ADDED : மார் 09, 2018 11:41 AM

பூமிதேவியை அசுரனிடம் இருந்து மீட்ட பெருமாள், கடலுார் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராகபெருமாளாக அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் வாகன பயணம் இனிதாக அமையும்.
தல வரலாறு
பூமாதேவியை கடத்தி சென்று, பாதாள உலகில் மறைத்து வைத்தான் அசுரன் இரண்யாட்சன். இதை கண்டு வெகுண்ட பெருமாள், ஒற்றை கொம்புள்ள பன்றியாக உருவெடுத்து குடைந்து சென்று, இரண்யாட்சனை கொன்றார்.
பூமாதேவியை தனது கொம்பில் சுமந்து வந்து, முன்பிருந்த நிலையில் நிலைநிறுத்தினார். அதன் பின் பூலோகத்தில், ஸ்ரீமுஷ்ணம் என்னும் தலத்தை இருப்பிடமாக்கி, 'பூவராகப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் அருள்புரிய தொடங்கினார். 'பூ' என்றால் பூமி. 'வராகன்' என்றால் பன்றி முகம் உள்ளவர். மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தரும் இவரது முகம் மட்டும் தெற்கு நோக்கி உள்ளது.
இத்தலத்தில் அசுரனை வென்ற பெருமிதத்துடன், கைகளை இடுப்பில் வைத்து, முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக நிற்கிறார் பூவராகபெருமாள். தாயாரின் பெயர் அம்புஜவல்லித்தாயார். இங்குள்ள குழந்தையம்மன் சன்னதியில் அம்புஜவல்லி தாயாரின் தோழிகள் காட்சியளிக்கின்றனர். இங்கு உற்ஸவர் 'யக்ஞ வராகமூர்த்தி' எனப்படுகிறார். அவருடன் ஸ்ரீ தேவி, பூ தேவியர் மற்றும் ஆதிவராக மூர்த்தியும், கண்ணனும் எழுந்தருளிஉள்ளனர். விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது. இங்கு தீர்த்தம் 'நித்ய புஷ்கரணி' எனப்படுகிறது. சாளக்கிராம கல்லினால் ஆன சுயம்பு மூர்த்தியாக எட்டுத்தலங்களில் அருள் பாலிக்கிறார் பெருமாள். அவை ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாச்ரமம், ஸ்ரீமுஷ்ணம்.
வாகனம் படைத்தல்
இவரை வணங்குவோருக்கு வாக்கு வன்மை, செல்வம், மக்கட்பேறு, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் உண்டாகும். குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்பட்ட தோஷம் விலகும். வாகனம் வாங்குவோர் இங்கு அர்ச்சனை செய்ய விபத்து இல்லாத பயணம் உண்டாகும்.
எப்படி செல்வது: விருத்தாசலத்தில் இருந்து 24 கி.மீ., சிதம்பரத்தில் இருந்து 35 கி.மீ.,
விசேஷ நாட்கள்: சித்திரை ரேவதி நட்சத்திரத்தன்று பூவராக ஜெயந்தி, தமிழ் மாத பிறப்பன்று நரசிம்மர் புறப்பாடு, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94431 81679, 90920 16027
அருகிலுள்ள தலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில்