிறது. தலையில் மகுடம், வலது கையில் சூலம், இடது கையில் கபாலம் உள்ளது. சிம்மத்தில் அம்பாள் அமர்ந்திருக்கிறாள். விக்ரகம் குங்குமத்தால்
மூடப்பட்டிருக்கிறது. மடப்பள்ளியிலுள்ள பெரிய ராட்சத கொப்பரைகளில் தான், கோவில் திருவிழாக்கள் நடக்கும் போது, 14000 கிலோ கோதுமையில் அல்வா செய்து எலிகளுக்கு படைக்கப்பட்டு, பிரசாதமாக தரப்படுகிறது.
இருப்பிடம்: பீகானேர் நகரில் இருந்து 30 கி.மீ., தூரத்திலுள்ளது தேஷ்னோக் எலிக்கோயில்.

