
சக்தி பீடங்களில் ஒன்றான சாரதாதேவி கோயில் மத்தியப்பிரதேசம் சத்னா மாவட்டத்தில் உள்ளது.
மைஹர் என்னும் இடத்தில் திரிகூட மலை மீது இக்கோயில் உள்ளதால் இதை மைஹர்தேவி, சரஸ்வதிதேவி கோயில் என அழைக்கிறார்கள். இவளை தரிசித்தால் படிப்பு, ஆடல், பாடல் என கலைகளில் சிறந்து விளங்கலாம்.
பார்வதியை குழந்தையாக பெற்ற தட்சன், அவளுக்கு தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்தான். அவளை சிவபெருமான் திருமணம் புரிந்தார். தட்சன் ஒருமுறை தேவர்களை அழைத்து யாகம் நடத்தினான். அதற்கு மருமகனான சிவனை அழைக்கவில்லை.
இதனால் தாட்சாயிணி கோபம் அடைந்து, தந்தையிடம் நியாயம் கேட்க அவளை அவமானப்படுத்தினான். அவள் யாகத்தீயில் உயிரை விட்டாள். கோபம் கொண்ட சிவனின் நெற்றியில் அரும்பிய வியர்வையில் இருந்து வீரபத்திரர் தோன்றி தட்சனை அழித்தார்.
மனைவியின் உடலைச் சுமந்தபடி சிவன் அலைந்தார். இதை தடுக்க எண்ணிய திருமால் சக்கராயுதத்தை ஏவி தாட்சாயிணியின் உடலைத் தகர்த்தார்.
அவளின் உடலிலுள்ள பாகங்கள் பூமியில் பல இடங்களில் சிதறின. அந்த தலங்களே சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன. இதில் தேவியின் மார்புப் பகுதி விழுந்த இடமே மைஹர் கோயில். மைஹர் என்னும் சொல்லுக்கு தாய்வீடு என்று பொருள்.
மலை உச்சிக்கு செல்ல 1063 படிகள் உள்ளன. சாலை வழியாகவும், ரோப்கார் மூலமும் செல்லலாம்.
சாரதாதேவி, நரசிம்மரை 502ம் ஆண்டில் நுாபுலதேவா என்னும் மன்னர் பிரதிஷ்டை செய்தார். கவுரிசங்கர், காலபைரவர், துர்கா, பிரம்மதேவி சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: சத்னா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 33 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, அஷ்டமி.
நேரம்: அதிகாலை 5:00 - 8:00 மணி; மாலை 6:00 - 10:00 மணி
தொடர்புக்கு: 78285 70775
அருகிலுள்ள கோயில்: உத்தரப்பிரதேசம் காசி விஸ்வநாதர் 308 கி.மீ., (பாவம் தீர...)
நேரம்: அதிகாலை 2:30 - இரவு 11:00 மணி
தொடர்புக்கு: 0542 - 239 2629