
பிரகலாதனை காக்க அவதரித்த விஷ்ணு, மைசூரு விஜய் நகரில் யோக நரசிம்மர் என்னும் பெயரில் கோயில் கொண்டிருக்கிறார். கால் கட்டை விரலில் அதர்வண வேதத்தை தாங்கி நிற்கும் இவரை, அமாவாசையன்று தரிசிக்க எதிரி பயம் நீங்கும்.
தல வரலாறு: அசுரனான இரண்யனின் மகன் பிரகலாதன். தாயின் வயிற்றில் கருவாக இருந்த போதே, நாரதர் உபதேசத்தால் விஷ்ணு பக்தனாக விளங்கினான். அசுரகுல குருவான சுக்ராச்சாரியாரிடம் மகனை பாடம் கற்க அனுப்பினான் இரண்யன். அங்குள்ள மாணவர்களுக்கு, நாராயண மந்திரம் உபதேசம் செய்த பிரகலாதன் அவர்களை பக்தர்களாக மாற்றினான்.
'அசுரனான தனக்கு இப்படி ஒரு குழந்தையா?' என கோபித்த இரண்யன், மகனைக் கொல்லத் துணிந்தான். மலையில் இருந்து உருட்டினான். யானையை அனுப்பிமிதிக்கச்செய்தான். விஷம் கொடுத்தான். எதுவும்பலன்தரவில்லை. கடைசியாக பிரகலாதனிடம், “எங்கே உன் ஹரி?” என்று ஆவேசமாக கத்தினான். 'அவன் துாணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்,' என்றான் பிரகலாதன். அவரது வாக்கை காப்பாற்ற, விஷ்ணு துாணைப் பிளந்தபடி நரசிம்மராக தோன்றி, இரண்யனை கொன்றார். அவரே இத்தலத்தில் மூலவர் யோக நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.
கட்டைவிரலில் வேதம்: சாளகிராமம் என்னும் கல்லினால் ஆன யோக நரசிம்மர், குத்துக் காலிட்டு, அதில் கைகளை தொங்கவிட்டபடி யோக நிலையில் காட்சி தருகிறார். கைகளில் சங்கு, சக்கரம் தாங்கியுள்ளார். கால்களில் யோகப்பட்டை குறுக்காக செல்கிறது. லட்சுமி தாயார் மார்பில் இருக்கிறாள். இவரது கால் கட்டைவிரலில் அதர்வண வேதம் அடங்கி இருப்பதால், வழிபடுவோருக்கு தீயசக்திகள் நெருங்காது.
அமாவாசை அபிஷேகம்: ஆண்டுதோறும் மே 25ல் யோகநரசிம்மர்சிலைக்கு லட்சார்ச்சனையும், 26ல் சகஸ்ர கலசாபிஷேகமும், 27ல் சுதர்சன ஹோமமும் நடக்கிறது. அமாவாசை இரவு 12:00 மணிவரை விசேஷ பூஜை உண்டு. 300 லிட்டர் பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. எதிரி தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி கிடைக்கவும் இங்கு வழிபடுகின்றனர்.
வித்தியாசமான சுதர்சனர்: சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வார் சன்னதி இங்குள்ளது. வழக்கமாக பதினாறு கைகளோடு காட்சி தரும் இவர், இங்கு அஷ்டபுஜ சுதர்சனராக எட்டு கைகளுடன் இருக்கிறார். சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் உள்ள யோக நரசிம்மர் இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உற்சவர் சீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கல்யாணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
எப்படி செல்வது: மைசூரு - மங்களூரு மெயின் ரோட்டில் 4கி.மீ.,
விசஷே நாட்கள்: நரசிம்ம ஜெயந்தி, சுதர்சன ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மாத அமாவாசை
நேரம்: காலை 6:00 - மதியம் 1:30 மணி; மாலை 5:30 - இரவு 10:00 மணி
அருகிலுள்ள தலம்: 4 கி.மீ.,ல் அரண்மனை பிரசன்ன கிருஷ்ணசுவாமி கோயில்