ADDED : செப் 29, 2025 10:33 AM

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் மலைகளுக்கு இடையில் உள்ளது புகழ் மிக்க ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில். இது பராசக்தியின் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சரஸ்வதி, மகாலட்சுமியை தரிசித்தால் மாமியார், மருமகள் ஒற்றுமை பலப்படும்.
தட்சனின் மகளான தாட்சாயிணியை மணம் செய்தார் சிவபெருமான். ஆணவம் மிக்க தட்சன் ஒருமுறை சிவபெருமானை அழைக்காமல், தேவர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்தினார். கோபம் கொண்ட தாட்சாயிணி நியாயம் கேட்க சென்றாள். ஆனால் மகள் என்றும் பார்க்காமல் தட்சன் அவமானப்படுத்தினான். இதனால் வருந்தியவள் யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்தாள். கோபம் கொண்ட சிவபெருமான் அந்த உடலை சுமந்தபடி நாடெங்கும் அலைந்தார். இதை தடுக்க திருமால் தன் சக்கராயுதத்தை வீச, அவளின் உடல் பாகங்கள் பல இடங்களில் சிதறின. அந்த தலங்களே 51 சக்தி பீடங்களாக உள்ளன. இதில் தாட்சாயிணியின் மணிக்கட்டு இங்கு விழுந்தது. இத்தலம் 27வது சக்தி பீடமாக உள்ளது.
கருவறையில் பார்வதியை அணைத்தபடி சிவபெருமான் இருக்கிறார். இவருக்கு இடப்புறம் காளியும், வலப்புறம் கவுரி விநாயகரும் உள்ளனர். இந்தச் சிலைகள் திரேதாயுகத்தைச் சேர்ந்தவை. சிவனை சிந்தித்தபடி பார்வதி இங்கு இருப்பதால் இத்தலம் 'பிரிய பீடம்' எனப்படுகிறது. தம்பதியர் இங்கு வழிபட்டால் ஒற்றுமையாக வாழ்வர்.
ஞானத்திற்கு அதிபதி சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி காளை வாகனத்தில் இங்குள்ளனர். காயத்ரி, மகாகாளியான சாமுண்டீஸ்வரியை வழிபட்டால் எதிரிபயம் விலகும். நந்தி பகவானே பைரவராக இங்குள்ளார்.
எப்படி செல்வது:
* புஷ்கர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 5 கி.மீ.,
* புஷ்கர் பிரம்மா கோயிலில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாள்: துர்காபூஜை, நவராத்திரி.
நேரம்: காலை 6:30 - மாலை 6:00 மணி
தொடர்புக்கு: 94602 14919
அருகிலுள்ள கோயில்: சாவித்திரி மாதா மந்திர் 4 கி.மீ., (கல்வியில் சிறக்க...)
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 9:00 மணி