
ராகு கேது பெயர்ச்சியால் நன்மையா... தீமையா... என்ற குழப்பம் வேண்டாம். நாகர்கள் வழிபாடு செய்த சிவன் கோயில்களை தரிசித்தால் எல்லா நலன்களையும் பெறலாம்.
களத்திர தோஷமா...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - தேவிகாபுரம் சாலையில் உள்ள தலம் தச்சூர். இங்குள்ள பிச்சீஸ்வரரை பிச்சிப்பூவால் அர்ச்சனை செய்தால் களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம் விலகும். முன்பு ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகாபதுமன் என்னும் எட்டு நாகர்களும் தவம் புரிந்து இங்குள்ள சிவனை வழிபட்டனர். மனமிரங்கிய சிவன் பாவத்தை போக்கியதோடு நாகலோகம் என்னும் தனி உலகத்தை அமைத்துக் கொடுத்தார். அன்று முதல் யார் கண்ணுக்கும் தெரியாதபடி இங்கு சிவனை வழிபட்டு வருகின்றனர். அகப்பேய் சித்தர் இங்கு தங்கி வழிபட்டுள்ளார்.
சர்ப்ப தோஷம் தீர...
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் உள்ளது திருவாள் ஒளிபுத்துார்.
தேவாரப் பாடல் பெற்ற இத்தல சிவனுக்கு மாதுளை அபிஷேகம் செய்ய சர்ப்ப தோஷம் தீரும்.
முன்பு தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற பாற்கடலை கடைந்தனர். அப்போது வடவரை மலை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பு அதைக் கட்டும் கயிறாகவும் பயன்படுத்தப்பட்டது. கடைந்த போது வலி தாங்க முடியாமல் வாசுகி விஷம் கக்கியது.
அந்த பாவம் தீர தன்னுள் இருந்த மாணிக்கத்தை இங்குள்ள சிவனுக்கு சமர்ப்பித்து விமோசனம் பெற்றது. இதனால் சிவன் மாணிக்கவண்ணர் என்றும், அம்மன் வண்டமர் குழலி என்றும் பெயர் பெற்றனர்.
அர்ஜூனனின் தாகம் தீர்ப்பதற்காக முதியவர் வடிவில் வந்தார் சிவன். அப்போது அவனுடைய வாளை புற்றில் ஒளித்து வைத்து பின்பு காட்டிக் கொடுத்தார். அதனால் 'திருவாள் ஒளிபுத்துார்' என இத்தலம் பெயர் பெற்றது. மகிஷனை வதம் செய்த துர்கை இங்கு சிவனை வழிபாடு செய்தாள்.
திருமணத்தடை விலக...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி - நமணசமுத்திரம் சாலையில் உள்ளது பேரையூர் நாகநாதசுவாமி கோயில். இங்கு நாகபிரதிஷ்டை செய்தால் திருமணம், குழந்தைப்பேறு கிடைக்கும்.
நாக கன்னியை மணம் புரிய விரும்பினார் மன்னர் சாலேந்திரன். அதற்காக அவரை குமுதன் என்னும் நாகமாக பிறக்கச் செய்து திருமணமும் செய்து வைத்தார் சிவன்.
அதற்கு நன்றி சொல்லும் விதமாக நாககன்னியும், குமுதனும் இங்குள்ள சுனையில் நீராடி வழிபட்டனர். அப்போது தேவலோக வாத்தியங்கள் முழங்க சிவனும் அவர்களுக்கு காட்சியளித்தார்.
பங்குனி மாதத்தில் இன்றும் இந்த வாத்திய ஒலியைக் கேட்கலாம். சுவாமியின் திருநாமம் நாகநாதர். அம்மன் திருநாமம் பிரகாதாம்பாள். தீர்த்தம் சிவகங்கை. கோயிலின் மதிற்சுவர், பிரகாரம் என எல்லா இடங்களிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகர்களை பார்க்கலாம். காளஹஸ்திக்கு இணையான இக்கோயிலை சுவகேது என்னும் மன்னர் கட்டினார்.
நல்லா பேசணுமா...
நல்லா பேசணும்... நல்லதையே பேசணும் என நினைக்கிறீர்களா... ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள நயினார் கோவிலுக்கு வாருங்கள்.
முல்லா சாகிப் என்பவர் தன் மகளுக்கு பேச்சு வரவில்லையே... என ராமேஸ்வரம் ராமநாதசுவாமியிடம் வேண்டியபடி இப்பகுதியில் போய் கொண்டிருந்தார். மரங்கள் நிறைந்த இப்பகுதியில் சுயம்பு சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்ட மகள், 'நயினார்' எனக் கத்தினாள். நயினார் என்பதற்கு 'தலைவர்' எனப் பொருள். அன்று முதல் இப்பகுதிக்கு 'நயினார் கோவில்' எனப் பெயர் வந்தது.
சுவாமியின் திருநாமம் நாகநாத சுவாமி. அம்மன் திருநாமம் சவுந்திர நாயகி. விஸ்வாமித்திரரின் சாபத்தால் வேடர்களாக அலைந்த வசிஷ்டரின் மகன்கள் இங்கு விமோசனம் கிடைக்கப் பெற்றனர். இங்குள்ள புற்றுமண் பிரசாதத்தை பூசினால் பேசும் ஆற்றல் அதிகரிக்கும். முகப்பரு, கருவளையத்தில் பூசினால் முகப்பொலிவு ஏற்படும்.
