தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/ஹளபேடு சிவன்

ஹளபேடு சிவன்

ஹளபேடு சிவன்


ADDED : நவ 20, 2026 08:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹோய்சாள மன்னர்கள் கட்டிய கோயில்களில் கர்நாடக மாநிலம் ஹளபேடுவிலுள்ள ஹோய்சாளேஸ்வரர் கோயில் மிகப் பெரியது. சிவபெருமானுக்கு இக்கோயிலில் இரண்டு பிரதான சன்னதிகள் உள்ளன. அவை இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர், அவரது மனைவியின் பெயரால் அழைக்கப்படுகின்றன. பக்தர்கள் ராஜா சிவன், ராணி சிவன் என்கின்றனர்.

பகவான் கிருஷ்ணர் ஆட்சி புரிந்த துவாரகையைச் சேர்ந்தவர்கள் ஹோய்சாளர்கள். இவர்கள் சமண மதத்தை பின்பற்றினர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு மீண்டும் தாய்மதமான ஹிந்து மதத்தை ஏற்றனர். சிவன், மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நுாற்றாண்டில் ஹோய்சாளர்களின் தலைநகராக ஹளபேடு இருந்தது.

இங்கு ஒரு சிவன் கோயிலை எழுப்பி மூலவருக்கு தங்கள் வம்சத்தின் பெயரால் 'ஹோய்சாளேஸ்வரர்' எனப் பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டுமான பணி 1207ல் முடிந்தது. மன்னர் விஷ்ணுவர்த்தனின் அமைச்சர் கெட்டுமல்லா தலைமையில் இப்பணி நடந்தது.

கோயிலின் வாசலில் விநாயகர் கம்பீரமாக இருக்கிறார். மேல் இரு கைகளில் பாசம், அங்குசம் உள்ளன. வலதுகை அந்நியப் படையெடுப்பில் உடைக்கப்பட்டது. இடதுகையில் மோதகம் உள்ளது. விநாயகரின் கிரீடமும், யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடு மிக்கவை. கால்கள் இரண்டும் மடித்த நிலையில் உள்ளன. கழுத்தில் இருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே கிடக்கிறது. வெயிலுகந்த விநாயகராக இவர் வெட்டவெளியில் காட்சியளிக்கிறார்.

கோயிலில் இரண்டு பிரதான சன்னதிகள் உள்ளன. முதல் சன்னதியில் 'ஹோய்சாளேஸ்வரர்' என்ற பெயருடன் சிவன் இருக்கிறார். சன்னதி முன்புள்ள நவரங்க மண்டபம் கலைநயம் மிக்கது. ஹோய்சாள மன்னரான விஷ்ணுவர்த்தனின் மனைவி சாந்தளாதேவி பெயரால் 'சாந்தளேஸ்வரர்' சன்னதி உள்ளது. வடநாட்டுப் பாணியில் சுவாமி மீது தாராபாத்திரம் உள்ளது.

இரு சன்னதிக்கும் கிழக்கில் வாசல் இருந்தாலும், வடக்கு, தெற்காகவும் வாசல்கள் உள்ளன. கோயிலை ஒட்டியே அரண்மனை இருந்ததாகச் சொல்கின்றனர். சாந்தளேஸ்வரர் சன்னதியில் பிரசாதமாக தீர்த்தம் தரப்படுகிறது. இங்கு தான் உற்ஸவர் சிவன், பார்வதி உள்ளனர். மகாகாளர், நந்தி என்ற துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர். சாந்தளேஸ்வரர் முன்புள்ள துவாரபாலகர்கள் திரிசூலம், உடுக்கை ஏந்தி சிவனைப் போலவே காட்சி தருகின்றனர்.

ஹோய்சாளேஸ்வரர், சாந்தளேஸ்வரர் சன்னதிக்கு எதிரில் நந்தி மண்டபங்கள் உள்ளன. மண்டபத்தைச் சுற்றி கலைநயம் மிக்க துாண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல் நந்தி நடுவில் உள்ளது. இரண்டு நந்திகளும் பார்ப்பதற்கு ஒன்று போலவே உள்ளன.

பிரகார சுவர் முழுவதும் யானை, சிங்கம், குதிரைவீரர்கள், பூவிதழ் என அடுக்கடுக்காக சிற்பங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் தேரைப் போலவும், அதை

இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 120 கி.மீ., தொலைவில் ஹாசன். அங்கிருந்து 39 கி.மீ.,

விசேஷ நாள்: திருக்கார்த்திகையன்று தேர், மகாசிவராத்திரி, சனி பிரதோஷம்.

நேரம்: காலை 6:00 - மாலை 6:00 மணி

தொடர்புக்கு: 98803 19949

அருகிலுள்ள கோயில்: மைசூரு சாமுண்டீஸ்வரி 31 கி.மீ., (வெற்றி கிடைக்க...)

நேரம்: அதிகாலை 5:30 -- 1:30 மணி; மதியம் 3:30 - 5:30 மணி

தொடர்புக்கு: 0821 - 259 0127

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us