ADDED : அக் 29, 2024 12:34 PM

'வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார்' என்பார்கள். விடாமுயற்சி இருந்தால் மட்டுமே இந்த இரண்டு விஷயமும் நடக்கும் என்றாலும் கல்யாணத்தைப் பொறுத்தவரை அழகு, வசதி, படிப்பு, அந்தஸ்து என பொண்ணும் மாப்பிள்ளையும் பொருத்தம் பார்ப்பதில் காலம் கரைந்து விடும். அப்படிப்பட்ட சூழலில் தவிப்பவர்களை கரை சேர்க்க காத்திருக்கிறார் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கல்யாண முருகன்.
சிறிய குன்றில் சின்னதொரு கோயில். சின்னஞ்சிறு படிகள் ஏறி முருகனின் சன்னதிக்கு செல்லும் வழியெங்கும் பச்சை பசேல் என புல்வெளிகள். இதைக் கடந்து சென்றால் வண்ண வண்ண மலர் பந்தலுக்கு கீழ் முருகன் வள்ளி தெய்வானையுடன் மேற்கு நோக்கி அருள்புரிகிறார்.
கல்யாணம் ஆகாதவர்கள் தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமை இவரை தரிசிக்க வர வேண்டும். சுவாமிக்கு மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை முடிந்ததும் சுவாமியின் கழுத்தில் அணிவித்த மாலையை அர்ச்சகர் கொடுப்பார். அதை கல்யாணம் ஆகாதவர்கள் அணிந்தால் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம் விலகும்; மனதுக்கு இனிய வாழ்க்கைத்துணை கிடைக்கும். அது மட்டுமல்ல. மனப்பிரச்னையால் பிரிந்த தம்பதியர் தரிசித்தால் ஒற்றுமை ஏற்படும். இல்லத்தில் சுபவிஷயங்கள் இனிதே நடந்தேறும்.
லட்சுமணர் சீதாதேவியோடு கல்யாண ராமரும், சந்தோஷி மாதா சன்னதிகள் இங்குள்ளன. வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் நாளில் நினைத்தது நிறைவேற பால்குடம் எடுக்கின்றனர். கந்தசஷ்டி ஆறுநாளும் சிறப்பு பூஜை நடக்கிறது. மனநலம், உடல்நலம் சிறக்க பவுர்ணமியன்று கிரிவலம் வருகின்றனர்.
எப்படி செல்வது: செங்கல்பட்டில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் வழியாக 15 கி.மீ.,
விசேஷ நாள்: கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மாசிமகம்.
நேரம்: காலை 6:30 - 10:00 மணி; மாலை 4:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 98407 30623
அருகிலுள்ள கோயில்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் 28 கி.மீ., (மனநலம் சிறக்க...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94428 11149