காளசர்ப்ப தோஷமா...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள பாமணி நாகநாதரை வழிபட்டால் காளசர்ப்ப தோஷம் விலகும். வாயுபகவானிடம் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆதிசேஷன், பாதாள உலகத்தை அடைந்தார். மீண்டும் வலிமை பெற இங்கு சிவபெருமானை வழிபட்டார். இவருக்கு 'பாதாள ஈஸ்வரர்' என்றும் பெயருண்டு.
சுயம்புத் திருமேனியான சுவாமி மீது பாம்புகள் அடிக்கடி ஊர்ந்து செல்வதாலும், சிவனின் அணிகலனாக பாம்பு இருப்பதாலும் இவ்வூருக்கு பாம்பணி எனப் பெயர் வந்தது. அதுவே நாளடைவில் பாமணி என மருவியது.
சுவாமியின் திருநாமம் நாகநாதர், அம்மனின் திருநாமம் அமிர்தநாயகி. மனித முகமும், பாம்பு உடலும் கொண்ட தனஞ்சய முனிவர் இங்கு வழிபட்டு வரம் பெற்றார். ஆண்டுதோறும் ஐப்பசி முதல் நாளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தேவாரப் பாடல் பெற்ற இங்கு காளசர்ப்ப தோஷம் தீரவும், திருமணத்தடை விலகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
பிரிந்தவர் சேர...
பிரிந்த தம்பதி சேரவும், குடும்ப உறவுகளிடம் பகை தீரவும் கும்பகோணம் திருநாகேஸ்வரம் கோயிலில் தரிசித்தால் உடனடியாக பலன் கிடைக்கும். தட்சகன் என்னும் பாம்பு தீண்டியதால் சுசீல முனிவரின் மகன் இறந்தான்.
அந்த பாம்பை மனிதனாக பிறக்கும்படி சபித்தார் முனிவர். பாம்பு காஷ்யபரிடம் உதவி கேட்க, அவர் செண்பக வனமான இங்கு சிவனை பூஜிக்கச் சொன்னார். அதன்படியே விமோசனம் பெற்றது. இங்கு வழிபட்டால் ஜென்மப்பகை, சாபம் தீரும்.
சுவாமியின் பெயர் நாகநாதர், அம்மன் பெயர் கிரிகுஜாம்பாள். இவர்களை வழிபட்டு கணங்களின் அதிபதியாகும் பேறு பெற்றார் விநாயகர். தேவாரப் பாடல் பெற்ற இங்கு நந்தி, பராசரர், பகீரதன் வழிபட்டு பலன் பெற்றனர். மனைவியைப் பிரிந்த நளன் இங்கு வழிபாடு செய்ய தமயந்தியை அடைந்தார். பிரிந்தவர் சேர இது சிறந்த பரிகாரத் தலமாகும்.
மனக்குறை தீர...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணரை தரிசித்தால் மனக்குறை தீரும். குழப்பம் மறையும்.
முன்பு சங்கன், பத்மன் என்னும் நாக அரசர்களுக்குள் சிவபெருமான், மகாவிஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற கேள்வி எழுந்தது. குருபகவானின் ஆலோசனையின்படி கோமதியம்மன் தவம் செய்த இத்தலத்தில் தவம் செய்தனர். சிவனும், மகாவிஷ்ணுவும் இணைந்தபடி சங்கர நாராயணராக காணும் பேறு பெற்றனர். உக்கிர பாண்டியனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயிலில் சுவாமி சன்னதியில் உள்ள புற்றுமண், அம்மன் சன்னதியில் உள்ள ஸ்ரீசக்கரம் விசேஷமானவை. இங்கு நடக்கும் சித்திரை பிரம்மோற்ஸவம், ஆடித்தபசு விழா பிரபலமானவை.
ராகு, கேது, நாக தோஷம் உள்ளவர்கள் சங்கர நாராயணரை தரிசிக்க திருமணத்தடை விலகும்.
தோல் நோயா...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜர் கோயிலை தரிசித்தால் தோல் தொடர்பான நோய்கள், மனப்பிரச்னைகள் மறையும். முன்பு வயல்வெளியான இங்கு நெற்கதிர்களை அறுவடை செய்தாள்.
ஒரு பெண். அப்போது குறிப்பிட்ட இடத்தில் ரத்தம் கசியவே அருகில் இருந்த கூலியாட்களிடம் தெரிவித்தாள். அந்த இடத்தை தோண்டிய போது, ஐந்துதலை நாகர் சிலை புதைந்திருந்தது. பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அன்று முதல் சுவாமியை வழிபடுவோரின் குறை எல்லாம் தீர்ந்தன.
களக்காட்டுப் பகுதியை ஆட்சி செய்த மன்னர் மார்த்தாண்ட வர்மா இங்கு வழிபட்டு தோல் நோய் நீங்கப் பெற்றார். அவரே இங்கு திருப்பணிகள் செய்தார். அதன்பின் 'நாகர்கோவில்' என இப்பகுதி பெயர் பெற்றது.
மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரம், ஆவணி மாதத்தில் நாகராஜாவுக்கு அபிேஷகம் செய்தால் தோல் உள்ளிட்ட எல்லா நோய்களும் மறையும்.
-தொடரும்
ஜெ.விஜயராகவன்
80560 41076