
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வேலை கிடைக்க, திருமணம் நடக்க, குழந்தைப் பேறுக்கு, புகழ் கிடைக்க குரு பகவானின் அருள் வேண்டும். வாசகர்கள் அவரது அருளைப் பெறும் வகையில் இங்கு குரு கோயில்கள் இடம் பெற்றுள்ளன.
அழகாக இருக்க...
காஞ்சிபுரம் பேரம்பாக்கத்தின் அருகிலுள்ள தலம் இலம்பையங்கோட்டூர். இங்குள்ள சிவனை தரிசித்தால் அழகு, ஆரோக்கியம் உண்டாகும். திரிபுர அசுரர்களுடன் போரிட தேரில் புறப்பட்டார் சிவபெருமான். செல்லும் வழியில் தேரின் அச்சு முறியவே, சிவன் அணிந்திருந்த கொன்றை மாலை நழுவி விழுந்தது. அந்த இடத்தில் சுயம்பு லிங்கம் ஒன்று தோன்றியது. அவரே இக்கோயிலில் 'தெய்வ நாதேஸ்வரர்' என்னும் பெயரில் குடி கொண்டிருக்கிறார். இவர் 'தீண்டாத் திருமேனி' என்பதால் அர்ச்சகர்கள் சுவாமியைத் தொடுவதில்லை.
தேவாரப் பாடல் பெற்ற இங்கு அரம்பையரான ரம்பா, ஊர்வசி, மேனகா வழிபட்டு நற்கதி பெற்றனர். அதனால் இத்தலம் 'அரம்பையம் கோட்டூர்' எனப்பட்டது. அதுவே காலப்போக்கில் இலம்பையங் கோட்டூர் என்றானது. தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் சின்முத்திரையை இதயத்திற்கு நேரே வைத்தபடியும், தன் பார்வையை கீழ் நோக்கிய படியும் ஞானகுருவாக இருக்கிறார். இங்கு வழிபடுவோருக்கு மறுபிறவி இல்லை என்கிறார் திருஞானசம்பந்தர்.
உண்மையை உணர...
கடலுார் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகில் உள்ளது பிரணவபுரம். இதன் மற்றொரு பெயர் ஓமாம்புலியூர். இங்கு வழிபடுவோருக்கு தடைகள் விலகும். எந்த விஷயத்திலும் 'உண்மையை' உணரும் சக்தி உண்டாகும். அம்பிகைக்கு பிரவணம் (ஓம்) என்னும் உண்மைப் பொருளை சிவபெருமான் இங்கு உபதேசம் செய்ததால் ஓமாம் என்பதும், புலிக்கால் முனிவர் வழிபட்டதால் புலியூர் என்பதும் இணைந்து ஓமாம் புலியூர் எனப் பெயர் ஏற்பட்டது.
இத்தல சிவனின் திருநாமம் வியாக்ரபுரீஸ்வரர். அம்மனின் திருநாமம் புஷ்ப லதாம்பிகை. சிவன் உபதேசித்த சமயத்தில் இங்கு வந்த முருகனை நந்திபகவான் தடுத்தார். அதையும் மீறி வண்டு வடிவெடுத்து முருகன் உபதேசத்தைக் கேட்டார். இக்கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதிக்கு இடையே தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலம் ரேவதி நட்சத்திரத்திற்கு உரியதாகும்.
வெற்றி பெற...
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் உள்ளது அகத்தீஸ்வரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் முயற்சி வெற்றி பெறும். அகத்திய முனிவர் பொதிகை மலைக்கு செல்லும் வழி எங்கும் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபாடு செய்தார். அத்தலங்களில் இதுவும் ஒன்று. சுவாமியின் பெயர் அகத்தீஸ்வரர். அம்மன் பெயர் தர்மசம்வர்த்தினி.
இங்கு தட்சிணாமூர்த்தி இருக்கும் பீடத்தின் அடியில் 12 ராசிகளும், அதன் மீது நந்தி பகவானும் உள்ளனர். சனகாதி முனிவர்களுக்கு பதிலாக அகத்தியர், கோரக்கர் உள்ளனர். விதானத்தில் விநாயகர் இருக்கிறார். இது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும்.
கிரக பெயர்ச்சியால் ஏற்படும் சிரமங்களை போக்க பக்தர்கள் வழிபடுகின்றனர். தினமும் குரு ேஹாரையில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. குருபரிகார தலமான இங்கு வழிபடுவோருக்கு குருவருளும், திருவருளும் கிடைக்கும்.
ஒற்றுமையாக வாழ...
தேனி மாவட்டம் கம்பம் சிவவிஷ்ணு கோயிலில் உள்ள குருபகவானை தரிசிப்பவர்கள் வேற்றுமை நீங்கி ஒற்றுமையாக வாழ்வர். முன்பு இப்பகுதியை ஆண்ட மன்னருக்கு சிவன், விஷ்ணுவுக்கு கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒருநாள் கனவில் கம்பம் ஒன்றை சுட்டிக் காட்டி அங்கு கோயில் கட்டுமாறு உத்தரவிட்டு இருவரும் மறைந்தனர்.
மன்னரால் கட்டப்பட்ட கோயிலே கம்பராயப் பெருமாளும், காசி விஸ்வநாதர் கோயிலுமாகும். சுவாமி கம்பத்தை அடையாளம் காட்டியதால் இத்தலம் கம்பம் எனப் பெயர் பெற்றது. விஸ்வநாதர் கோயிலில் தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. தட்சிணாமூர்த்திக்குரிய கல்லால மரம், காலுக்கு கீழே உள்ள முயலகன் இங்கு இல்லை. கையில் கமண்டலத்துடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, கமண்டல நீர் மூலம் மனத்தெளிவை வழங்கி தோஷம், குறைகளைப் போக்குகிறார். அஷ்டம குரு, அர்த்தாஷ்டம குரு, சஷ்டாஷ்க குரு போன்ற கோளாறுகளுக்கு பரிகார தலமாக இக்கோயில் உள்ளது.
-அடுத்த வாரம் முற்றும்
ஜெ.விஜயராகவன்
80560 41076