ADDED : அக் 16, 2025 01:57 PM

கிருஷ்ணரை பல கோலங்களில் தரிசித்திருப்போம். அவரது அம்மா தேவகி தன் இடுப்பில் துாக்கி வைத்திருக்கும் கோலத்தை பார்த்ததுண்டா... ஆசை இருந்தால் கோவா மாநிலம் மார்செல்லுக்கு வாருங்கள்.
கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகி. அவளுக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது, 'கம்சா! உன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னை கொல்வான்' என அசரீரி ஒலித்தது.
கம்சன் மணமக்களை சிறையில் அடைத்தான். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை எல்லாம் கொன்றான். எட்டாவதாக கிருஷ்ணர் அவதரித்தார். அப்போது சிறையின் கதவுகள் தானாக திறந்தன. கூடை ஒன்றில் குழந்தையை சுமந்து கொண்டு ஆயர்பாடி நோக்கிப் புறப்பட்டார் வசுதேவர். யமுனை நதி வழிவிட்டது. யசோதை, நந்தகோபர் தம்பதியிடம் கிருஷ்ணரை ஒப்படைத்தார். அவர்களுக்குப் பிறந்த 'மாயா' என்னும் பெண் குழந்தையை எடுத்து வந்தார்.
தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததாக கம்சனிடம் தெரிவித்தார். வழக்கம்போல் அவன் குழந்தையின் கால்களை பிடித்து சுழற்றி எறிந்தான். அக்குழந்தை துர்கையாக காட்சியளித்து, “அடே மூடனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் ஆயர்பாடியில் வளர்கிறான்'' என எச்சரித்து மறைந்தாள்.
அதன்படியே கிருஷ்ணரால் அசுரன் கொல்லப்பட்டான். பின் தேவகியும், வசுதேவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். இவர்களை பார்க்க மாய கிருஷ்ணன் குழந்தையாக மாறி ஓடி வந்தான். மகிழ்ச்சியில் தேவகி அவனை துாக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். இக்கோலமே இங்கு மூலவர்.
இயற்கை அழகும் பசுமையும் நிரம்பிய பகுதி மார்செல். இங்கு 1842ல் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டது. முதலில் இச்சிலை திஸ்வாதி நகரத்தில் சோடன் என்ற இடத்தில் வணங்கப்பட்டு வந்தது. போர்த்துகீசியர்களின் நெருக்கடியால் அங்கிருந்து மேயரன்னுக்கும், கடைசியாக இங்கும் கொண்டு வரப்பட்டது.
10 படிகள் ஏறினால் போர்டிகோ போன்ற முன் பகுதியை அடையலாம். அங்கு உயரமான துாண்கள் கூரையை தாங்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. கூரையில் மர வேலைப்பாடுகளால் ஆன தசாவதார சிற்பங்கள் அழகாக உள்ளன. அதைக் கடந்தால் கருவறை நுழைவு வாசலுக்கு மேலே குருேஷத்திர கிருஷ்ணன், அர்ஜூனன் கீதை உபதேசக் காட்சியை பார்க்கலாம்.
கருவறையில் தேவகி குஜராத்திய பாணியில் அலங்கரிக்கப்பட்டு, இடுப்பில் கிருஷ்ணனை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் அழகாக உள்ளார். இதழில் புன்சிரிப்பு தவழ்கிறது. இச்சிலைக்கு கீழே ஒரு அடி உயரம் கொண்ட கிருஷ்ணர் உள்ளார். கருவறையின் கதவு வெள்ளியால் ஆனது. லட்சுமி, பூமாதேவி சன்னதிகளும் உள்ளன.
உச்சிவேளையில் ஆரத்திக்கு பிறகு பிரசாதம் தரப்படும். இங்கு ஆனி மாத வளர்பிறை ஏகாதசியன்று 'சிகல்கலோ' திருவிழா நடக்கிறது. இதன் பொருள் சேற்றில் விளையாடுதல். பக்தர்கள் செயற்கையாக உருவாக்கப்பட்ட சேற்றில் விளையாடி கிருஷ்ணரை வழிபடுகிறார்கள்.
எப்படி செல்வது
* பனாஜியில் இருந்து 10 கி.மீ.,
* மாபுசாவில் இருந்து 14 கி.மீ.,
விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி கோவர்த்தன பூஜா.
நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 95275 75141
அருகிலுள்ள கோயில்: பட்கி மண்டோதரா 5 கி.மீ., (முன்வினைப் பாவம் தீர...)
நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 94002 76073