ADDED : பிப் 20, 2025 02:02 PM

திருமணம் எப்போது நடக்கும் என ஏங்குவோர் பலருண்டு. யாருக்கு மாப்பிள்ளை யாரோ... என ஏங்கும் இவர்கள் இனி கவலைப்படத் தேவையில்லை. செங்கல்பட்டு மாவட்டம் குழிப்பாந்தண்டலம் என்னும் ஊரிலுள்ள நித்ய கல்யாண ஈஸ்வரரை பிரதோஷத்தன்று தரிசியுங்கள்.
இங்கு கோயிலுக்குள் நுழையும் முன்பாக தேர் வடிவில் சன்னதி உள்ளது. அதில் மகாசரஸ்வதி, மகாசக்தி, மகாலட்சுமி என தேவியர்களை ஒரே இடத்தில் காணலாம். கோயிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. அதைக் கடந்தால் கிழக்கு நோக்கியபடி மங்களாம்பிகை இருக்கிறாள். குழந்தை பாக்கியத்தை வேண்டுவோர் அம்மனை வேண்டி தொட்டில் கட்டுகின்றனர்.
கருவறையில் நித்ய கல்யாண ஈஸ்வரர் என்னும் பெயரில் சிவன் இருக்கிறார். தொடர்ந்து மூன்று பிரதோஷம் வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் வீட்டில் கெட்டி மேளம் ஒலிக்கும்.
செல்வ விநாயகர், செல்வ முத்துக்குமார சுவாமி தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். தல விருட்சமாக வில்வமரம் உள்ளது. பவுர்ணமியன்று அன்னதானம் நடக்கிறது.
பார்ப்பதற்கு சிறிய கோயிலாக தெரியும். ஆனால் முன்பு பெரிய கோயிலாக இருந்ததற்கான சான்றாக கோபுரத்தின் மீதிருந்த பெரிய கல் ஒன்று கிடைத்துள்ளது. சனிப்பிரதோஷம், திங்கள், பவுர்ணமி, மகாசிவராத்திரி அன்று சிவனை தரிசனம் செய்தால் பாவம் தீரும்.
எப்படி செல்வது: செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் 22 கி.மீ.,
விசேஷ நாள்: பிரதோஷம், அமாவாசை, மகாசிவராத்திரி
நேரம்: காலை 8:00 - 10:00 மணி; மாலை 6:00 - 7:30 மணி
தொடர்புக்கு: 94443 50304
அருகிலுள்ள கோயில்: மாமல்லபுரம் ஸ்தலசயனப்பெருமாள் 10 கி.மீ.,(நிம்மதிக்கு...)
நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மதியம் 3:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 044 - 2744 3245