
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பஸாராவில் சரஸ்வதி மூலவராக கோயில் கொண்டிருக்கிறாள். இக்கோயிலில் தரப்படும் பிரசாதமான மஞ்சளை நெற்றியில் பூசினாலும், சாப்பிட்டாலும் கல்வித்திறன் மேம்படும்.
மகரிஷி வியாசர் கோதாவரி நதிக்கரையிலுள்ள குமராஞ்சலா மலைப்பகுதியில் தவம் மேற்கொண்டார். அவருக்கு காட்சியளித்த சரஸ்வதி வரம் அளித்ததோடு, '' நான் எழுந்தருளிய இத்தலத்தில் மகாலட்சுமி, மகாகாளியுடன் என் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக'' எனக் கட்டளையிட்டாள். அதன்படி வியாசரும் பிரதிஷ்டை செய்ய இத்தலத்திற்கு 'வியாசபுரி' எனப் பெயர் வந்தது. காலப்போக்கில் 'வஸாரா' எனத் திரிந்து தற்போது 'பஸாரா' என்றானது.
மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் இருக்கும் இக்கோயிலுக்குள் நுழைந்ததும் சூர்யேஸ்வர சுவாமி என்னும் பெயரில் சிவன் சன்னதி உள்ளது. தினமும் இவர் மீது சூரியக்கதிர்கள் விழுவதால் இப்பெயர் ஏற்பட்டது. கருவறையில் ஞானசரஸ்வதி வீணை, அட்சர மாலை, ஏடு தாங்கிய கோலத்தில் இருக்கிறாள். இங்குள்ள மலையின் பெயரால் சரஸ்வதிக்கு 'குமாராஞ்சல நிவாசினி' என்றும் பெயருண்டு. அருகில் மகாலட்சுமி அமர்ந்த நிலையிலும், பிரகாரத்தில் மகாகாளியும் உள்ளனர். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து வெண்பட்டு உடுத்தி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.
புதன் அன்று காலை 6:00 - 7:00 மணிக்குள் தீபமேற்றி வழிபட கல்வி வளர்ச்சி ஏற்படும். ஞானசரஸ்வதியின் மீது பூசியுள்ள மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று மஞ்சள் காப்பில் காட்சி தரும் இந்த அம்மனுக்கு விசேஷ பூஜை நடக்கும். இக்கோயிலை ஒட்டிய குகையில் வியாசருக்கு சன்னதி உள்ளது.
எப்படி செல்வது
* ஐதராபாத்திலிருந்து 220 கி.மீ.,
* நிஜாமாபாத் நகரிலிருந்து 30 கி.மீ.,
விசேஷ நாள்: சரஸ்வதிபூஜை, விஜயதசமி.
நேரம்: அதிகாலை 4:00 -- 12:30 மணி; மாலை 3:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 94411 - 29737
அருகிலுள்ள கோயில் : நிர்மல் வெங்கடேஸ்வரா 70 கி.மீ., (கிரகதோஷம் விலக...)
நேரம்: காலை 7:00 -- 12:30 மணி; மாலை 4:30 - 9:00 மணி
தொடர்புக்கு: 74050 60867