
குன்று இருக்கும் இடம் எங்கும் குமரன் குடியிருப்பான் என்பார்கள். இதற்கு ஏற்ப டில்லியில் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மலையில் குடிகொண்டுள்ளார் முருகன். உத்தர சுவாமி மலை என அழைக்கப்படும் இத்தலத்தில் சுவாமிநாதன் என்ற பெயரில் அருள்புரிகிறார். இதை 'மலை மந்திர்' என்றும் சொல்கிறார்கள்.
சுதந்திரத்திற்கு முன் இங்கு குடியேறிய பக்தர்கள் சுவாமிநாத சுவாமியின் மரச்சிலையை பூஜித்து வந்தனர். பக்தர் ஒருவரது கனவில் தோன்றிய முருகன் தான் இந்த மலையில் குடியிருப்பதாக தெரிவித்தார். பின் 'சுவாமிநாத சுவாமி சமாஜம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி கோயில் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக காஞ்சி மஹாபெரியவரிடம் ஆசி பெற வந்தனர். அப்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களிடம், '60 ஆண்டுக்கு முன்பு செந்திலாண்டவர் சிலை வடிக்க, தாமிரபரணி படுகையான குறுக்குத்துறையில் (திருநெல்வேலி) கல் எடுக்கப்பட்டது. அதன் எஞ்சிய பாகம் இப்போதும் புதைந்து கிடக்கும். அதை பயன்படுத்துங்கள்' என்றார் மஹாபெரியவர்.
ஆனால் அவர்களுக்கோ சிலையை எப்படி கண்டுபிடிப்பது என்ற தயக்கம். இதற்கும் தீர்வு வழங்கினார் மஹாபெரியவர். 'நெல்லையப்பர் கோயிலில் பணிபுரிந்த சுந்தர தீட்சிதரை அணுகுங்கள். செந்திலாண்டவன் சிலைக்காக கல் எடுத்த காலத்தில் அவர் அங்கு பணிபுரிந்தவர்' என தெரிவித்தார். அதன்படி செய்து சிலையும் வடிக்கப்பட்டது.
மகிழ்ந்த மஹாபெரியவர் இச்சிலைக்கு தன் கைகளாலேயே விபூதி அபிேஷகம் செய்தார். இப்படி உருவானதுதான் இக்கோயில். மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சன்னதி உள்ளது. மூலவரான சுவாமிநாதன் மீது குறிப்பிட்ட நாளில் சூரியனின் கதிர்கள் படுகின்றன. அப்போது சிறப்பு பூஜையும் நடக்கிறது. விநாயகர், மீனாட்சி, சுந்தரேசர், இடும்பன், நவக்கிரகத்திற்கு சன்னதிகளும், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடமும் உள்ளன.
குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கைக்கு செவ்வாய், வெள்ளியன்று நடக்கும் ராகு பூஜையில் பலரும் கலந்து கொள்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் நுழைவாயிலில் இருந்து மலை உச்சிவரை ஏற்றப்படும் தீபங்களால் மலையே ஒளிரும்.
எப்படி செல்வது: வசந்த் விஹார் மெட்ரோ நிலையத்தில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாள்: கந்தசஷ்டி, திருக்கார்த்திகை.
நேரம்: காலை 6:30 - 11:00 மணி; மாலை 5:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 011 - 2617 5104
அருகிலுள்ள கோயில்: ஸ்ரீதேவி காமாட்சி மந்திர் 3.5 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)
நேரம்: காலை 7:00 - 11:30 மணி; மாலை 5:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 011 - 2686 7240, 2652 0202